புதன், 1 பிப்ரவரி, 2023

‘நிதி ஒதுக்கீடும்; புதிய அறிவிப்புகளும்’ - நிர்மலா சீதாராமன் வரவு செலவு திட்டம்!

 நக்கீரன் : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கிய நிலையில் இன்று 2023-2024 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு உரையாற்றிய நிர்மலா சீதாராமன் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு மற்றும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில், நாட்டில் 5 ஜி சேவை மேம்பாட்டிற்காக 100 ஆய்வகங்கள் அமைக்கப்படும். சிறு குறு நிறுவனங்களுக்கு தனி டிஜிலாக்கர் முறை உருவாக்கப்படும். 2070 ஆம் ஆண்டிற்குள் வாகன புகை வெளியேற்றத்தை பூஜ்ஜியமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பான் கார்டு இனி அரசுத்துறை கொள்கைகளில் முக்கிய ஆவணமாக பயன்படுத்தப்படும். மாசு ஏற்படுத்தும் பழைய வாகனங்களை அகற்றும் திட்டத்திற்கு மத்திய மாநில பங்களிப்போடு கூடுதல் நிதி.
அனைத்து மாநில பொருட்களும் கிடைக்கும் வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்பு வணிக வளாகம். அடுத்த 3 ஆண்டுகளில் 47 லட்சம் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி. சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க தனி செயலி உருவாக்கப்படும். 7.5 சதவீத வட்டியில் பெண்களுக்கு புதிய சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இறால் உணவு பொருட்களுக்கான இறக்குமதி வரியில் சலுகைகள் அளிக்கப்படும். அஞ்சலகத்தில் முதியோருக்கான வைப்பு நிதி வரம்பு ரூ. 15 லட்சத்திலிருந்து ரூ. 30 லட்சமாக உயர்வு. சிகரெட்களுக்கு கூடுதல் வரி. செல்போன், டிவி, கேமரா லென்ஸ் தயாரிப்பை ஊக்குவிக்கும் அதன் உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைப்பு. தங்கம், வெள்ளி, வைரத்திற்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்படும் உள்ளிட்ட பல அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

கருத்துகள் இல்லை: