வெள்ளி, 5 ஆகஸ்ட், 2022

சீனாவின் போரை எதிர்கொள்ளத் தயார் - தைவான் ராணுவம் பகிரங்க அறிவிப்பு

hindutamil.in  : தைபே: தைவான் எல்லைக்கு அருகே சீனா அதிநவீன ஏவுகணையை ஏவி போர் ஒத்திகையில் ஈடுபட்டது. இதையடுத்து, சீனா போர் தொடுத்தால், அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்று தைவான் ராணுவம் பகிரங்கமாக அறிவித்துள்ளது.
சீனாவில் கடந்த 1911-ம் ஆண்டில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, சீன தேசியக் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. 1927-ம் ஆண்டில் ஆளும் கட்சிக்கு எதிராக, சீன கம்யூனிஸ்ட் கட்சி போர்க்கொடி உயர்த்தியது. இதன்காரணமாக 1949-ம் ஆண்டு வரை சீனாவில் உள்நாட்டுப் போர் நீடித்தது. இந்தப் போரில் தோல்வியை தழுவிய சீன தேசியக் கட்சியினர், தென் சீன கடலில் 168 தீவுகள் அடங்கிய தைவானில் குடியேறினர். அந்தப் பகுதியை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.
சீனா போர் ஒத்திகை
இந்தப் பின்னணியில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, கடந்த 2, 3-ம் தேதிகளில் தைவானில் அரசு முறை பயணம் மேற்கொண்டார். அவரின் பயணத்தை ஆரம்பம் முதலே எதிர்த்த சீன அரசு, தற்போது தைவானை அச்சுறுத்தும் வகையில் ராணுவ நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

தைவான் எல்லையில் இருந்து 16 கி.மீ. தொலைவில் சீன ராணுவம் நேற்று பிரம்மாண்ட போர் ஒத்திகையை நடத்தியது. அதிநவீன பாலிஸ்டிக், ஹைபர்சானிக் வகைகளைச் சேர்ந்த 11 ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவியது. 7-ம் தேதி வரை தீவிர போர் ஒத்திகையை நடத்துவோம் என்று சீன ராணுவம் தெரிவித்துள்ளது. தைவானின் 6 எல்லைப் பகுதிகளையும் சீனாவின் முப்படைகளும் சுற்றி வளைத்துள்ளன. சீன போர்க் கப்பல்கள், போர் விமானங்கள் தயார் நிலையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. சீனாவின் போர் ஒத்திகையால் தைவானில் நேற்று 50 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

தைவான் ராணுவத்தின் மூத்த தலைவர் ஷி யீ நேற்று கூறும்போது, “நீண்ட தொலைவு பாயும் ஏவுகணைகள் மூலம் சீன ராணுவம் போர் ஒத்திகை நடத்தி வருகிறது. சீனாவின் ஒவ்வொரு நகர்வையும் மிகவும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். நாங்கள் போரை விரும்பவில்லை. ஆனால், சீனா போர் தொடுத்தால், அதை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம்” என்றார்.

சீனா, தைவான் இடையே போர் மூண்டால் மக்களுக்கு வழிகாட்ட அந்த நாட்டு அரசு புதிதாக செயலியை அறிமுகம் செய்துள்ளது. அந்த செயலியில் 5 ஆயிரம் பதுங்குமிடங்களின் வரைபடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சீனாவின் ட்ரோன்கள் தென்பட்டால் எவ்வாறு செயல் பட வேண்டும் என்பது குறித்த வழி காட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன.

தைவானுக்கு ஆதரவாக அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் ரொனால்டு ரீகன் போர்க் கப்பல் எல்லைப் பகுதியில் ரோந்து சுற்றி வருகிறது. தைவான் மீது சீனா போர் தொடுத்தால் அமெரிக்கா நேரடியாக போரில் களமிறங்கும் என்று மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜி7 வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட கூட்டறிக்கையில், “தைவான் வளைகுடா பகுதியில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் நீடிக்க வேண்டும். இப்போதைய நிலையில் எவ்வித மாற்றத்தையும் செய்யக்கூடாது. அமைதியை சீர்குலைக்கும் வகையில் சீன ராணுவம் நடத்தும் போர் ஒத்திகையை வன்மையாக கண்டிக்கிறோம். தேவையற்ற பதற்றத்தை உருவாக்க வேண்டாம். இதனால் மோசமான விளைவுகள் ஏற்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுபுறம், சீனாவுக்கு ஆதரவாக ரஷ்யாவும், வடகொரியாவும் குரல் எழுப்பி வருகின்றன. உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஓரணியில் திரண்டுள்ளன. தற்போது தைவான் விவகாரத்தால் 3-ம் உலகப்போருக்கான ஆபத்து அதிகரித்து வருகிறது.

சீனாவுக்கு பேரிழப்பு ஏற்படும்

சீனா, தைவான் இடையே போர் மூண்டால் சீனா பேரிழப்பை சந்திக்கும் என்று சர்வதேச பாதுகாப்புத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியிருப்பதாவது:

சீனாவுடன் ஒப்பிடும்போது தைவானின் படை பலம் குறைவாகவே உள்ளது. எனினும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் தைவானுக்கு ஆதரவாக களமிறங்கும் என்பதால் சீன ராணுவம் மிகப்பெரிய சவாலை சந்திக்க நேரிடும்.

தைவானில் 168 தீவுகள் அமைந்துள்ளன. சீன எல்லைக்கு அருகில் உள்ள தைவான் தீவுகளை மட்டுமே சீன கடற்படையால் எளிதில் நெருங்க முடியும். இதர தீவுகளை நெருங்குவதற்குள் சீன கடற்படை பேரிழப்பை சந்திக்க நேரிடும்.

தைவானில் 2.36 கோடி மக்கள் வசிக்கின்றனர். அந்த நாட்டு ராணுவத்தில் 25 லட்சம் பேர் உள்ளனர். பொதுமக்களில் 10 லட்சம் பேர் ராணுவ பயிற்சி பெற்று எப்போதும் போருக்கு தயார் நிலையில் உள்ளனர். இவர்கள் அனைவரும் கொரில்லா பயிற்சி பெற்ற வீரர்கள் ஆவர்.

ஏவுகணைகளை தடுத்து அழிக்கும் தடுப்பு சாதனங்கள் தைவானிடம் உள்ளன. அந்த நாட்டு விமானப்படையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போர் விமானங்களும், அமெரிக்க போர் விமானங்களும் இடம் பெற்றுள்ளன. எனவே போர் மூண்டால் சீனா வெற்றி பெறுவது கடினம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: