ஞாயிறு, 31 ஜூலை, 2022

பிரதமர் மோடி வீட்டை 5-ந்தேதி முற்றுகையிட்டு போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு

 மாலைமலர் : புதுடெல்லி: விலைவாசி உயர்வு, அத்தியாவசிய பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி விகிதம் ஆகியவற்றை கண்டித்து காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை முடக்கி வருகிறார்கள். இரு அவைகளும் முற்றிலும் செயல்படவில்லை.
இந்த நிலையில் விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. விவகாரம் தொடர்பாக பிரதமர் வீட்டு முன்பு வருகிற 5-ந்தேதி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
வேலையின்மை, விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி விகிதம் ஆகியவற்றுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் 5-ந்தேதி அன்று நாடு தழுவிய போராட்டத்தில் காங்கிரஸ் ஈடுபட உள்ளது.
பிரதமர் வீட்டு முன்பு நடைபெறும் முற்றுகை போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள். ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.



இதேபோல ஜனாதிபதி மாளிகை நோக்கியும் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஊர்வலம் செல்ல இருக்கிறார்கள். மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதில் எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கிறார்கள்.

இதுதொடர்பாக காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறும்போது, 'பிரதமர் வீட்டு முன்பு 5-ந்தேதி முற்றுகை போராட்டம் நடைபெறும். பாராளுமன்றத்தில் இருந்து ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணியாக செல்கிறார்கள். அனைத்து மாநில கவர்னர் மாளிகை முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.

இதில் அனைத்து எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், முன்னாள் எம்.பி.க்கள், சீனியர் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்' என்றார்.

கருத்துகள் இல்லை: