புதியதலைமுறை - karthick : மக்களவையில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கும் இடையே கடும் வார்த்தைப் போர் மூண்டது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குறித்து காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்காக ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் காங்கிரஸ் கட்சியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி பாஜக எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர்.
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசியதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நாடாளுமன்றக் கூட்டத்தில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கும் இடையே கடும் வார்த்தைப் போர் மூண்டது.
மக்களவையில் இதுகுறித்து பேசிய ஸ்மிருதி இரானி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் சோனியா காந்தியும் இந்தியாவின் தெருக்களிலும் நாடாளுமன்றத்திலும் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் சோனியா காந்தி ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் ஆவேசமாகப் பேசினார்.
இதனால், சோனியா காந்திக்கும், ஸ்மிருதி இரானிக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் நீடித்தது. மஹுவா மொய்த்ரா, சுப்ரியா சுலே உள்ளிட்ட எம்பிக்கள் இருவரையும் சமரசம் செய்ய முயன்றனர். ஒருகட்டத்தில் பொறுமையிழந்த சோனியா காந்தி ஸ்மிருதி இரானியிடம் ‘என்னுடன் பேச வேண்டாம்’ என்று கூறியதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
image
சோனியா காந்தியிடம் ஸ்மிருதி இரானி மற்றும் சில ஆண் பாஜக எம்பிக்கள் கடுமையாக நடந்து கொண்டதாக காங்கிரஸ் எம்பிக்கள் கீதா கோரா மற்றும் ஜோத்ஸ்னா மஹந்த் ஆகியோர் குற்றஞ்சாட்டினர். இதையடுத்து பாஜக எம்பிக்களின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த சோனியா காந்தி, ``குடியரசுத் தலைவரை அவமதித்தற்காக ஆதிர் ரஞ்சன் ஏற்கெனவே மன்னிப்பு கேட்டுவிட்டார்" என்று கூறினார்.
இதனிடையே, சோனியா காந்திக்கு எதிராக பாஜக பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறப்பு தீர்மனம் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக