தினகரன் : சென்னை: அண்ணா பல்கலைக் கழக 42வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. 3.68 லட்சம் பேர் பட்டம் பெற்றனர். அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் நடந்த விழாவில் 1813 பேர் நேரடியாக பட்டங்களை பெற்றனர். இடப்பிரச்னை காரணமாக பதக்கத்துடன் கூடிய பட்டம் பெறும் 69 பேர் மட்டுமே அரங்கில் உட்கார வைக்கப்பட்டனர்.
மற்ற மாணவர்கள் அனைவரும் அரங்கின் அருகில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியின் வகுப்பறைகளில் உட்கார வைக்கப்பட்டனர்.
அவர்கள் விழாவை காண பெரிய டிஜிட்டல் திரைகள் வைக்கப்பட்டு இருந்தன.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, 69 மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்.
பின்னர் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பட்டமளிப்பு விழாவின் உறுதி மொழியை படிக்க மற்ற மாணவ மாணவியர் உறுதி மொழியை படித்து தாங்கள் அமர்ந்திருந்த அறைகளில் இருந்தபடியே பட்டங்களை ஏற்றனர். இந்த பட்டமளிப்பு விழாவின்படி இளநிலை பட்டங்கள் 3 லட்சத்து 34 ஆயிரத்து 435, முதுநிலை பட்டங்கள் 31 ஆயிரத்து 944, முனைவர் பட்டங்கள் 1813 பேர் பெற்றனர்.
பட்டமளிப்பு விழா முடிந்ததும், விழா மேடையில் இருந்து இறங்கிச் சென்ற பிரதமர் மோடி, அருகில் பட்டதாரி மாணவ மாணவியர் அமர்ந்திருந்த வகுப்பறைகளுக்கு நேரடியாக சென்று அங்கு அவர்களுக்கு, தனது இரண்டு கைகளையும் உயரே தூக்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக