செவ்வாய், 26 ஜூலை, 2022

திமுக உட்பட 19 ராஜ்யசபா எம்பிக்கள் இடைநீக்கம்

zeenews.india.com - Shiva Murugesan  :     19 எம்.பி.க்கள் ராஜ்யசபாவில் இருந்து ஒருவாரம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்
 எதிர்க்கட்சிகளின் குரல்களை நசுக்க சஸ்பெண்ட் நடவடிக்கை -எதிர்க்கட்சிகள் போர்கொடி.
  4 எம்.பி.க்கள் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் அமர்வு முழுவதும் இடைநீக்கம்.
Parliament Monsoon Session: இன்றைய நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு இடையூறு விளைவிப்பதாகக் கூறி எதிர்க்கட்சிகளின் 19 எம்.பி.க்கள் ராஜ்யசபாவில் இருந்து ஒருவாரம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் சுஷ்மிதா தேவ், மௌசம் நூர், டாக்டர் சாந்தனு சென், டோலா சென், சாந்தனு சென், நதிமல் ஹக், அபி ரஞ்சன் பிஸ்வாஸ் மற்றும் சாந்தா சேத்ரி ஆகியோர் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிபிஐ-எம்-ஐச் சேர்ந்த ஏ.ஏ.ரஹீம், இடதுசாரிகளைச் சேர்ந்த முகமது அப்துல்லா மற்றும் திமுகவை சேர்ந்த என்.ஆர்.இளங்கோ, அப்துல்லா, சண்முகம், கிரிராஜன், கனிமொழி ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளியேறாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தியதால் இன்று ஒரு மணி நேரம் சபை ஒத்திவைக்கப்பட்டது. 19 ராஜ்யசபா எம்.பி.க்களுக்கு எதிரான நடவடிக்கை, மத்தியில் ஆளும் பாஜக அரசின் பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகளை கேள்விக்குட்படுத்தும் குரல்களை நசுக்க தான் இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாற்றியுள்ளனர்.

நேற்று மக்களவையில் பணவீக்கம் குறித்து விவாதிக்கக் கோரி பதாகைகளை ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பிய 4 காங்கிரஸ் எம்பிக்களை சபாநாயகர் ஓம் பிர்லா சஸ்பெண்ட் செய்தார். காங்கிரஸ் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், டிஎன் பிரதாபன் ஆகியோர் ஆகஸ்ட் 12-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் அமர்வு முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இது குறித்து காங்கிரஸ் எம்பி மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடி ஜனநாயகத்தை அழிக்க நினைக்கிறார் என்று அரசை கடுமையாக சாடினார். பணவீக்கம் குறித்து மக்களவையில் விவாதிக்க காங்கிரஸ் விரும்புகிறது என்றார். அதேநேரம், ஜனாதிபதியின் பதவிப் பிரமாண நிகழ்ச்சியில் நெறிமுறைப்படி எங்களுக்கு இடம் வழங்கப்படவில்லை என்றும் அவர் மத்திய அரசாங்கத்தை சாடினார். பாஜக மாநில முதல்வர்களுக்கு முன் வரிசையில் இருக்கைகள் போடப்பட்டது என்றும், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு சரியான இடத்தில் இருக்கை போடவில்லை என்றும் கார்கே குற்றம்சாட்டினார்.
Image

கருத்துகள் இல்லை: