வெள்ளி, 19 நவம்பர், 2021

திருப்பதியில் வெள்ளக்காடு ..ஆந்திரா நெடுஞ்சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்

 கலைஞர் செய்திகள் : திருப்பதியில் வெள்ளக்காடு ..ஆந்திராவில் பெருக்கெடுத்த வெள்ளம்.. நெடுஞ்சாலை ஓரத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நபர்!
ஆந்திராவில் பெய்த பலத்த மழையால் தாழ்வான இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், சாலையோரம் வெள்ள நீரில் ஒருவர் அடித்துச் செல்லப்படும் காட்சி வைரலாகி வருகிறது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கம், வட தமிழகம், தெற்கு ஆந்திரா, ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திரப் பகுதிகளில் அதிகம் காணப்பட்டது.
இதனால் கடந்த சில நாட்களாகவே இப்பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தமிழக எல்லையை ஒட்டியுள்ள சித்தூர், நெல்லூர் மாவட்டங்களில் காளஹஸ்தி, திருப்பதி, தடா, சூளூர்பேட்டை, ஸ்ரீஹரிகோட்டா போன்ற பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பின.


தெற்கு ஆந்திரா, ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திரப் பகுதிகளில் மழை காரணமாக தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் சாலைகள் சேதம் அடைந்துள்ளன.
திருப்பதியில் உள்ள ஏர் பை பாஸ் ரோடு, யுனிவர்சிட்டி ரோடு ஆகிய பகுதிகள் உட்பட அனைத்து சாலைகளிலும் வெள்ளம் ஆறுபோல் ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது
தொடர் மழை காரணமாக மலைப்பாதையில் பாறை சரிவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதால் திருப்பதி - திருமலை இடையேயான சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, மலைப்பகுதியை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்தும் செல்லும் வெள்ளத்தில் ஒருவர் அடித்துச் செல்லப்படும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

வாகனத்தில் செல்லும் ஒருவர் இந்தக் காட்சியை தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: