புதன், 17 நவம்பர், 2021

திருப்புவனம்! மதமாற்றத்தை தடுத்த ராமலிங்கம் கொலை- தலைமறைவான 5 பேர்- தகவல் தந்தால் ரூ5 லட்சம் சன்மானம்- என்.ஐ.ஏ.

 Mathivanan Maran  -   Oneindia Tamil :   சென்னை: மதமாற்றத்தைத் தட்டிக் கேட்டதால் திருப்புவனம் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் வழக்கில் தலைமறைவாக இருக்கும் 5 பேர் குறித்து தகவல் தந்தால் ரூ5 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
2 ஆண்டுகளுக்கு முன்னர் இதே தலைமறைவு நபர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ1 லட்சம் பரிசு வழங்கப்படும் என என்.ஐ.ஏ. தெரிவித்திருந்தது.
கும்பகோணம் அருகே திருபுவனம் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் பாமகவின் உறுப்பினராக இருந்தவர்.
திருபுவனம் கடை வீதியில் தமிழன் கேட்டரிங்க் சர்வீஸ் என்ற பெயரில் சமையல் ஒப்பந்ததாரராகவும் சமையல் பொருட்களை வாடகைக்கு கொடுப்பவராகவும் தொழில் நடத்தி வந்தார்.
கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர் மதமாற்ற பிரசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனை ராமலிங்கம் தட்டிக் கேட்டதால் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அடுத்த சில நாட்களில் ராமலிங்கத்தின் கை துண்டிக்கப்பட்ட நிலையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு இந்த சம்பவம் தமிழகம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 12 பேரை கைது செய்தனர். பின்னர் மதமாற்றம் தொடர்பான விவகாரம் என்பதால் இந்த வழக்கானது தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏவுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

 அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான முகமது அலி ஜின்னா, அப்துல் மஜித், புர்ஹானுதீன், சாகுல் ஹமீது, நஃபீல் ஹாசன் ஆகிய 5 பேரை தேடி வந்தனர்.
மேலும் இந்த 5 பேரையும் தேடப்படும் குற்றவாளிகளாகவும் 2019-ல் அறிவித்து இவர்கள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கில் கடந்த 2 ஆண்டுகளாக 5 பேரையும் என்ஐஏ அதிகாரிகள் தேடியும் துப்பு எதுவும் கிடைக்கவில்லை. இதனையடுத்து தலைமறைவாக உள்ள இந்த 5 பேர் குறித்த தகவல் தெரிவிப்பவர்களுக்கு நபர் ஒருவருக்கு தலா ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று என்ஐஏ அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதாவது 2-வது முறையாக தலைமறைவான 5 பேர் குறித்த அறிவிப்பை என்.ஐ.ஏ. வெளியிட்டுள்ளது

கருத்துகள் இல்லை: