சனி, 26 செப்டம்பர், 2020

அனைத்திலும் ஊடுருவிய RSS ! வித்யா பாரதி. சரஸ்வதி வித்யாமந்திர் உட்பட 13000 கல்வி நிறுவனங்கள். 75000 ஆசிரியர்கள், 17 லட்சம் மாணவர்கள்..

V
ijayasankar Ramachandran :
அனைத்திலும் ஊடுருவி நிற்கும் ஆர்.எஸ்.எஸ். (ஏ.ஜி. நூரானியின் புத்தகத்திலிருந்து) "சங்க பரிவாரம் என்கிற ஆர்.எஸ்.எஸ். குடும்பத்தின் அங்கங்கள் குறித்து மிகத் துல்லியமாகப் பதிவு செய்திருக்கும் பத்திரிக்கையாளர் பாரத் பூஷன் நம் பாராட்டுக்குரியவர். அவருடைய பதிவு: “ஆர்.எஸ்.எஸ். மட்டும்தான் நாட்டின் சமூக, அரசியல் வாழ்க்கையின் ஓவ்வொரு நடவடிக்கைக்குள்ளும் சென்று தொடர்ந்து நுண் அரசியல் செய்யும் ஒரே அமைப்பு. அரசு சாராத கல்வித் துறையில் செயல்பட்டு வரும் மிகப் பெரிய அமைப்புதான் வித்யா பாரதி. சரஸ்வதி வித்யா மந்திர் உட்பட 13000 கல்வி நிறுவனங்களை நடத்தும் அதன் கீழ் 75000 ஆசிரியர்களும், 17 லட்சம் மாணவர்களும் இருக்கின்றனர்.
ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் தலைமையிலான நிறுவனங்கள் பின்வரும் மக்கள் பிரிவினர் மற்றும் துறைகளில் செயல்பட்டு வருகின்றன: பழங்குடியினர் (வன்வாசி கல்யாண் ஆஷ்ரம்), இலக்கியம் (அகில் பாரதீய சாஹித்ய பரிஷத்), அறிவுஜீவிகள் (ப்ரக்யா பாரதி, தீன்தயாள் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்), வரலாற்றியலாளர்கள் (பாரதீய இதிஹாஸ் சங்காலன் யோஜனா), ஆசிரியர்கள் (பாரதீய ஷிக்‌ஷன் மண்டல் மற்றும் அகில் பாரதீய ராஷ்ட்ரீய ஷைக்‌ஷிக் மஹாசங்க்), மொழி (சான்ஸ்க்ரிட் பாரதி), கலாச்சாரம் (சன்ஸ்கார் பாரதி), குடிசைப் பகுதி வாசிகள் (சேவா பாரதி, ஹிந்து சேவா ப்ரதிஷ்தான், ஸ்வாமி விவேகானந் மெடிக்கல் மிஷன், நேஷனல் மெடிக்கோஸ் ஆர்கனைசேஷன்), குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் (பாரதீய குஷ்ட நிவாரக் சங்), நுகர்வோர் (அகில் பாரதீய கிரஹக் பஞ்சாயத்), பத்திரிக்கை மற்றும் பிற பிரச்சார விஷயங்கள் பிரசுரிப்பது (பாரத் பிரகாஷன், சுருச்சி பிரகாஷன், லோக்ஹிட் பிரகாஷன், க்யான்கங்கா பிரகாஷன், அர்ச்சனா பிரகாஷன், பாரதீய விச்சார் சாதனா, மாதவ் பிரகாஷன், ராஷ்டிரோத்தன் சாஹித்யா, சாதனா புஸ்தக் பிரகாஷன், ஆகாஷ்வானி பிரகாஷன்), விஞ்ஞானிகள் (விக்யான் பாரதி), சாதிய இணைப்பு (சமாஜிக், சம்ராஸ்ட மன்ச்), மதம் மற்றும் மதமாற்றம் (விவேகானந்தா கேந்திரா, விஷ்வ ஹிந்து பரிஷத், ஹிந்து ஜாகரன் மன்ச், பஜ்ரங் தள்), தொழிலதிபர்கள் (பாரத் விகாஷ் பரிஷத்), வழக்கறிஞர்கள் (அகில் பாரதீய அதிவக்தா பரிஷத்), சீக்கியர்கள் (ராஷ்டிரீய சிக் சங்கத்), முன்னாள் ராணுவ வீரர்கள் (பூர்வ சைனிக் சேவா பரிஷத்), சிறு தொழிலதிபர்கள் (லகு உத்யோக் பாரதி), என்.ஆர்.ஐ என்றழைக்கப் படும் அயல்வாழ் இந்தியர்கள் (பாரதீய ஸ்வயம்சேவக் சங், ஹிந்து ஸ்வயம்சேவக் சங், ஹிந்து சேவா சங், சனாதன தர்ம ஸ்வயம்சேவக் சங், ஃபிரண்ட்ஸ் ஆஃப் இந்தியன் சொசைட்டி - இண்டர்நேஷனல்) - இந்தப் பட்டியல் முடிவில்லாதது என்று சொல்லலாம்.
“ஆர்.எஸ்.எஸ்-சின் அரசியல் முன்னணி (பிஜேபி), தொழிற்சங்கப் பிரிவு (பாரதீய மஸ்தூர் சங்), மகளின் அணி (ராஷ்டிரீய சேவிகா சமிதி), மாணவர் அணி (அகில் பாரதீய வித்யார்த்தி பரிஷத்), மற்றும் பொருளாதாரப் பிரிவு (ஸ்வதேஷி ஜாகரன் மன்ச்) ஆகியவற்றைத் தவிர நாட்டில் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் ஆர்.எஸ்.எஸ்சைப் பொறுத்த வரையில் அரசியல் என்பது யார் அதிகாரத்திற்கு வருவது, எவ்வளவு பலன்களைப் பகிர்ந்தளிப்பது என்பது மட்டுமல்ல. அதனால்தான், மக்களின் சிந்தனைகளையும் இதயங்களையும் வெல்வதற்கான போராட்டம் தேர்தல் களத்தில் மட்டும் நடத்தப் படுவதல்ல என்றும் சமூக நடவடிக்கைகளின் அனைத்துத் துறைகளிலும் நடக்க வேண்டும் என்று அது நம்புகிறது."
தமிழில்: ஆர். விஜயசங்கர்.

கருத்துகள் இல்லை: