செவ்வாய், 22 செப்டம்பர், 2020

மக்களவையில் வெடித்த தயாநிதி.. பிரதமர் 8 மணிக்கு பேசும்போதெல்லாம்:

minnambalam: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கொரோனா தடுப்பு நடைமுறைகளுடன் கடந்த 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாள்தோறும் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் நேற்று முன் தினம் உரையாற்றிய மத்திய சென்னை திமுக எம்.பி தயாநிதி மாறன், கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுப்பதில் மத்திய அரசு அலட்சியம் காட்டியதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

தயாநிதி மாறன் தனது பேச்சை தொடங்குகையில், ‘இடிப்பார் இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்’ என்ற திருக்குறளை சுட்டிக்காட்டி, “நல்ல ஆலோசனையும், அறிவுரையும் கூறுபவர்கள் பக்கத்தில் இல்லாத மன்னன், கெடுதல் செய்ய யாரும் இல்லாவிட்டாலும் கூட தோற்றுப் போவான். அதுபோல, அமைச்சரவையில் இருப்பவர்கள் பிரதமர் தவறு செய்யும் போது அதை தைரியமாக சுட்டிக் காட்ட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

தொடர்ந்து, “கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி இந்தியாவில் முதல் கொரோனா பாதிப்பு கேரளாவில் பதிவாகியது. அப்போதே மத்திய அரசு விழித்தெழுந்து நாட்டின் எல்லைகளை மூடி கண்காணித்திருக்க வேண்டும், பரிசோதனைகள் செய்திருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு என்ன செய்தது. நமஸ்தே ட்ரம்ப் எனக் கூறி அமெரிக்க அதிபர் ட்ரம்பை வரவேற்றது. அவருடன் பிரதமர் மோடி புகைப்படமும், வீடியோவும் எடுத்துக்கொண்டார். குஜராத்தில் பிரமாண்டமாக மக்களைத் திரட்டி நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி நடத்தியதன் மூலம் கொரோனா பரவ மத்திய அரசு வழிவகுத்தது” என்று குற்றம்சாட்டிய தயாநிதி,

“கொரோனா பரவத் தொடங்கியபோதே நாடாளுமன்றக் கூட்டத் தொடரை ரத்துசெய்திருக்க வேண்டும். ஆனால், நடந்தது என்ன? மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் இருந்தீர்கள். மார்ச் 17ஆம் தேதி மாஸ்க்குடன் மாநிலங்களவைக்கு நுழைந்த எம்.பி.க்களை, வெளியே சென்று மாஸ்க்கை கழட்டிவிட்டு உள்ளே வாருங்கள் என்று உத்தரவிட்டார் மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய்ய நாயுடு. இதுதான் மத்திய அரசினுடைய அணுகுமுறையாக இருந்தது. மார்ச் 19ஆம் தேதி கொரோனா பற்றி பேச முற்பட்டபோது, எனக்கு வாய்ப்பு வழங்காமல் அமரச் சொன்னார் சபாநாயகர். இதுபோன்ற அலட்சிய நடவடிக்கைகளால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டது” என்று விவரித்தார்.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது அதற்கு தயாராவதற்காக மக்களுக்கு வழங்கப்பட்ட அவகாசம் என்பது வெறும் 4 மணி நேரம் மட்டும்தான் என்று சாடிய அவர், “எனக்குத் தெரியவில்லை, பிரதமர் நரேந்திர மோடி எப்போதெல்லாம் 8 மணிக்கு உரையாற்றுகிறாரோ அப்போதெல்லாம் வெறும் கெட்ட செய்திகளாகவே வருகிறது. 2016ஆம் ஆண்டு பணமதிப்பழிப்பை கொண்டுவந்தார். அதன்பிறகு நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்தார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டிய முக்கியமான நேரத்தில் மீண்டும் 8 மணிக்குத் தோன்றி பால்கனிகளில் நின்று மக்களை கைதட்டவும், விளக்கு ஏற்றவும் சொன்னார்.

சங்கிகள் என்ன செய்தார்கள் தெரியுமா? சாலைகளில் கூட்டமாகச் சென்று கைதட்டி, விளக்கு ஏற்றி கொரோனாவைப் பரப்பினர். அமைச்சர்களில் ஒருவரே ‘கோ கொரோனா’ என்று கூறி கொரோனா விரட்ட முயன்றார். இதுதான் அறிவியல்பூர்வமாக கொரோனாவைக் கட்டுப்படுத்துவதா? பிரதமர் மோடி மின்விளக்கை அணைக்கச் சொன்னார். ஆனால், ஒரு பிரிவினர் சாலைகளில் வெடிவெடித்தனர்” என்று விமர்சித்தார்.

மேலும், “ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு மரியாதை செலுத்த மலர்களை தூவச் சொன்னார். இதற்காக டாக்டர்கள் காத்திருக்க வைக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவர்களுக்கு சிகிச்சை அளித்திருந்தால் கூட உபயோகமாக இருந்திருக்கும்.

ஊரடங்கை பயன்படுத்தி நமது மருத்துவ உட்கட்டமைப்பை வலுப்படுத்தி இருக்கலாம். கொரோனாவைக் கட்டுப்படுத்த கிடைத்த பொன்னான வாய்ப்புகளை தவறவிட்டனர். ஊரடங்கு அறிவித்த அதே வேகத்தில் அனைத்தையும் திறந்துவிட்டுவிட்டார்கள். அரசு பணம் கொடுத்தது என ஆளுங்கட்சியினர் சொல்வது மிகப்பெரிய பொய்.

பொருளாதாரத்தை மீட்க நிதியமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். ஆனால், வங்கிகள் அவர் சொன்ன எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. ஊரடங்கால் நடுத்தர வர்க்கத்தினர், தினக் கூலிகள் 6 மாதங்களுக்கு தங்களது வருமானத்தை இழந்தனர். ஊரடங்கை முழுமையாக தளர்த்திவிட்டதால், மக்கள் வழக்கமான பணிகளுக்குத் திரும்பிவிட்டனர். அதனால், கொரோனா ஒழிந்துவிட்டதாக நினைக்காதீர்கள். மக்கள் இன்னும் கொரோனா பீதியில்தான் வாழ்ந்து வருகிறார்கள்” என்று கூறி உரையை நிறைவு செய்தார் தயாநிதி.

எழில்

கருத்துகள் இல்லை: