சரஸ்வதி நதியை தேடிய தருணத்தில் |
கடந்த செப்டெம்பர் 14-ம் தேதி மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் பிரகலாத் படேல், நாடாளுமன்றத்தில் “இந்தியக் கலாச்சார” தோற்றுவாய் பற்றி 12,000 ஆண்டுகள் வரை பின்னோக்கிச் சென்று ஆய்வு செய்ய இருப்பதாகவும், அதற்கென தனியாக ஒரு நிபுணர் குழு அமைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
அந்த நிபுணர் குழுவில் இடம் பெற்றிருப்பவர்களின் பெயர்களும் வெளியிடப்பட்டன. அதில் தமிழர்கள் உள்ளிட்ட தென்னிந்தியர்களோ, வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களோ இல்லை என்றும் முழுக்க முழுக்க வட இந்தியாவைச் சேர்ந்த ‘சாஷ்திரிகள்’தான் இருக்கிறார்கள் என்றும் பலரும் குறைபட்டிருக்கிறார்கள்.
அந்தக் குறைகளின் பின்னணியைப் பார்ப்பதற்கு முன்னர், மத்திய அரசின் கலாச்சார ஆய்வு குறித்த அறிவிப்பிலேயே சில கேள்விகள் எழுகின்றன. முதலாவதாக, ‘இந்தியக் கலாச்சாரம்’ குறித்து ஆய்வு செய்யப்போவதாகக் கூறப்படுகிறது.
இந்தியா என்ற வரையறையுடன் கூடிய ஒரு நிலப்பரப்பு ஒரே நாடாக குறிப்பிடப்படுவது கடந்த 200- 300 ஆண்டுகளுக்குள்ளாகத் தான். அதற்கு முன்னர், அது தனித்தனி ராஜ்ஜியங்களாகவே அறியப்பட்டது. இன்றும்கூட அது பல்வேறு இன, மொழி மற்றும் கலாச்சாரங்களைக் கொண்ட கூட்டமைப்பாகவே இருக்கிறது. இதில் எதை “இந்தியக் கலாச்சாரமாக” எடுத்துக் கொண்டு ஆராயப் போகிறது இந்திய அரசு ?
அடுத்ததாக 12,000 ஆண்டுகளுக்குப் பின்னோக்கிச் சென்று இந்தியக் கலாச்சாரத்தை ஆராய இருப்பதகாவும் தெரிவிக்கிறது அமைச்சரின் அறிவிப்பு. உலகளவில் மிகவும் பழமை வாய்ந்ததாக தொல்லியல் மற்றும் மானுடவியல் நிபுணர்களால் அங்கீகரிக்கப்பட்ட நாகரீகங்களே அதிகபட்சமாக 5500 ஆண்டுகளுக்குள் இருந்தவையே. ஆனால் ‘இந்தியா’ என்றழைக்கப்படும் நிலப்பகுதியில், 12000 ஆண்டுகளுக்கு முன்னர் – அதாவது நாகரீகங்கள் தோன்றுவதற்கும் முன்னர் – ‘ஒரு’ கலாச்சாரமோ அல்லது அதற்கான தோற்றுவாயோ இருந்ததாகவும், அதைக் கண்டறியத் தான் ஆய்வுக் குழு போட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறது மத்திய அரசு.
12,000 ஆண்டுகளுக்கு முந்தைய நாகரீகங்கள் குறித்த எந்த ஒரு ஆதாரமும் இல்லாத சூழலில், பிரிட்டிஷாரால் ‘இந்தியா’ என அடையாளப்படுத்தப்பட்ட ஒரு நிலப்பரப்பில் ‘ஒற்றை’ நாகரீகத்தைத் தேடி ஆய்வு செய்யும் திறமை சங்க பரிவாரக் கும்பலுக்கு மட்டும்தான் உண்டு.
மோடி அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்ததும், இல்லாத சரசுவதி நதியைக் கண்டுபிடிக்க மத்திய அரசு மற்றும் ராஜஸ்தான், அரியானா அரசுகள் நூற்றுக் கணக்கான கோடிகளை செலவழித்தன. கடந்த 2015-ம் ஆண்டு மத்திய மோடி அரசிடம் இருந்து பத்மபூஷன் விருதுபெற்ற கே.எஸ். வால்தியா, 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சரஸ்வதி இருந்ததற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும், அந்த நதி சுமார் 4000 கிலோமீட்டர் தூரத்திற்குப் பாய்ந்ததாகவும், அதில் 1000 கிலோமீட்டர் பாகிஸ்தானில் இருந்ததாகவும் 3000 கிமீட்டர் இந்தியாவில் பாய்ந்ததாகவும் குறிப்பிட்டார். “இது யாராலும் மறுக்க முடியாதது” என அப்போதைய நீர்வளத்துறை அமைச்சரும் ‘பாபர் மசூதி இடிப்பில்’ இழிபுகழ் பெற்றவருமான உமா பாரதி தெரிவித்தார். இந்தக் கட்டுக்கதைகளை அறிவியல்பூர்வமாக பல ஆராய்ச்சியாளர்கள்
சரசுவதி நதி எனும் வேத கால புராணப் புளுகு, எப்படி வால்தியா கமிட்டியால் வரலாறாக மாற்றப்பட்டதோ, அதே போலத்தான் புராணப் புளுகுகளை 12,000 ஆண்டுகளுக்கு முந்தைய கலாச்சாரமாக, வரலாறாக இந்திய அரசு அமைத்திருக்கும் இந்த ஆய்வுக் குழுவால் மாற்றப்படும் வாய்ப்பு இருக்கிறது.
சிந்து சமவெளி நாகரீகத்திற்கு முந்தைய நாகரீகமான கீழடி நாகரிகத்தை தொல்லியல் ஆதாரத்துடன் கீழடி அகழ்வாய்வு மையம் நிரூபித்த பின்னரும் ஆய்வை தொடர்ந்து மேற்கொள்ளாமல் தள்ளி வைத்த பாஜக அரசுக்கு உண்மையான இந்திய வரலாற்றைத் தேடும் ஆர்வம் இருப்பதாக நம்பமுடியுமா ?
சங்கிகள் நிறுவ விரும்பும் ‘வரலாற்றிற்கு’ தொல்பொருள் ஆய்வுகளும் ஆதாரங்களும் அவசியம் இல்லை. பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். சங்க பரிவாரக் கும்பல் நிறுவ விரும்பும் ‘வரலாறு’ என்பது ‘இந்து – சமஸ்கிருதம் – இந்தியா’ என்பதுதான். தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்தாலும் இதற்கு ஆதாரம் கிடைக்கப் போவது இல்லை. அதனால்தான் தக்கான பீடபூமியைத் தாண்டி யாரும் அந்த ஆய்வுக் குழுவில் இணைக்கப்பட வில்லை.
ஒருவேளை எடப்பாடி கேட்டுக் கொண்டதற்கிணங்க மோடி அரசு, ஒரு தமிழரையேனும் அந்த ஆய்வுக் குழுவில் இணைத்துக் கொள்ளுமானால், “திருக்குறள் என்பது சாஸ்திரங்களிலிருந்து எடுத்தியம்பப்பட்ட நூல்” என்று ‘ஆய்வு’ அறிக்கை அளித்த ‘பத்மபூஷன்’ நாகசாமி போன்றவர்களைத் தான் நியமிக்கும் !
ஆகவே, இந்த ஆய்வுக் குழு பிற்காலத்தில் சமர்ப்பிக்கவிருக்கும் இறுதி ஆய்வறிக்கையின் சாராம்சத்தை முன் கூட்டியே படிக்க விரும்புபவர்கள் புராணப் புளுகுகளையும் – “ஒரே நாடு – ஒரே மொழி – ஒரே கலாச்சாரம் – அது இந்துக் கலாச்சாரம்” என்ற முழக்கத்தையும் திரும்பத் திரும்ப படித்துப் பார்த்துக் கொள்ளலாம் !
அதிசயிக்காதீர்கள் ! காவி பாசிச ஆட்சியில், “இனி எல்லாமே இப்படித்தான்”.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக