செவ்வாய், 22 செப்டம்பர், 2020

பா.ஜ.கவின் வேளாண் சட்டத்திருத்த மசோதா ஆபத்தான பல... .. அவற்றில் சில

Ganesh Babu : · பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள இந்த வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களை பாரதிய கிஸான் சங் போன்ற ஆர்.எஸ்.எஸ் விவசாய அமைப்புகள் எதிர்க்கின்றன. 'ஆர்.எஸ்.எஸ் விவசாய அமைப்புகள் எதிர்க்கின்றன' என்பது வெறும் செய்தித் தலைப்புதான். அவர்கள் எப்படி எதிர்க்கிறார்கள் என்பதை உற்றுநோக்கினால் நம்மைச் சுற்றி நடக்கும் அரசியல் சூழ்ச்சிகள் பற்றிய தெளிவு கிடைக்கும்.
"இம்மசோதாக்களில் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான உத்தரவாதம் இல்லை" என்பதைத்தான் பாரதிய கிஸான் சங் அமைப்பு தங்களின் எதிர்ப்புக்கான அடிப்படை காரணமாகச் சொல்கிறார்கள்.
அவர்களின் இந்த எதிர்ப்பை சந்தேகப்பட அவர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு என்கிற ஒரு காரணமே நமக்கு போதும். ஆனால் "நல்ல விசயத்தை யார் பேசினாலும் ஆதரிக்கவேண்டும்" என்று நம் நடுநிலையாளர்கள் அட்வைஸ் செய்வார்கள் இல்லையா?
அதற்குதான் இந்த விளக்கத்தை எழுதுகிறேன்..
விவசாயிகள் இந்த வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களை எதிர்ப்பதற்கான பல காரணங்களுள் ஒன்றுதான் 'இது குறைந்தபட்ச ஆதார விலைக்கு எதிரானது' என்பது. விவசாயிகளை அச்சுறுத்தும் இதைவிட ஆபத்தான பல அம்சங்கள் இதில் உள்ளன. அவற்றில் சில:
1. மாநிலப் பட்டியலில் உள்ள வேளாண்மையில் மத்திய அரசு தலையிடுவது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.
2. இதுவரை அத்தியாவசிய சட்டத்தில் பாதுகாப்பு கொடுக்கப்பட்ட பொருட்களை விவசாயிகளைத் தவிர யாரும் இருப்பு வைக்கமுடியாது. ஆனால் புதிய சட்டத்திருத்தத்தின்படி பணம் வைத்திருக்கும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் எந்தப் பொருளை வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் இருப்பு வைக்கமுடியும்.
3. எதிர்காலத்தில் விவசாயப் பொருட்களின் விலை, வியாபாரம் என்று அனைத்தும் கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கான சூழ்ச்சி.
4. ஆன்லைன் வர்த்தகம் செய்யும் விவசாயிகள் கட்டாயம் 'பான் கார்டு' வைத்திருக்கும் என்ற‌‌ விதிமுறை வருமானவரி வரம்புக்குள் விவசாயத்தைக் கொண்டு வருவதற்கான சதியாகும்.
5. 'ஒரே தேசம், ஒரே சந்தை' என்பது நடைமுறையில் நாடு முழுவதும் உள்ள சிறு குறு விவசாயிகளுக்கு எதிரானது. தமிழகத்தில் உள்ள வேளாண் விற்பனைக் கூடங்களுக்கும், உழவர் சந்தைகளுக்கும் எதிரானது.
இப்போது பாரதிய கிஸான் சங் அமைப்பின் எதிர்ப்புக்கு வருவோம்.
மேற்சொன்ன இத்தனை மோசடிகளை எதிர்க்காமல், 'குறைந்தபட்ச ஆதார விலை' என்ற ஒரேயொரு காரணத்தைச் சொல்லி அவர்கள் தீவிரமாக எதிர்ப்பதற்கு என்ன நோக்கம்?
1. இந்த விசயத்தில் உள்ளார்ந்த அக்கறையோடு போராடும் எதிர்கட்சிகளின் குரலை நீர்த்துப்போகச் செய்வது.
2. ஒருசில நாட்களில் "குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என்று வாக்குறுதி அளித்த பிரதமருக்கு நன்றி" என்று அறிக்கை விடுவதன் மூலம் விவசாயிகள் மத்தியில் பா.ஜ.கவுக்கு எதிரான கோபத்தைக் குறைப்பது. (அந்த வாக்குறுதியும் காற்றில் பறக்கும் என்பது வேறு செய்தி)
நிற்க.
இப்போது நீட் விசயத்திலும் இதுதான் நடக்கிறது. 
தி.மு.க தலைமையிலான எதிர்கட்சிகள் எல்லாம் "நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது. பார்ப்பனரல்லாத மாணவர்களின் கல்வி உரிமைக்கு எதிரானது. தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்புக்கு விரோதமானது" என்று முழு மூச்சாக எதிர்த்துவரும் நிலையில், 
சிலர் இதை அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பிரச்சனையாக சுருக்குவது, மாநில பாடத்திட்டத்திலிருந்து கேள்வி கேளுங்கள் என்பது, '7.5% இட-ஒதுக்கீடு தந்த எடப்பாடியாருக்கு நன்றி' என்று சொல்வது அனைத்தும் நீட் எதிர்ப்பு போராட்டத்தை நீர்த்துப்போக வைப்பதற்கான சூழ்ச்சிதான்.
 
நீட் விடயத்தில் சூர்யா போன்றவர்கள் செய்வதற்கும், வேளாண் மசோதா விடயத்தில் பாரதிய கிஸான் சங் அமைப்பு செய்வதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்ற எளிய உண்மைக் கூடவா நம்மவர்களுக்கு புரியவில்லை

கருத்துகள் இல்லை: