டிடிவி தினகரன் செப்டம்பர் 20 ஆம் தேதி ஒரு நாள் பயணமாக டெல்லி சென்றாலும், இதற்காக அவர் கடந்த நான்கைந்து மாதங்களாக தீவிரமான முயற்சியெடுத்து வந்தார். பாஜகவின் உயர் மட்டத் தலைவர்களுடன் தொடர்பெடுத்து பேசுவதற்காக ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தில் தீவிரமாக இருக்கும் சீனியர் ஒருவர் மூலமாக முயன்றார் தினகரன். அதன்படியே பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டாவை சந்திக்க தினகரனுக்கு அப்பாயின்ட்மென்ட் கிடைத்தது. உள்துறை அமைச்சர் அமித் ஷா தற்போது கொரோனா சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் மருத்துவமனைக்கு சென்று பின் வீடு திரும்பியிருக்கிறார். அவர் ஓய்வில் இருக்கிறார் என்பதால் அவரை நேரடியாக தினகரனால் சந்திக்க முடியவில்லை.
சுமார் ஐந்து மாத உழைப்பின் பலனாக கிடைத்த அப்பாயின்ட்மென்ட் என்பதால் ரகசியமாக புறப்பட்டு டெல்லி சென்ற தினகரன், திட்டமிட்டபடி ஜே.பி. நட்டாவை சந்தித்தார். அமமுகவின் தற்போதைய நிலை, சசிகலா விடுதலை குறித்து நட்டாவிடம் விரிவாக பேசினார் தினகரன். பிறகு நட்டா வீட்டில் இருந்தவாறே, உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷாவிடம் வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக பேசியிருக்கிறார் தினகரன்.
அப்போது அமித் ஷாவிடம், “சசிகலா நவம்பர் மாதத்தில் விடுதலையாக வேண்டும். அதற்கு நீங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அவர்களுக்கு சிறை நடத்தை விதிகளின்படி இதை செய்ய முடியும். இதற்காக நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதை நாங்கள் செய்கிறோம். பாஜகவுடன் நாங்கள் கூட்டணி வைக்க வேண்டும் என்றாலும் வருகிறோம். அல்லது தேர்தலிலேயே போட்டியிட வேண்டாம் என்று நீங்கள் சொன்னால் கூட அதற்கும் தயாராக இருக்கிறோம். நீங்கள் சசிகலா நவம்பர் மாதம் விடுதலையாக ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று கொஞ்சம் இறங்கியே பேசியிருக்கிறார் தினகரன்.
காணொலியிலேயே இதைக் கேட்ட அமித் ஷா, “இது ரொம்ப முக்கியமான விஷயம். இதைப் பற்றி நான் தமிழ்நாடு முதலமைச்சர்கிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டுதான் ஒரு முடிவெடுக்க முடியும். அதனால இப்ப இதைப் பற்றி என்னால் எதுவும் சொல்ல முடியாது’ என்று தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து சென்னை திரும்பிவிட்டார் தினகரன்.
அமித் ஷாவிடம் ஏன் தினகரன் இவ்வளவு இறங்கிப் பேச வேண்டும் என்று கேட்டால், “சசிகலாவின் உடல் நிலை இப்போது சரியாக இல்லை. நவம்பரில் அவர் வெளியே வந்தால்தான் சிறிது கால ஓய்வுக்குப் பின் அவரால் உடல் நலம் தேறி தேர்தல் நேரத்து அரசியல் வேலைகளுக்குத் தயாராக முடியும். ஏப்ரல், மே மாதத்தில் தேர்தல் வரும் நிலையில் ஜனவரி மாதம்தான் சசிகலா விடுதலையாகிறார் என்றால், ஓய்வு , அரசியல் வேலைகளில் தீவிர கவனம் செலுத்த முடியாது. எனவே தீவிர தேர்தல் பணியாற்றுவதற்காகத்தான் சசிகலாவை நவம்பரிலேயே வெளியே அழைத்து வர தீவிரமாகியிருக்கிறார் தினகரன்” என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.
தனது டெல்லி பயணத்துக்கான பதிலை ஜேபி. நட்டா, அமித் ஷா ஆகியோரிடம் இருந்து எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார் டிடிவி தினகரன்.
-வேந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக