சமீபத்தில், மத்திய நிதியமைச்சகம் சார்பில் மாநிலங்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், ‘134 கோடி ரூபாய் மதிப்புள்ள 375 கிலோ தங்கம், சென்னை விமான நிலையத்தில் இந்த ஆண்டு மட்டும் பிடிபட்டிருக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. சாதாரண விஷயமல்ல இது. ஆம், தங்கத்துக்கும் நம் கலாசாரத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அமெரிக்கா, ஐரோப்பா, கிழக்காசிய நாடுகளின் மொத்தத் தங்கத்தின் இருப்பைவிட, இந்தியர்களிடம் இருக்கும் தங்கத்தின் இருப்பு பல மடங்கு அதிகம். இந்தியர்களிடம் மட்டும் சுமார் 26,000 டன் தங்கம் இருப்பதாகக் கூறுகிறது கனடாவின் ‘இம்பாக்ட்’ ஆய்வு அமைப்பு.
2012-ம் ஆண்டு தங்கத்துக்கு விதிக்கப்பட்ட வரியை, கடந்த ஆண்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2.5 சதவிகிதம் உயர்த்தினார். இத்துடன் ஜி.எஸ்.டி வரி மூன்று சதவிகிதத்தைச் சேர்த்தால், 15 சதவிகிதம் வரி செலுத்த வேண்டும். இத்துடன், ஆபரணத் தங்கத்துக்கு விதிக்கப்படும் மூன்று சதவிகித வரியையும் கணக்கிட்டால், 18 சதவிகிதம் வரியாக மட்டுமே செலுத்த வேண்டியிருக்கிறது. கடத்தலுக்கு அடிப்படைக் காரணம் இதுதான்.
செப்டம்பர் 19-ம் தேதி நிலவரப்படி, 24 கேரட் தங்கத்தின் ஒரு கிராம் மதிப்பு, துபாயில் 4,616 ரூபாய். இதுவே சென்னையில் 5,385 ரூபாய். கிராமுக்கு 769 ரூபாயும் ஒரு பவுனுக்கு 6,152 ரூபாயும் வித்தியாசம் வருகிறது. செய்கூலி, சேதாரம், வரி என எதுவும் துபாயில் கிடையாது. இதனால்தான் அங்கேயிருந்து தங்கத்தைக் கடத்திவருகிறார்கள்.
உதாரணமாக, ஒரு நபர் 40 சவரன் தங்கத்தைக் கடத்துகிறார் என்று வைத்துக்கொள்வோம். 14.77 லட்சம் ரூபாய் கொடுத்து துபாயில் தங்கத்தை வாங்கும் அந்தப் பிரமுகர், அதை அப்படியே இந்தியாவுக்குள் கொண்டுவந்தால் அதன் விலை 17.23 லட்சம் ரூபாய். இதுவே ஆபரணத் தங்கமாகக் கடைகளுக்குச் சென்றால் வரி, செய்கூலி, சேதாரம் எல்லாவற்றையும் சேர்த்து அதன் விலை இன்னும் எகிறும். ஆக, விமானக் கட்டணத்தைக் கழித்துவிட்டுப் பார்த்தால், ஒரு ட்ரிப்புக்கு ஒருவருக்கு மட்டும் 2.30 லட்ச ரூபாய் லாபம் கிடைக்கிறது. இதையே தொழிலாக வைத்திருக்கும் மாஃபியாக்கள் ஒரு நாளைக்கு பலரையும் இப்படிக் குருவிகளாக அனுப்பி கிலோ கணக்கில் தங்கத்தைக் கடத்துகின்றன.
எப்படிக் கடத்துகிறார்கள்?
பொதுவாக, குருவிகளின் பாஷையில் தங்கத்தின் பெயர் ‘மஞ்சள்.’ கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக குருவியாகப் பறக்கும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவரிடம் பேசினோம். “விவரமில்லாத புதுக் கடத்தல்காரர்கள்தான் பொம்மையிலும், எலெக்ட்ரானிக் பொருள்களிலும் தங்கத்தை மறைத்துவைத்துக் கடத்துவார்கள். இதையே பக்காவான தொழிலாகவைத்திருக்கும் கும்பல்கள், குருவிகள் மூலமாக வெளிப்படையாகவே தினந்தோறும் 500 சவரனுக்குக் குறையாமல் கடத்துவார்கள். சவரனுக்கு 6,152 ரூபாய் லாபமாகக் கணக்கிட்டால், 500 சவரனுக்கு 30 லட்ச ரூபாய் லாபமாக நிற்கும். மாதத்துக்கு ஒன்பது கோடி ரூபாய் லாபம்.
தங்கத்தை எடுத்து வருவதற்குத்தான் கட்டுப்பாடே தவிர, அணிந்துவருவதற்குப் பெரிதாகக் கட்டுப்பாடு கிடையாது. இதைப் பயன்படுத்தி, ஒவ்வொரு குருவியும் சராசரியாக 50 சவரன் தங்க நகைகளை அணிந்துவருவார். பெண்களென்றால், 75 சவரன். இவர்களிடமிருந்து நகையைக் கடத்தல் பார்ட்டிகள் வாங்கிக் கொள்வார்கள். இதைத்தான் `வெளிப்படையான கடத்தல்’ என்று சொன்னேன்.
ஒரே விமான நிலையத்தைப் பயன்படுத்த மாட்டோம். இரு மாதங்களுக்கு ஒரு முறை விமான நிலையத்தை மாற்றிக்கொண்டே இருப்போம். விமான நிலையத்தில் முடிந்தவரை எங்கள் ஆள் ஒருவர், கஸ்டம்ஸ் டூட்டியில் இருக்கும்படி பார்த்துக்கொள்வோம். துபாய் வழியாக மட்டுமல்ல இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் வழியாக வரும் சர்வதேச விமானங்களிலும் கடத்தல் தங்கம் வரும்.
வடசென்னைதான் தங்கக் கடத்தலின் சாம்ராஜ்ஜியம். குருவிகளிடமிருந்து தங்கம் வந்ததும், அடுத்த சில மணி நேரங்களில் அரை பவுன் தொடங்கி ஐந்து பவுன் வரை நகரத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அது பறந்துவிடும். அதன் பிறகு, தங்கத்தை சுங்கத்துறை கண்டுபிடிப்பது சாத்தியமே இல்லை. கொரோனாவுக்கு முன்பு வரை சென்னை விமான நிலையத்தில் குறைந்தது 40 விமானங்களிலாவது தங்கம் வரும்.
என்னதான் பக்காவாகத் தொழில் செய்தாலும் சரி... சிக்கல்களும் எழாமல் இல்லை. கடத்தல் கும்பல்களுக்குள்ளும் போட்டி, பொறாமை, அரசியல் இருக்கிறது. போட்டுக்கொடுத்து விடுவார்கள்.
குருவிகள் வெறும் கருவிகள் மட்டுமே!
அது போன்ற சமயங்களில் குருவிகள்தான் மாட்டுவார்களே ஒழிய, நெட்வொர்க்கின் பருந்துகள் ஒருபோதும் சிக்குவதில்லை. ஏனெனில், குருவிகள் வெறும் கருவிகள் மட்டுமே. எங்கிருந்து தங்கம் வருகிறது, எங்கு சென்று சேர்கிறது, யாருக்காக வேலை செய்கிறோம் என்று எதுவுமே அவர்களுக்குத் தெரியாது. தனக்குக் கைமாற்றிவிடும் நபரின் முகத்தைக்கூட முழுதாக பார்த்திருக்க முடியாது. முகத்தில் ஹெல்மெட்டோ கர்ச்சீப்போ அணிந்துகொண்டு வந்து, நொடிப்பொழுதில் பொருளைக் கைமாற்றிவிட்டு நகர்ந்துவிடுவார்கள். இறங்குமிடத்தில் இன்னார் வந்து கோட் வேர்டை சொல்லிவிட்டு வாங்கிக்கொள்வார் என்று மட்டும் தகவல் அனுப்பப்படும்” என்றவர், சில சம்பவங்களையும் பகிர்ந்துகொண்டார்.
“கேரளாவின் மிகப்பெரிய நெட்வொர்க் ஒன்று. பார்ட்டி யார் என்று தெரியாது. போட்டி ‘குரூப்’ போட்டுக்கொடுத்துவிட்டது. கடந்த பிப்ரவரி மாதம் சென்னை விமான நிலையத்தின் கஸ்டம்ஸ் அதிகாரிகளை ஓரங்கட்டிவிட்டு, மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவின் ஸ்பெஷல் டீம் ஒன்று திடீர் ரெய்டு நடத்தியது. ஒரே நாளில் 25 பயணிகளிடம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பேராசையில் தங்க நகைகளுடன், தங்கக் கட்டிகளையும் ஒளித்துவைத்து எடுத்து வந்ததே மொத்தத் தங்கமும் பறிபோகக் காரணமானது. இதில் குருவிகளைத் தாண்டி, ஸ்பெஷல் டீமால் பருந்துகளைத் துளியும் நெருங்க முடியவில்லை. இந்தக் கடத்தலுக்கு உதவிய ஐந்து கஸ்டம்ஸ் அதிகாரிகளும் சிக்கினர்.
கடந்த வாரம் நடந்த இன்னொரு சம்பவம் இது. திருச்சி விமான நிலையத்தில், குறிப்பிட்ட விமானத்தில் இத்தனை கிலோ தங்கம் வருகிறது என்று அதிகாரிகளுக்கு நம்பகமான இன்ஃபார்மர் ஒருவரிடமிருந்து தகவல் வருகிறது. சம்பந்தப்பட்ட விமானமும் வந்தது. தனிப்படையினர் சுற்றிவளைத்து, சல்லடையாகத் தேடியும் தங்கம் கிடைக்கவில்லை. ‘தவறான தகவல்’ என்று தேடுதலை முடிவுக்குக் கொண்டுவந்தபோது, அதிகாரி ஒருவருக்கு போன் வந்திருக்கிறது. “உங்கள் கண்முன்னாலேயே கடத்தல் தங்கம் கடந்துபோயிருக்கிறது. ம்க்கும்... உங்கள் சமார்த்தியம் அவ்வளவுதானா” என்று கிண்டலாகப் பேசிய அந்த இன்ஃபார்மர், “உங்களுக்குக் கடைசியாக ஒரு வாய்ப்பு தருகிறேன்... அரை மணி நேரத்துக்கு முன்பாக அந்தப் பொருள் சென்று சேர்ந்த இடம் இதுதான்” என்று குறிப்பிட்ட கடையின் பெயரைச் சொல்லியிருக்கிறார்.
டென்ஷனான ஸ்பெஷல் டீம், அடுத்த சில நிமிடங்களில் அந்தக் கடையைச் சுற்றிவளைத்தது. இண்டு இடுக்கு விடாமல் சோதனை நடத்தினார்கள். ம்ஹூம், தங்கம் என்ன... தகரம்கூடக் கிடைக்க வில்லை. அந்தக் கடை உரிமையாளரை அதிகாரிகள் கேள்விகளால் துளைத்தனர். எல்லா கேள்விகளுக்கும் சிரித்துக்கொண்டே, நிதானமாக அவர் சொன்ன பதில்... “எல்லாம் சர்வமயம்... வாழ்க வளமுடன்!” நொந்துபோன அதிகாரிகள் வெறும் கையுடன் திரும்பினார்கள். உண்மையில், அந்தக் கடை உரிமையாளருக்கே தனக்கு எங்கிருந்து தங்கம் வருகிறது என்று தெரியாது. அந்தத் தங்கத்தை அவர் தரப்பில் எப்படி மறைத்தார்கள் அல்லது கைமாற்றினார்கள் என்பது நாங்களே யூகிக்க முடியாத ரகசியம்...” என்று அவர் சொன்னவையெல்லாம் க்ரைம் படத்தின் விறுவிறுப்பான காட்சிகளை மிஞ்சின.
சுங்கத்துறை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். “தங்கக் கடத்தலை ஒழிப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. ஸ்பெஷல் டீம் மூலம் திடீர் ரெய்டு நடத்துகிறோம். ஆனாலும், கடத்தலை முற்றிலும் தடுக்க முடியவில்லை.
இப்போதெல்லாம் யார் குருவிகள், யார் பயணிகள் என்பதை அறியவே முடியவில்லை. இந்தியச் சந்தையில் தங்கத்தின் விலை ஏற, ஏற கடத்தல் தங்கம் வருவதும் அதிகரிக்கிறது” என்றனர்.
பயங்கரவாதிகளுக்கு நிதி!
தங்கக் கடத்தலில் புரளும் வருமானத்தின் ஒரு பகுதி, பயங்கரவாதிகளுக்கு நிதியாகவும் செல்கிறது என்பதுதான் இதில் இருக்கும் பெரும் ஆபத்து. குறிப்பாக, கேரளாவின் மலப்புரம், கண்ணூர் ஏரியாக்களில் இது போன்ற மாஃபியாக்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. சமீபத்திய, ஸ்வப்னா தங்கக் கடத்தல் வழக்கு இதற்கு உதாரணம். இதில் பயங்கரவாதிகள் தொடர்பு இருப்பதால்தான் என்.ஐ.ஏ இந்த வழக்கை விசாரிக்கிறது. அதேபோல் மணலி, எண்ணூர், வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை ஏரியாக்களிலும் தங்கக் கடத்தலை முன்வைத்து வலை விரித்திருக்கிறது என்.ஐ.ஏ.
எல்லா கனிமங்களையும் போன்றதே தங்கமும். அதன்மீதான ‘மயக்கம்’ என்பது ஒரு மாயவலை. ‘மயக்கம்’ தீரும்வரை கடத்தலும் ஓயாது!
சென்னையில் மட்டுமே 15% கடத்தல்
தங்கக் கடத்தல் தொடர்பாக விகடன் ஆர்.டி.ஐ குழு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சில தகவல்களைக் கேட்டுப் பெற்றது. அதில் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சி ரகம். கடந்த 2018-19 மற்றும் 2019-20 நிதியாண்டுகளில் இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களிலும் சுங்கத்துறை பறிமுதல் செய்த தங்கத்தின் எடை 5,575.5 கிலோ. இதன் மதிப்பு 1,691 கோடி ரூபாய். இதில், சென்னை விமான நிலையத்தில் மட்டுமே 221 கோடி ரூபாய் மதிப்புள்ள 646 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது. பெங்களூரில் 116 கிலோ தங்கமும், கொல்கத்தாவில் 97.53 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு 294.85 கோடி ரூபாய். இந்திய அளவில் ஒப்பிட்டால், கடத்திவரப்பட்ட மொத்தத் தங்கத்தில் 15 சதவிகிதம் சென்னை விமான நிலையத்தில் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது!
‘குருவி’களின் சோகக்கதை!
வெளியே பவுசாக வலம்வந்தாலும் சில குருவிகளின் சோகக்கதை சொல்லி மாளாது. வழக்கில் சிக்கிக்கொண்டு வாழ்க்கையே சீரழிந்த அப்படியான ஒரு குருவியிடம் பேசினோம். ``ஒரு காலத்துல ஜமீன் கணக்கா வாழ்ந்துகெட்ட குடும்பம் எங்களுது. எல்லாத்தையும் இழந்த பிறகு கீழே இறங்க முடியலை. அதனால சிங்கப்பூர் ஃப்ரெண்ட் ஒருத்தர் மூலமா இந்தத் தொழில்ல இறங்கினேன். ஆரம்பத்துல எல்லாம் நல்லாத்தான் போச்சு. கழுத்து நிறைய நகையோடு வந்திறங்கி, ஏழெட்டு லட்சங்களை சம்பாதிச்சேன். அப்புறம் ஒரு முறை கஸ்டம்ஸ்ல மாட்டிக்கிட்டேன். கோர்ட்டு, கேஸுன்னு செலவழிச்சே எல்லாம் போச்சு. ஜாமீன் வாங்க, கேஸை நடத்த மேற்கொண்டு பல லட்சம் கடன் வாங்கினேன். இப்ப அந்தக் கடனை அடைக்கவே திரும்பவும் குருவியா போய்க்கிட்டு இருக்கேன். பெருசா ஒண்ணும் வருமானம் இல்லை. கழுத்து நிறைய நகைகளைக் கடத்தி வந்தாலும் வீட்டுல ஆளாகி நிக்கிற ரெண்டு பொம்பளைப் புள்ளைங்களுக்கு அஞ்சு பவுன் போட்டு கல்யாணம் பண்ணிக்கொடுக்க வக்கில்லாம தவிக்கிறேன்” என்றார் கண்கலங்கியபடி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக