இந்த நிலையில், அவரது உடல்நிலை தொடர்பாக இன்று மாலை 6.30 மணிக்கு மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், எக்மோ கருவிகள், சுவாசக்கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைக்கு கமல் வருகை
எஸ்.பி.பி உடல்நிலை தொடர்பான தகவல் வெளிவந்ததும் அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு நடிகர் கமல் ஹாசன் இன்று இரவு 8 மணியளவில் சென்றார். அங்குள்ள அவரது மகன் எஸ்.பி. சரணிடம் அவரது தந்தையின் உடல்நிலைமை குறித்து அவர் கேட்டறிந்தார்.
உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் முழுமையாக சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்து வருவதாக அந்த மருத்துவமனை கூறியுள்ளது.
இது தொடர்பான மேலும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இதுவரை நடந்தது என்ன?
பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கோவிட் - 19 அறிகுறிகளுடன் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மிதமான அறிகுறிகளே இருந்த நிலையில், ஆகஸ்ட் 13ஆம் தேதியன்று இரவு அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்குப் பிறகு அவரது உடல்நிலை சிறிது சிறிதாக மேம்பட்டது.
கடந்த சனிக்கிழமையன்று அவரது உடல்நிலை தொடர்பாக காணொளி ஒன்றை வெளியிட்ட அவரது மகன் எஸ்.பி. சரண், "எனது தந்தை எஸ்.பி.பி-க்கு தொடர்ந்து வென்டிலேட்டர் மற்றும் எக்மோ உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். அவரது உடலின் பிற நலக்குறியீடுகள் இயல்புடன் உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
மேலும், "அவரது சுவாசத்தில், நுரையீரலில் இன்னும் சில முன்னேற்றம் தேவைப்படுகிறது. அவர் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அவர் எழுந்து அமர மருத்துவர்கள் உதவுகின்றனர். தினமும் 15-20 நிமிடங்கள் எழுந்து அமர்கிறார். தவிர, நேற்று முதல் வாய்வழியாக உணவருந்த ஆரம்பித்துள்ளார். இது அவர் வலிமை பெற உதவும்" என்றும் தெரிவித்திருந்தார். ஆனால், நேற்று முதல் எஸ்.பி.பியின் உடல் பின்னடைவைச் சந்திக்க ஆரம்பித்தது.
ஆந்திர மாநிலம், நெல்லூரில் பிறந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம், 16 இந்திய மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர். அவருக்கு வயது 74.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக