வெள்ளி, 25 செப்டம்பர், 2020

ஸ்டாலின் கண்டனம் : உரிமையாளருக்குத் தெரியாமல் கட்டிடம், நிலத்தைக் கையகப்படுத்தும் சட்டம்; திமுக எதிர்ப்பை மீறி நிறைவேற்றுவதா?

 the-law-of-acquisition-of-building-and-land-by-which-he-is-unaware-of-the-owner-will-the-dmk-carry-out-its-opposition-stalin-condemns-the-tamil-nadu-government

.hindutamil.in : திமுகவின் கடும் எதிர்ப்பையும் மீறி, கார்ப்பரேட் மற்றும் தனியாரின் மக்கள் விரோதத் திட்டங்களுக்கு உதவிடும் வகையில் அதிமுக அரசு கொண்டு வந்திருக்கும் தமிழ்நாடு நகர்ப்புற ஊரமைப்பு (திருத்தச்) சட்டம் 2020-க்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கக்கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.  இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:

“நில உரிமையாளர்கள், கட்டிட உரிமையாளர்களுக்குத் தெரியாமல்- அவர்களுக்குச் சொந்த உரிமையுள்ள ஒரு பகுதியில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க - அனுமதி வழங்கத் தமிழ்நாடு நகர்ப்புற ஊரமைப்பு (திருத்தச்) சட்டம் 2020 கொண்டு வந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

இந்தச் சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் முன் வைக்கப்பட்டபோதே, அதை எதிர்த்துப் பேசிய திமுக சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ரகுபதி, “இப்படியொரு சட்டத் திருத்தம் கொண்டு வருவது பொதுமக்களுக்கும், சமூக நீதிக்கும் எதிரானது” என்றும், “ நில உரிமையாளர்களுக்கும், கட்டிட உரிமையாளர்களுக்கும் ஆரம்ப நிலையிலேயே தன்னுடைய நிலம் எடுக்கப்படுகிறது; கட்டிடம் எடுக்கப்படுகிறது என்று அறிந்துகொள்ள உதவும் தமிழ்நாடு நகர்ப்புற ஊரமைப்புச் சட்ட விதி 21 தொடர வேண்டும்” என்று வலியுறுத்திப் பேசியிருக்கிறார்.

ஆனால், அதிமுக அரசு அதைக் காது கொடுத்து கேட்கவே இல்லை. ஒரு பகுதியில் நிறைவேற்ற வேண்டிய திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையோ - அனுமதியோ அந்தப் பகுதியில் உள்ள நில மற்றும் கட்டிட உரிமையாளர்களுக்குச் சொல்லாமலேயே அளிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் இந்தச் சட்டத் திருத்தத்தை அதிமுக அரசு கொண்டு வந்திருக்கிறது.

இந்தப் புதிய சட்டத்தின் படி - அதுபோன்ற திட்ட அறிக்கை மற்றும் அனுமதி அளிக்கும் போது - அப்பகுதியில் உள்ள நில உரிமையாளர்களின் பெயர்களைச் சொல்லத் தேவையில்லை; கட்டிட உரிமையாளர் பெயர் விவரங்களை அளிக்கத் தேவையில்லை என்று கண்மூடித்தனமாகக் கொண்டு வரப்பட்டுள்ள இந்தத் திருத்தச் சட்டத்தின் மூலம், “மாநில அரசின் மக்கள் விரோதத் திட்டங்களுக்கு” மட்டுமல்ல - “கார்ப்பரேட் மற்றும் தனியாரின் மக்கள் விரோதத் திட்டங்களுக்கும்” உதவி செய்ய அதிமுக அரசு முன்வந்துள்ளது.

“விவசாயிகளின் நிலங்களை அவர்களுக்குத் தெரியாமலேயே எடுத்துக் கொள்ளலாம்” என்று சட்டம் கொண்டு வந்ததுபோன்று, “பொதுமக்களின் கலந்தாய்வை” ரத்து செய்யும் இந்தச் சட்டத் திருத்தமும் - சட்ட நெறிமுறைகளுக்கு முற்றிலும் எதிரானது. சமுதாய நலனுக்கும் கேடு விளைவிப்பது. அதனால்தான் இந்தச் சட்டத் திருத்தங்களைச் சட்டப்பேரவையில் திமுக சார்பில் கடுமையாக எதிர்த்துப் பேசி- தமிழ்நாடு நகர்ப்புற ஊரமைப்புச் சட்ட விதி 21-ஐ ரத்து செய்யக் கூடாது என்றும் வலியுறுத்தினோம்.

ஆனாலும் அதிமுக அரசு நிறைவேற்றியிருப்பதால் ஆளுநர் பொதுமக்களைப் பாதிக்கும்- குறிப்பாக ஒவ்வொருவரின் சொத்துரிமை மற்றும் நில உரிமையைப் பாதிக்கும் “தமிழ்நாடு நகர்ப்புற ஊரமைப்பு (திருத்தச்) சட்டம் 2020-க்கு” ஒப்புதல் அளிக்கக்கூடாது என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்

கருத்துகள் இல்லை: