வெள்ளி, 25 செப்டம்பர், 2020

160 தொகுதிகளில் போட்டியிட அதிமுக திட்டம்.. குழிபறிக்கும் கோஷ்டிகள்

Mathivanan Maran - tamil.oneindia.com : சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் 160 தொகுதிகளில் போட்டியிடுவது அதிமுகவின் திட்டம். ஆனால் வலிமையான தலைமை இல்லாத நிலையில் புற்றீசலைப் போல கோதாவில் குதிக்கப் போகிற குடைச்சல் அதிருப்தி வேட்பாளர்களை எப்படி கட்டுப்படுத்துவது என்பதும் அதிமுக சீனியர்களின் கவலை. அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தரப்புக்கு இடையேயான முட்டல் மோதல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. ஓபிஎஸ் அணியில் புதியதாக அமைச்சர்கள் சிலரும் சேர்ந்துள்ளனர். அதிமுக தலைமை கழகத்தில் அண்மையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இருதரப்பும் பரஸ்பரம் கொந்தளிப்பைக் காட்டியது. இதனால் யாரை எப்படி சமாளிப்பது? சமாதானப்படுத்துவது என தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர் அதிமுக சீனியர்கள்.
இந்த நிலையில் சசிகலா விடுதலையாகிறார்.. அதிமுகவில் மீண்டும் பொதுச்செயலாளராகிறார்... பாஜகதான் டீல் பேசுகிறது என்கிற தகவல்கள் வெளியாகின. 
இதனையும் நாம் பதிவு செய்திருந்தோம். ஆனால் சசிகலாவை அதிமுக பக்கமே சேர்க்கமாட்டோம் என்று ஜெயக்குமார் போன்றவர்கள் இன்னமும் சீறிக் கொண்டிருக்கிறார்கள்இதனிடையே சரி, சசிகலாவை ஏற்காமல் விட்டுவிடலாம் என்றே வைத்துக் கொள்ளலாம்.. இப்ப இருக்கும் இதே கோஷ்டிகளுடனேயே தேர்தலை சந்தித்து... ஆட்சியை கைப்பற்றிவிடத்தான் முடியுமா? மனசாட்சியோடு பேசுங்க என அமைச்சர் ஒருவரிடம் அதிமுக சீனியர் எகிறி இருக்கிறார். இது தொடர்பாக அதிமுக வட்டாரங்களில் பேசினோம்

இது குறித்து அதிமுகவினர் கூறுகையில், உண்மையில் சசிகலா அல்லது அவரைப் போன்ற ஒற்றை தலைமையின் தேவை என்ன என்பது இப்போதுதான் தெரிகிறது. ஏனெனில் அதிமுக 160 தொகுதிகளில் போட்டியிடலாம் என திட்டமிட்டுள்ளது. இந்த 160 தொகுதிகளில் யாரை வேட்பாளராக அறிவித்தாலும் நிச்சயம் மற்றொரு கோஷ்டி தனக்கு வாய்ப்பு கிடைக்கலையே என ஒன்று குழிபறிக்கும்.. இல்லை எனில் போட்டி வேட்பாளராக நிற்கும்.


கடந்த காலங்களில் இப்படி குமுறியவர்களை கவனிக்க போயஸ் கார்டன் இருந்தது; மன்னார்குடி அணி இருந்தது. ஆனால் இப்போது தடி எடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரர்கள் என்கிற நிலைதான் அதிமுகவில் இருக்கிறது. இப்படித்தான் ஒவ்வொரு தேர்தல் பணியிலும் ஆயிரத்தெட்டு அக்கப்போர் வந்து குவியப் போகிறது. ஆனால் நிச்சயமாக இப்போது உள்ள இரட்டை தலைமையால் இந்த பஞ்சாயத்துகளுக்கு தீர்வு காண முடியாது என ஆதங்கப்படுகின்றனர்


அதனால்தான் தேர்தலுக்கு முன்னரே அதிமுக பொதுச்செயலாளர் பதவி யாருக்கு முதல்வர் பதவி யாருக்கு? எந்த அணிக்கு எந்த தொகுதி என்பதையெல்லாம் திட்டவட்டமாக பேசி முடிவெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தேர்தல் நேரத்தில் பெரும் களேபரங்களை கழகம் சந்தித்தே தீரும் எனவும் அங்கலாய்க்கின்றனர் அதிமுக சீனியர்கள்.


கருத்துகள் இல்லை: