திங்கள், 21 செப்டம்பர், 2020

பன்னீர் அதிமுக தலைமை செயலகத்தில் ..தினகரன் பெங்களூரில்

நக்கீரன்  : அண்மையில் அ.தி.மு.கவில் நடைபெற்ற உயர்மட்டக் குழுவின் ஆலோசனையில், காரசார விவாதம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியான நிலையில், அ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் வருகின்ற 28 -ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் எம்.எல்.ஏ செம்மலை ஆகியோர் திடீரென வருகை தந்தனர். செயற்குழுக் கூட்டம் தொடர்பான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 மின்னம்பலம்  : அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செப்டம்பர் 20 ஆம் தேதி காலை டெல்லி சென்று, அன்று இரவே சென்னை திரும்பி வந்துவிட்டார்.

ஆறு பேர் பயணிக்கக்கூடிய தனி விமானத்தில் தனது நெருங்கிய நண்பர் மல்லிகார்ஜுன், தனது செயலாளர் ஜனார்த்தனன் என்கிற ஜனா ஆகியோரோடு டெல்லி சென்ற டிடிவி தினகரன் எதற்காக சென்றார், யாரை சந்திக்க சென்றார் என்பதை எல்லாம் அறிய அமமுகவினர் மட்டுமன்றி அதிமுக, திமுகவினரும் கூட கடுமையான தேடலில் இறங்கியிருக்கிறார்கள்.

பொதுவாகவே தினகரன் கட்சி ரீதியான தனது நடவடிக்கைகள் பற்றி வெற்றிவேல், பழனியப்பன் உள்ளிட்ட சிலரிடம் கலந்து ஆலோசிப்பதுண்டு. ஆனால் இந்த முறை யாருக்கும் சொல்லாமல் அவர் டெல்லி சென்றதால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் வழக்கமாய் தினகரனைத் தொடர்பு கொள்ள வேண்டுமென்றால்... ஜனாவின் லைனில்தான் செல்வார்கள். அவர்கள் நேற்றும் தொடர்ந்து ஜனாவுக்கு முயற்சி செய்ய அவர் போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. ஆனாலும் விடாமல் இன்றும் பலரும் ஜனாவுக்கு அலைபேசி செய்து, ‘அண்ணே... சார் டெல்லி போனாரே... என்ன விஷயம்ணே...’ என்று வினாக்களாகத் தொடுத்துவிட்டனர். அவர்களில் சிலரிடம் மட்டுமே ஜனா சில நிமிடங்கள் பேசியிருக்கிறார்.

“எல்லாம் நல்லபடியா போயிட்டு இருக்கு, . அதுமட்டுமல்ல சார் சின்னம்மாவை சென்று பார்க்க இருக்கிறார். பார்த்த பிறகு இது பற்றி உங்களிடம் விரிவாக சொல்லுவார். அதுவரைக்கும் கொஞ்சம் காத்திருங்க. எல்லாம் நல்லதாவே நடக்கும்” என்று மட்டும் ஜனா தன்னிடம் பேசிய அமுமுக நிர்வாகிகள் சிலரிடம் சொல்லியிருக்கிறார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் பார்வையாளர்கள் அனுமதி முழுமையாக இன்னும் தொடங்கப்படவில்லை. எனவே சசிகலாவை தினகரன் சந்திப்பதில் தாமதம் ஏற்படுகிறது. தான் டெல்லி சென்று வந்த விஷயத்தை சசிகலாவிடம் விளக்கிய பிறகு தினகரன் கட்சியின் நிர்வாகிகளிடம் விளக்குவார் என்கிறார்கள் அமமுக வட்டாரத்தில்.

-வணங்காமுடி

கருத்துகள் இல்லை: