வெள்ளி, 15 மே, 2020

குஜராத்திலும் ராதாபுரம் பாணி மோசடி .. ஊழல்வாதிகைன் உச்ச புகலிடம்


குஜராத்திலும் ஒரு ராதாபுரம்:  உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை!மின்னம்பலம் : குஜராத் பாஜக அரசில் சட்டம், கல்வித் துறை அமைச்சராக இருக்கும் பூபேந்திரசிங் சௌடசாமாவின் தேர்தல் வெற்றியை அம்மாநில உயர்நீதிமன்றம் செல்லாது என்று தீர்ப்பளித்திருந்த நிலையில், இன்று மே 15 அந்தத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. இதனால் பாஜக அமைச்சரின் பதவி தற்காலிகமாகத் தப்பித்திருக்கிறது.
2017 ஆம் ஆண்டு நடந்த குஜராத் சட்டமன்றத் தேர்தலில் தோல்கா சட்டமன்றத் தொகுதியில் இருந்து பாஜக சார்பில் பூபேந்திரசிங் சௌடசாமா போட்டியிட்டார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ரத்தோட் நின்றார். தேர்தல் முடிவில் வெறும் 327 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் பூபேந்திர சிங் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர் மாநில அரசின் சட்டம், கல்வித் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தேர்தலில் வெற்றிவாய்ப்பை மயிரிழையில் இழந்த காங்கிரஸ் வேட்பாளர் ரத்தோட் குஜராத் உயர் நீதிமன்றத்தில், பூபேந்திர சிங்கின் வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்குத் தொடர்ந்தார். “தோல்கா தொகுதியின் தேர்தல் அலுவலர் தவல் ஜானி வாக்கு எண்ணிக்கையின்போது 429 அஞ்சல் வாக்குகளை எண்ணாமல் ஒதுக்கிவிட்டார். பூபேந்திரசிங்கின் வெற்றி வித்தியாசம் 327 ஐவிட 429 அஞ்சல் வாக்குகள் என்ற எண்ணிக்கை அதிகம். எனவே இந்த வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும்” என்று அந்த வழக்கில் குறிப்பிட்டிருந்தார் ரத்தோட்.

இந்த வழக்கில் குஜராத் உயர் நீதிமன்றம், பூபேந்திரசிங்கின் வெற்றி செல்லாது என்று கடந்த மே 12 ஆம் தேதி தீர்ப்பளித்தது. “வாக்கு எண்ணிக்கையில் அஞ்சல் வாக்குகளை எண்ணாமல் தேர்தல் நடத்தும் அலுவலர் விதிமுறைகளை மீறியிருக்கிறார். மேலும் சமர்ப்பிக்கப்பட்ட கேமரா பதிவு முழுமையாக இல்லை. மேலும் வாக்கு எண்ணிக்கையின் போது பூபேந்திர சிங்கின் தனிச் செயலாளர் வாக்கு எண்ணும் மண்டபத்துக்கு அடிக்கடி வந்து சென்றதை சிசிடிவி பதிவுகள் காட்டியுள்ளன. இந்த வகையில் பாஜக வேட்பாளர் பூபேந்திரசிங்குக்கும், தேர்தல் நடத்தும் அலுவலர் தவல் ஜானிக்கும் தூய்மையற்ற உறவு இருப்பதை இவை எடுத்துக் காட்டுகின்றன. எனவே பூபேந்திரசிங்கின் தேர்தல் வெற்றி செல்லாது” என்று குஜராத் உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பூபேந்திரசிங் சௌடசாமா இன்று ( மே 15) மேல் முறையீடு செய்தார். “குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு கொரோனாவுக்கு எதிராக மாநில அரசு போராடிக் கொண்டிருக்கையில் மேலும் இந்த தீர்ப்பு கோவிட் -19 உடன் நாடு போராடுகையில் மாநில கல்வி மற்றும் சட்ட அமைச்சரை பதவி இழக்கச் செய்வது பாதிப்பை உண்டாக்கும்” என்று சுட்டிக்காட்டினார்.
ரத்தோட்டுக்கு ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “ வாக்கு எண்ணும் பணியில் சட்டவிரோத கையாளுதல்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
ஆனால் உச்ச நீதிமன்றமோ, குஜராத் அமைச்சரின் தேர்தல் வெற்றியை ரத்து செய்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து, ரத்தோடுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் இதேபோல 2016 தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் அப்பாவுவுக்கு எதிராக, அதிமுக வேட்பாளர் இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். தபால் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக அப்பாவு உயர் நீதிமன்றம் சென்றார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ராதாபுரம் தொகுதியில் பதிவான தபால் வாக்குகளையும், 19, 20 மற்றும் 21-வது சுற்றுகளின் வாக்குகளையும் மீண்டும் எண்ணுமாறு உத்தரவிட்டது. வாக்கு எண்ணிக்கையும் நடந்துவிட்டது. ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து அ.தி.மு.க எம்.எல்.ஏ. இன்பதுரை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இதில் ராதாபுரம் தொகுதியின் மறு வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.
கிட்டதட்ட குஜராத்திலும் ஒரு ராதாபுரம் போலவே நடந்திருக்கின்றன நிகழ்வுகள்
-வேந்தன்

கருத்துகள் இல்லை: