ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

தனியார் ஆய்வக சோதனை செலவை அரசே ஏற்கும்: பீலா ராஜேஷ்

தனியார் ஆய்வக சோதனை செலவை அரசே ஏற்கும்: பீலா ராஜேஷ்மின்னம்பலம் : கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வரும் நிலையில் அண்மையில் உச்ச நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்கள் தனியார் ஆய்வகங்களில் சோதனை மேற்கொண்டால் அதற்கான செலவை அரசே ஏற்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், தனியார் ஆய்வகங்களில் சோதனை மேற்கொண்டால் அதற்கான செலவை அரசே ஏற்கும் என்று சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா குறித்த நிலவரத்தைத் தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்துத் தெரிவித்தார். அவர் கூறுகையில், “இன்றைய நிலவரப்படி 39,041 பேர் வீட்டு கண்காணிப்பில் இருக்கின்றனர். 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்தவர்களின் எண்ணிக்கை 58,189, அரசு கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 162. 10,655 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது. இன்று ஒரேநாளில் மட்டும் 106 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 16 பேர் வெளி இடங்களிலிருந்து வந்தவர்கள், 90 பேர் அவர்களுடன் தொடர்புடையவர்கள். மொத்தம் தமிழகத்தில் 1075 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக இருக்கிறது. இன்று 5 பேர் உட்பட இதுவரை மொத்தம் 50 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.
மேலும், தமிழகத்தில் கொரோனா ஆய்வு மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், ”14 அரசு ஆய்வகங்களுக்கும், 9 தனியார் ஆய்வகங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிட்யூட், மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ், தேனி, திருநெல்வேலி, திருவாரூர், சேலம், கோவை இஎஸ்ஐ, விழுப்புரம், மதுரை, திருச்சி, தருமபுரி, பெருந்துறை ஆகிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கும், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.தனியாரை பொறுத்தவரை வேலூர் சிஎம்சி, அப்பல்லோ, எஸ்ஆர்எம், மியாட் உட்பட 7 ஆய்வகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஐவிஆர்எஸ் எனப்படும் தானியங்கி குரல் வழி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 9499912345 என்ற எண்ணுக்குத் தொடர்புகொள்ளலாம். கொரோனா அறிகுறி இருக்கிறதா என்பதை இதன்மூலம் தெரிந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தனியார் ஆய்வகங்களையும் ஒருங்கிணைத்துச் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டால், அதற்கான செலவை அரசே ஏற்கும்” என்று தெரிவித்துள்ளார்
தொடர்ந்து, “4 தனியார் மருத்துவர்கள் உட்பட 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பிசிஆர் கருவிகள் 24,000 இருக்கிறது. ரேபிட் கிட்டைக் காட்டிலும் இதன் மூலம் தான் பாதிப்பை உறுதிப்படுத்த முடியும். கொரோனாவால் குணமடைந்தவர்களின் பிளாஸ்மாவை எடுத்து சோதனை செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் அனுமதி கேட்டுள்ளோம். ஓரிரு நாட்களில் இதற்கு ஓப்புதல் கிடைக்கும்” என்றும் குறிப்பிட்டார்.
-கவிபிரியா

கருத்துகள் இல்லை: