வியாழன், 2 ஆகஸ்ட், 2018

சிறுமியின் தொண்டைக்குள் ஒன்பது ஊசிகள் .. மந்திரவாதி கொடுமை ... மருத்துவர்கள் காப்பாற்றினர்


சிறுமியின் தொண்டைக்குள் 9 ஊசிகள்!மின்னம்பலம்: மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு சிறுமியின் உடலில் இருந்து ஒன்பது ஊசிகளை அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்துள்ளனர் மருத்துவர்கள்.
மேற்கு வங்க மாநிலம் கிரிஷ்நகர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் கடும் தொண்டை வலி காரணமாகக் கடந்த ஜூலை 29ஆம் தேதியன்று நில் ரதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வாய் பேச முடியாமல் இருந்த அந்தச் சிறுமியின் தொண்டைப் பகுதியை எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அவரது தொண்டையில், உணவுக் குழாயைச் சுற்றிலும் ஒன்பது ஊசிகள் இருந்தன. சுமார் 4 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அந்த ஊசிகளை வெளியே எடுத்தனர் மருத்துவர்கள். இதன் மூலமாக, அந்தச் சிறுமி பெரும் பாதிப்பில் இருந்து காப்பாற்றப்பட்டார்.

அந்த ஊசிகளைச் சிறுமி விழுங்கவில்லை என்றும், அவை வெளியில் இருந்து செருகப்பட்டன என்றும் மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து, காது மூக்கு தொண்டை (ENT) அறுவை சிகிச்சை நிபுணர் மனோஜ் முகர்ஜி நிருபர்களிடம் பேசினார். அப்போது, “அந்த ஊசிகள் கழுத்தின் தசையில் சிக்கியிருந்தன. ஆனால், உணவுக்குழாயை ஊடுருவவில்லை” என்று கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக, சிறுமியின் குடும்பத்தினர் தகவல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.
கிரிஷ்நகர் பகுதியில் வசித்துவரும் சிறுமியின் அண்டை வீட்டினர், இந்தச் சம்பவத்தின் பின்னணி பற்றி அவரது பெற்றோருக்குத் தெரிந்திருக்கக்கூடும் என்று சந்தேகம் எழுப்பியுள்ளனர். “மூன்று வருடங்களுக்கு முன்னர் அந்தச் சிறுமியின் மூத்த சகோதரர் இறந்துவிட்டார். பின்னர் அந்த ஜோடி ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்தது. அதுவும் இறந்துவிட்டது. இந்த இரண்டு மரணங்களைத் தொடர்ந்து, அந்தச் சிறுமி மனச்சோர்வடைந்துவிட்டார்" என்று கூறியுள்ளனர். குறி சொல்பவரிடம், அந்தச் சிறுமியை அவரது பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: