ஞாயிறு, 29 ஜூலை, 2018

மீன் விற்ற கேரளா மாணவியை கேலி செய்தவர் கைது

ஹனான்விகடன் :எம்.குமரேசன் -கேரளாவில், படித்துக்கொண்டே மீன் விற்பனைசெய்து குடும்பத்தைக் கவனித்துக்கொண்ட கல்லூரி மாணவியை விமர்சித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள  மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர், 19 வயது மாணவி ஹனான். இவர்,  மனநிலை சரியில்லாத தனது தாயைக் கவனித்துக்கொண்டு மீன் விற்று, அதில் கிடைத்த வருவாயில்  குடும்பத்தைக் கவனித்துவருகிறார்.  மாணவிகுறித்து மலையாள பத்திரிகைகள் செய்தி வெளியிட, அவருக்கு நிதியுதவி குவிந்தது. மலையாள இயக்குநர் அருண் கோபி,  நடிகர் பிரணவ் மோகன்லாலுடன் நடிக்க மாணவிக்கு வாய்ப்பு வழங்கினார். இதையடுத்து, சமூக வலைதளங்களில் மாணவி பற்றிய செய்தியின் உண்மைத்தன்மைகுறித்து பலரும் விமர்சித்தனர். கேரளாவில் இது சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து, மாணவியை தவறாக சித்திரித்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்க கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டார்.

முதல்வரின் உத்தரவையடுத்து  வயநாட்டைச் சேர்ந்த நூருதீன் ஷேக் என்பவர் நேற்று அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டார். இவர் ஒரு வீடியோ பிளாக்கர். தன் பிளாக்கில் ஹனானை தவறாக சித்திரித்து வீடியோ வெளியிட்டார். இதைத் தொடர்ந்தே மற்றவர்களும் ஹனான் மீது பாய்ந்தனர். கேரள முதல்வர் உத்தரவையடுத்து, ஹனானிடம் மன்னிப்பு கேட்டு மற்றோரு வீடியோவை நூருதீன் ஷேக் வெளியிட்டார். எனினும், கைது நடவடிக்கையில் இருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை.

ஹனானுக்கு ஆதரவாக கேரள மாநில மகளிர் ஆணையத் தலைவர் ஜோசஸ்பினும் களமிறங்கியுள்ளார். சமூக வலைதளங்களில் கண்டபடி விமர்சிப்பதை 'சைபர் குண்டாயாயிஸம்' என்றும் அவர் விமர்சித்துள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அச்சுதானந்தனும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாணவி ஹனான் , தனக்கு எந்த உதவியும் வேண்டாம். நிம்மதியாக பணி செய்ய விடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். கேரள அரசு எடுத்த நடவடிக்கைக்கு நன்றியும் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: