சனி, 4 ஆகஸ்ட், 2018

ஊடகத் தணிக்கை: மோடியின் ஸ்டைல்! ,, சவுக்கு ஆன்லைன்

ஏபீபி நியூஸ் நிறுவனத்தில் உயர் பதவி வகிக்கும் இரண்டு தொலைக்காட்சி ஆசிரியர்கள் ராஜினாமா செய்திருக்கிறார்கள். மூன்றாவது ஆசிரியர் காத்திருப்பில் வைக்கப்பட்டிருக்கிறார். ஆளும் கட்சியின் இணக்கத்தைப் பெறுவதற்காக முன்னணி ஊடகம் ஒன்று அரசுக்கேற்ப வளைந்து கொடுப்பதற்கான சமீபத்திய உதாரணமாக இந்தச் சம்பவங்கள் மீடியா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகின்றன கடந்த புதன்கிழமை அன்று, இந்த சேனல் நிர்வாகம், எடிட்டர் இன் சீப் மிலிந்த் காண்டேகர் ராஜினாமா செய்வதாக அறிவித்தது. இந்த அறிவிப்பை அடுத்து, புகழ்பெற்ற மாஸ்டர் ஸ்டிரோக் நிகழ்ச்சித் தொகுப்பாளர் புண்ய பிரசூன் பாஜ்பாய் விலகும் தகவல் வெளியானது. பாஜ்பாய் தானாகவே பதவி விலகினாரா அல்லது விலகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டாரா என்பது தெரியவில்லை. பிரதமர் நரேந்திர மோடி, தனது கிராமப்புறத் திட்டங்களின் வெற்றிக்கதையாக சத்தீஸ்கர் பெண்மணி ஒருவரின் உதாரணத்தை முன்னிறுத்தினார். ஆனால், அந்தப் பெண்மணி மோடி கூறியதுபோல வருமானத்தை இரட்டிப்பாக்கவில்லை என்பதை அம்பலமாக்கும் செய்தியை பாஜ்பாய் வெளியிட்டார். மத்திய அமைச்சர்களை அதிருப்திக்கு உள்ளாக்கிய இந்தச் செய்தி வெளியான சில வாரங்கள் பிறகு இந்த விலகல் நிகழ்ந்துள்ளது. அவர் மாஸ்டர் ஸ்டிரோக் நிகழ்ச்சியை இனிமேல் தொகுத்து வழங்க மாட்டார் என இரண்டு நாட்களுக்கு முன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு பெரிய தலைகளின் விலகலைத் தவிர, நிகழ்ச்சிகளில் மோடி மீதான விமர்சனம் இருக்கக் கூடாது எனும் நிர்வாகத்தின் உத்தரவை எதிர்த்துக் கேள்வி கேட்ட மூத்த செய்தித் தொகுப்பாளர் அபிஷார் ஷர்மா, 15 நாட்களுக்கு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படவில்லை எனவும் சேனல் வட்டாரங்கள் தி வயர் இதழிடம் தெரிவித்தன.
சேனலில் இந்த மாற்றங்கள் நிகழ்வதற்கு முன், கடந்த வாரம் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் சிலரிடம், பாஜக தலைவர் அமித் ஷா, ஏபீபி நீயூஸ் சேனலுக்குப் பாடம் புகட்ட இருப்பதாக கூறியதாகவும் வயருக்குத் தெரியவந்துள்ளது.
மோடியை விமர்சிக்கக் கூடாது’
லக்னோவில் அண்மையில் பேசியபோது, உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு நிலை மேம்பட்டிருக்கிறது என மோடி கூறிய கருத்துக்களுடன், மறுநாளே மாநிலத்தில் நடைபெற்ற இரண்டு படுகொலைகளை ஒப்பிட்டு செய்தி வெளியிட்டதே அபிஷார் மீதான நடவடிக்கைக்குக் காரணமாக அமைந்தது.
அபிஷார் பிரதமரின் பெயரைக் குறிப்பிடும்போதே, செய்தி அறையில் பரபரப்பு உண்டானது. ஏபீபி நியூஸ் சி.இ.ஓ. அடிதெப் சர்கார், இந்த நிகழ்ச்சியை உடனே நிறுத்துமாறு உத்தரவிட்டார். நிகழ்ச்சியை உடனே நிறுத்தாததற்காக காண்டேகரை சி.இ.ஓ. சர்கார் கடிந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர் செய்தி துவங்கி 5 நிமிடங்களே ஆகியுள்ளதால் அது சாத்தியம் இல்லை எனக் கூறியுள்ளார். செய்தி நிகழ்ச்சி முடிந்ததும், மோடியை விமர்சிக்க வேண்டாம் எனத் தொகுப்பாளரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பின்னர், நிர்வாகம் அவரை 15 நாட்கள் காத்திருப்பில் வைக்க உத்தரவிட்டது. இனி மோடி அரசை விமர்சிக்கக்கூடாது என சேனலின் அனைத்து நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த உத்தரவுகளை சர்கார் நேரடியாக பிறப்பித்ததாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அன்றைய தினம் மாலை, பாஜ்பாயிடம் அவரது நிகழ்ச்சியை இனி சித்ரா திரிபாதி நடத்துவார் எனக் கூறப்பட்டதாக சேனல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய வகை தணிக்கை?
சேனல் வட்டாரங்களிடம் பேசியபோது, சில நாட்களாக சமூக ஊடகங்களில் உலா வந்துகொண்டிருக்கும் தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்ள முடிந்தது. அரசை அதிருப்தியில் ஆழ்த்த வேண்டாம் என்று, பல்வேறு டீடிஎச் சேவைகளில் பாஜ்பாய் நிகழ்ச்சியைத் திட்டமிட்டு சேனல் முடக்கியதாகக் கூறப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்கள் பாஜ்பாய் நிகழ்ச்சியைப் பார்க்க முடியவில்லை எனப் புகார் தெரிவித்து வருகின்றனர். மோடியின் திட்டத்தால் பலன் பெற்று சத்தீஸ்கர் பெண்மணி சந்திரமணி கவுசிக் என்பவர் தனது வருமானத்தை இரு மடங்காக உயர்த்திக்கொண்டதாக வெளியான செய்தியை மறுத்து செய்தி வெளியிடப்பட்டதை தொடர்ந்து நிகழ்ச்சி முடக்கம் தொடங்கியதாக சேனலுடன் தொடர்புகொண்ட மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறினார்.
இந்த முடக்கம் குறித்து பாஜ்பாயே டிவிட்டரில் கண்டனம் தெரிவித்தார்.  “மாஸ்டர் ஸ்டிரோக் நிகழ்ச்சியின்போது நீங்கள் திரையை முடக்கலாம், ஆனால் நாங்கள் அதைக் கரும் பலகையாக்கி அதன் மீது உண்மையை எழுதுவோம்” என அவர் கூறியிருந்தார். இந்த முடக்கம் திட்டமிட்டு நடைபெற்றதா என்பதை தி வயர் இதழால் உறுதி செய்துகொள்ள முடியவில்லை. நிகழ்ச்சியின் பகுதிகளை இன்னமும் யூடியூப்பில் காண முடிகிறது.
“பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிகளை எல்லா விதங்களிலும் எள்ளி நகையாடும் செயல்திட்டங்களுடன் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்” என அண்மையில் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், தகவல் ஒளிபரப்புரத் துறை இணை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர், விவசாயத் துறை இணை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உள்ளிட்டவர்களால் பாஜ்பாய் விமர்சிக்கப்பட்டார்.

ஜூன் 20ஆம் தேதி, மோடிக்கும் நாட்டில் உள்ள விவசாயிகளுக்கும் இடையிலான வீடியோ உரையாடலில், சத்தீஸ்கர் மாநிலத்தின் கனேகர் மாவட்டத்தைச்சேர்ந்த சந்திரமணி, தனது வருமானம் இரு மடங்காக உயர்ந்ததாகத் தெரிவித்தார். ஜூலை 6 ம் தேதி ஏபீபி நியூஸ் வெளியிட்ட செய்தியில், இரு மடங்கு வருமானம் என்பது உண்மையல்ல என்றும், இவ்வாறு கூற அந்த விவசாயி நிர்பந்திக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்ளப்பட்ட அந்த வீடியோ உரையாடலின்போது சொல்லப்பட்ட தகவலைச் சரிபார்க்க இந்த சேனல் அந்த விவசாயியைச் சந்தித்துப் பேச ஒரு நிருபரையும் அனுப்பி வைத்தது.
சந்திரமணியின் கருத்துக்களைத் திரித்து கூறுவதாக அமைச்சர்கள் குறை கூறியதை அடுத்து, சேனல் நிருபர் ஒருவரை அனுப்பி கிராமத்தில் உள்ள பல தரப்பட்டவர்களின் கருத்துக்களை கேட்டது.
எது உண்மை, எது பொய் எனும் போட்டியில், குறைந்தபட்ச தினக்கூலியில் நான்கில் ஒரு பங்கு மற்றும் உலக வங்கி வறுமைக்கோடு என வகைப்படுத்தும் வருமானத்தில் பாதியை ஈட்டும் ஒரு விவசாயியின் கதையை மத்திய அமைச்சர்கள் வெற்றிக் கதையாகக் கொண்டாடியதுதான் புரிந்துகொள்ள முடியாததாக இருக்கிறது. தி வயர் இதழின் கபீர் அகர்வால், இந்தச் சர்ச்சையை இவ்வாறு விளக்குகிறார்:
பிரச்சினை தொடர்பான செய்தியின் இரண்டாவது பகுதியில், கன்கேரில் உள்ள சுய உதவிக் குழுவில் இடம்பெற்றுள்ள மற்ற பெண்களிடம் ஏபீபி பேசியபோது, அவர்கள் சந்திரமணியின் வருமானம் இரு மடங்கானது என்று கூறியது எப்படி எனத் தெரியவில்லை எனக் கூறினர். “எங்கள்  கைக்காசைப் போட்டிருக்கிறோம். கடந்த 5 ஆண்டுகளில் அதை மீண்டும் பெற முடியவில்லை” என ஒரு பெண்மணி கூறினார். “சந்திரமணி என்ன சொல்கிறார் எனத் தெரியவில்லை. இதில் ஒரு லாபமும் இல்லை” என்று இன்னொருவர் கூறினார்.
சேனல், மகளிர் சுய உதவி குழுவினர் கூறுவது பற்றி சந்திரமணியிடம் கேட்ட போது அவர் மவுனம் காத்தார்.

அரசின் அதிகாரபூர்வத் தகவல்களுக்கு விரோதமாக பாஜ்பாய் செய்தி வெளியிட்டதால் அவர் குறி வைக்கப்படுவதாக சேனலில் உள்ளவர்கள் கருதுகின்றனர். சத்திஸ்கர் செய்தியைத் தொடர்ந்து உண்டான நெருக்கடியால்தான் மிலிந்த் காண்டேகர் ராஜினாமா செய்ய நேர்ந்ததாகக் கூறப்படுகிறது. கிராமப்புறங்களில் காணப்படும் பிரச்சனைகளைத் தீர்க்க அரசு எதுவும் செய்யவில்லை எனும் எண்ணம் பரவலாக இருக்கும்போது இந்தச் செய்தியை மிகவும் பிரச்சினைக்குரியதாக பாஜக கருதுகிறது.
கோயங்காவிடம் மாறுகிறது?
தொழிலதிபர் சஞ்சீவ் கோயங்கா, சர்கார்களிடம் இருந்து இந்த செய்தி சேனலை வாங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்கள் தொடர்ந்து குடும்ப நாளிதழ்களான ஆனந்த் பஜார் பத்திரிகா, டெலிகிராஃப் ஆகியவற்றை நடத்துவார்கள். சஞ்சீவ் கோயங்கா, ஆர்பி-சஞ்சீவ் கோயங்கா குழுமத்தைச் சேர்ந்தவர். இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனர் ராம்நாத் கோயங்கா குடும்பத்துடன் தொடர்புடையவர் அல்ல.
“சஞ்சீவ் சரியான பிசினஸ்மேன். மேற்கு வங்கத்தில் அவர் மம்தாவுக்குத் தலை வணங்குவார், தில்லியில் அமித் ஷாவுக்கும் நரேந்திர மோடிக்கும் சலாம் போடுவார்” என்று பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறினார்.
பாஜ்பாய், சர்மா, காண்டேகர் ஆகியோரைத் தொடர்புகொள்ள வயர் பலமுறை முயன்றது. காண்டேகரும் சர்மாவும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். பாஜ்பாயைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அடிதேப் சர்காருக்கு இது தொடர்பாகக் கேள்விகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவரது பதில் கிடைத்ததும் தெரிவிக்கப்படும்..
நன்றி; தி வயர் (https://thewire.in/media/abhisar-sharma-abp-news-punya-prasun-bajpai-amit-shah-media-censorship)

கருத்துகள் இல்லை: