ஞாயிறு, 29 ஜூலை, 2018

ரஃபேல்: பிரதமரின் நண்பருக்கு ரூ.1 லட்சம் கோடி!

ரஃபேல்: பிரதமரின் நண்பருக்கு ரூ.1 லட்சம் கோடி! மின்னம்பலம்:  ரஃபேல் போர் விமானங்களைப் பராமரிப்பதற்குப் பிரதமரின் நண்பருக்குச் சொந்தமான கூட்டு நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது முதல், விமானத்தின் விலை, பாதுகாப்பு உட்படப் பல அம்சங்கள் குறித்து, தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.
சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், “பிரதமருக்கும் தொழில் அதிபர்களுக்கும் உள்ள பந்தம் குறித்து அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட ஒரு தொழிலதிபருக்கே ரஃபேல் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்தத் தொழிலதிபர் பல ஆயிரம் கோடி பலனடைந்துள்ளார்” என்று ராகுல் குற்றம்சாட்டியிருந்தார்.

ராகுல் பேசியதும் கோபத்துடன் எழுந்து பதிலளித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், “முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணி 2008ஆம் ஆண்டில், ரஃபேல் ஒப்பந்தத்தில் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்ற ஷரத்தில் கையெழுத்திட்டுள்ளார்” என்று தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் (ஜூலை 27) ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “ரஃபேல் விமான ஊழலில் பிரதமர் மோடியின் நண்பருக்கு நேரடியாக 1.30 லட்சம் கோடி ரூபாய் ஆதாயம் கிடைத்துள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து நேற்றும் (ஜூலை 28) தனது ட்விட்டர் பக்கத்தில், “36 ரஃபேல் விமானங்களை 50 ஆண்டுகள் பராமரிக்க மக்கள் பணத்தில் இருந்து ரூ. 1 லட்சம் கோடி பிரதமரின் நண்பருக்குச் சொந்தமான கூட்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
அதோடு ரிலையன்ஸ் நிறுவனத்தின் முதலீட்டுக் குறிப்பு ஒன்றையும் இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாகப் பதிவிட்டுள்ளார். இதையும் வழக்கம்போல் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்கள் சந்திப்பில் மறுக்கக் கூடும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: