செவ்வாய், 31 ஜூலை, 2018

தமிழ் ஊடகத்தினரை குறி வைக்கும் பா.ஜ.க.! -ஆபரேஷன் டி.எம்.ஜி. "Operation Tamil Media Group "

Operation Tamil Media Group
tv-discussionநக்கீரன்  :சி.ஜீவா பாரதி :
கட்டிப்பிடி வைத்தியம் செய்த ராகுலின் நாடாளுமன்றச் செயல்பாடு உலகளவில் ட்ரெண்ட் ஆனதால் பதறிப்போன பா.ஜ.க. தரப்பு, “"ரஷ்யா போன்ற நாடுகளில் எதிரிகளை வீழ்த்த இப்படித்தான் கட்டிப்பிடித்து விஷஊசி குத்திவிடுவார்கள்'’என்கிற அளவுக்குப் பிரச்சாரம் செய்கிறது. எதிர்த்தரப்பு ஒருதுளி அளவுகூட அரசியல் லாபம் பெற்றுவிடக்கூடாது என்பதிலும், தனக்கு எதிராக சிறு விமர்சனம்கூட வெளிப்படக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கும் பா.ஜ.க.வின் பார்வை தமிழ்நாட்டு ஊடகங்கள் மீது தற்போது அழுத்தமாகப் பதிந்துள்ளது.
2014 தேர்தலுக்கு முன்பே, மோடிக்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்தும் ஊடகங்களில் உள்ளவர்களை அவற்றின் நிர்வாகத்தின் உதவியுடன் வெளியில் அனுப்பும் வேலையைக் கச்சிதமாக செய்தது. தேர்தலில் ஜெயித்த பிறகு ஊடகங்களுக்கு எதிராகவும், தனிமனித கருத்து சுதந்திரத்திற்கு எதிராகவும் பல நடவடிக்கைகளில் பா.ஜ.க. இறங்கியது.
reportersஉணவு, உடை, கலாசாரம் என அனைத்திலும் புகுந்து மக்களின் மீது கொடூர தாக்குதலை நடத்தி வருகிறார்கள் பா.ஜ.க.வினரும் அவர்களது ஆதரவு அமைப்பினரும். அத்துடன், மாநில மொழிகளில் உள்ள ஊடகங்கள் மீதும் பார்வை திரும்பியுள்ளது. கொடுத்த வாக்குறுதிகள்-அறிவித்த திட்டங்கள்-மேற்கொண்ட நடவடிக்கைகள் பலவற்றிலும் மோடி அரசு தோல்வியடைந்துள்ள நிலையில், அதுபற்றிய பொதுமக்களின் கருத்துகளை பிரதிபலிக்கக்கூடிய ஊடகவியலாளர்களை அந்தந்த நிறுவனங்களிலிருந்து தனிமைப்படுத்துவது அல்லது முடக்குவது என்பதுதான் பா.ஜ.க.வின் தற்போதைய அசைன்மெண்ட்.


தமிழ் மீடியா குரூப் (பஙஏ) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரகசிய திட்டத்தின்படி ஊடகத்தினரைக் கருத்தியல் ரீதியாக தாக்குவதுடன், மதத்தின் பெயராலும், மொழியின் பெயராலும் தொடர்ந்து குறிவைத்து வருகிறார்கள். தமிழ் சேனல்களில் உள்ள சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த விவாத நெறியாளர்கள், பகுத்தறிவு -முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள், மக்களின் எண்ணங்களின் அடிப்படையில் பா.ஜ.க.வை விமர்சிப்பவர்களை சமூக வலைத்தளங்களில் மோசமான சொற்களால் விமர்சித்து, அதை எல்லாத் தரப்புக்கும் பரப்பி, யாரை குறி வைக்கிறார்களோ அவர்களின் போன் நம்பரையும் கொடுத்து, கொலைவெறித்தனத்துடன் மிரட்டுகிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் பற்றி நிறுவன உரிமையாளர்களுக்கும் அழுத்தம் தந்து வேலையை காலிசெய்யும் பணியும் நடக்கிறது.

இது குறித்து ஊடகவியலாளர் ஆசிஃப் நம்மிடம், “""மீடியா மீதான தாக்குதல்களை இதுவரை சங்கத்தினர் மட்டுமே ஒருங்கிணைந்து எதிர்த்து குரல்கொடுத்து வந்திருக்கிறார்கள். இப்போது மீடியாவில் உயர்மட்டத்தில் இருக்கக்கூடியவர்கள் இணைந்து “"கருத்துச் சுதந்திரத்திற்கான கூட்டணி'’என்ற அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு கருத்து சுதந்திரத்தின் மீதான ஒடுக்குமுறை அதிகமாகி இருக்கிறது. மூத்த பத்திரிகையாளர் என்.ராம் தலைமையிலான கூட்டணி முதல்வரை நேரில் சந்தித்துள்ளது. அடுத்தகட்டமாக கருத்துச் சுதந்திரம் ஒடுக்கப்படுவது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர், மத்திய அளவிலான அமைப்பினரைச் சந்திக்கும் திட்டம் இருக்கிறது. 2014-ஆம் ஆண்டு சன் டி.வி.யின் வீரபாண்டியன், "தி இந்து' பத்திரிகையிலிருந்து சித்தார்த் வரதராஜன் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். தற்போது ஊடகங்கள் மீதான அச்சுறுத்தல் தாண்டி ஊடகவியலாளர்களின் பெயரைக் குறிப்பிட்டே நேரடியாக அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது''’என்று களநிலவரத்தை விளக்கினார்.

பா.ஜ.க. ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு தமிழ்த் தொலைக்காட்சி ஊடகமான புதிய தலைமுறை மீது பல்வேறு காலகட்டங்களில் நேரடியாக பல்வேறு இந்து அமைப்புகள் மூலம் தாக்குதல்கள் தொடர்கின்றன. தீபாவளி பண்டிகை குறித்த விவாதம், தாலி குறித்த விவாதம், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, காவிரி போராட்டம், சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான விவாதம் எனப் பலவற்றிலும் அந்த சேனல் மீது நேரடியாகவும், சமூக வலைத்தளங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கோவையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுபோலவே தமிழில் உள்ள மற்ற சேனல்களுக்கும் தொடர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன.

பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் பிரசாத்தை தொடர்புகொண்டு இதுபற்றி நாம் கேட்டபோது, ""இந்துமத உணர்வுகளைப் புண்படுத்தும் விவாதங்களால்தான் தொலைக்காட்சிக்கு கண்டனத்தையும் செய்தியாளர் மீது நடவடிக்கையும் எடுக்கக்கோரி கோரிக்கை வைத்தோம். "இனி எந்தவொரு மதத்தையும் இழிவுபடுத்தும் வகையில் யாரும் பேசக்கூடாது' என வலியுறுத்தியுள்ளோம்'' என்றார்.

அதே நேரத்தில், எச்.ராஜா போன்ற பா.ஜ.க.வின் தேசிய செயலாளர்களில் தொடங்கி, வெவ்வேறு பெயர்களில் இயங்கிவரும் ஃபேக் ஐ.டி.களும் அட்மின்களும் மிரட்டல் விடுப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. தேர்தல் காலகட்டம் நெருங்கும்போது, தற்போது தமிழ் சேனல்கள் மற்றும் பத்திரிகைகளில் பா.ஜ.க. அரசின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்துவோர் ஒருவரும் இருக்கக்கூடாது என்பதுதான் ஆபரேஷன் டி.எம்.ஜி.யின் இலக்கு. இதற்காகவே ஆன்லைனில் பல குரூப்புகள் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன.

மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் ஊடகங்களின் செயல்பாடுகளை முடக்கிட பா.ஜ.க.வின் டெல்லி மேலிடம் தந்திருக்கும் இந்த அசைன்மெண்ட் பெரும் ஆபத்தானது என்கிற மூத்த பத்திரிகையாளர்கள், "அறிவிக்கப்படாத எமர்ஜென்சி போன்ற இந்த நடவடிக்கையை, ஒத்த கருத்துகள் உடையவர்களை ஒருங்கிணைத்து முறியடிக்க வேண்டும்' என்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: