புதன், 1 ஆகஸ்ட், 2018

கலைஞருக்கு எப்படி சொத்துக்கள் சேர்ந்தது? 18-வயதில் முரசொலி ..1949 இல் மாடர்ன் தியேட்டர்ஸ் .. இன்றுவரை .. ஒரு அலசல்!

Kathirava Maths : கலைஞர் எந்த சொத்துகளையும் கொண்டு
வரவில்லை. சென்னை
வரும்போது திருட்டு ரயில் ஏரி வந்தார் என கூறும் அறிவாளிகளுக்கு 2010 யில் தலைவர் தந்த பேட்டி:
தனது சொத்து விவரங்களை வெளியிட்ட முதல்வர் கருணாநிதி, கோபாலபுரம் வீட்டைத் தவிர எந்த சொத்தும் வாங்கவில்லை என்றும், லஞ்சம் - ஊழலைப் பொறுத்தவரையில், தாம் ஒரு நெருப்பு மாதிரி என்றும் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
சொத்து விவரம் வெளியிடுவது ஏன்?
தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அம்மையார் ஜெயலலிதா தொடங்கி, அந்தக் கட்சியிலே உள்ள அடிமட்டத் தொண்டர்கள் வரையிலும் - ஏன், தமிழகத்திலே உள்ள வேறுசில கட்சிகளின் நண்பர்கள் ஒரு சிலரும் - என்னைப் பற்றி குறிப்பிடும் போது - நான் ஏதோ "சல்லிக்காசு'' கூட கையிலே இல்லாமல் சென்னைக்கு வந்ததைப் போலவும் - இன்றைக்கு ஆசியாவிலேயே முதலாவது பணக்காரனாக இருப்பதாகவும் - என் பெயரில் ஏராளமான சொத்துக்களையும், எஸ்டேட்டுகளையும் வாங்கிக்
குவித்திருப்பதைப் போலவும் பேசி வருகிறார்கள், எழுதி வருகிறார்கள்.
என்னைப் பொறுத்தவரையில் - என்னுடைய சொத்துகள் என்ன என்பதைப் பற்றி குறை கூறுபவர்களுக்கும் - அதை நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கும் ஒரு விளக்கம் அளிக்க வேண்டியது என்னுடைய கடமை என்று கருதுகிறேன். என்னதான் அவர்கள் என் குடும்பத்தைப் பற்றி குறைவாக எழுதினாலும், நான் சிசு பருவத்திலே இருந்த போதே, திருடர்கள் வீடு புகுந்து திருட வருகின்ற அளவிற்கும் - உயர்நிலைப் பள்ளியில் படிக்கவே திருவாரூரில் கொண்டு போய் சேர்க்கக் கூடிய அளவிற்கும் ஓரளவு வசதியுள்ள குடும்பம் தான் என்னுடையது.
முரசொலி தொடங்கி முதல் கார் வரை...
எனக்கு 18 வயதாகும் போது "முரசொலி'' வாரப்பத்திரிகையைத் தொடங்கி விட்டேன். அப்போதே நாடகங்களை எழுதுகின்ற முயற்சியிலும் ஈடுபட்டேன். திராவிடர் கழகப் பிரசாரக் கூட்டங்களிலும் கலந்துகொண்டேன். 1949-ம் ஆண்டு சேலம் மாடர்ன் தியேட்டர்சில் எழுத்தாளராக பணியிலே அமர்ந்தேன்.
அந்தக் காலத்திலேயே அதற்காக மாத ஊதியமாக 500 ரூபாய் பெற்றேன். அதே ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதியன்று ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையிலே தி.மு.கழகம் பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்டபோது, அந்தக் கூட்டத்திலே கலந்துகொண்டேன்.
அந்தக் கூட்டத்திற்கு வந்த போது விருதுநகர் நாடார் லாட்ஜில் தான் தங்கினேன். என்னுடைய "மந்திரி குமாரி'' நாடகம் சேலம் மாடர்ன் தியேட்டர்சாரால் திரைப்படமாக எடுக்கப்பட்ட போது எங்கள் குடும்ப வாழ்க்கை சேலத்தில் தொடங்கியது. அப்போது சேலம் வந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், என்னைச் சந்தித்து அவருடைய "மணமகள்'' திரைப்படத்திற்கு நான் தான் திரைக்கதை வசனம் எழுத வேண்டு மென்று கேட்டு ஒப்புதல் அளித்தேன். அந்தக் காலத்திலேயே அதற்காக 10 ஆயிரம் ரூபாய் ஊதியமாகப் பெற்றேன்.
அதுபோலவே "இருவர் உள்ளம்'' திரைப்படத்திற்காக உரையாடலை நான் எழுதிய போது, அந்தப் படம் நூறு நாளைத் தாண்டி ஓடிய காரணத்தால், அந்தப் படத்தின் தயாரிப்பாளர், அருமை நண்பர் எல்.வி.பிரசாத் என் இல்லத்திற்கே வந்து முதலில் கொடுத்த பத்தாயிரம் ரூபாயைத் தவிர்த்து, மேலும் பத்தாயிரம் ரூபாயை என்னிடம் அளித்தார்.
நான் அந்தத் தொகையைக் கொண்டு என்னுடைய சொந்த ஊரான திருக்குவளையில் என் பெற்றோர் பெயரால் ஒரு தாய் சேய் நல விடுதியினைக் கட்டி, அதை அன்றைய முதல்வர் பெரியவர் பக்தவத்சலனாரை அழைத்துச் சென்று 12-11-1964-ல் திறந்து வைத்தேன். அண்ணாவால் அடிக்கல் நாட்டப்பட்ட அந்தக் கட்டிடத்தின் திறப்பு விழாவுக்கு நாவலர் தலைமை தாங்கினார்.
அப்போது நான் எதிர்க்கட்சியிலே இருந்தபோதிலும், முதல்வரை அழைத்துச்சென்று அந்த நிகழ்ச்சியினைச் சிறப்பாக நடத்தினேன்.
அந்தக் கால கட்டத்தில் சென்னைக்கே நான் குடிபெயர்ந்து தியாகராயநகரில் ஒரு வாடகை வீட்டில் குடும்பம் நடத்தினேன். அப்போது ஒரு நாள் கலைவாணர் என்னிடம் ஒரு பந்தயம் கட்டி, அதிலே ரூ.5 ஆயிரம் எனக்கு லாபம் கிடைத்தது. அது கண்டு வியப்பும், மகிழ்ச்சியும் அடைந்த கலைவாணர் அதற்குமேல் தேவையான பணத்தைத் தானே போட்டு எனக்கு ஒரு கார் வாங்கித் தருவதாகச் சொல்லி விட்டுச் சென்றார். மறுநாளே ஒரு புதிய கார் என் வீட்டிற்கு வந்தது. அதிலே என்னை உட்கார வைத்து, கலைவாணரே ஸ்டுடியோவிற்கு அழைத்துச் சென்றார். அந்தக் காரின் எண் கூட எனக்கு நினைவிலே உள்ளது - "வாக்சால்'' -4983.
Advertisement
75 படங்கள்...
இவைகளைத் தொடர்ந்து இன்று வரை 75 படங்களுக்கு மேல் நான் திரைக்கதை வசனம் எழுதி ஊதியம் பெற்றுள்ளேன். 1957-ம் ஆண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் குளித்தலை தொகுதியில் நின்று சட்டப் பேரவை உறுப்பினராக ஆனது முதல் இதுவரை தொடர்ந்து பேரவை உறுப்பினராகவோ, மேலவை உறுப்பினராகவோ இருந்து வருகிறேன். முரசொலி நாளிதழும் எத்தனையோ ஏற்ற இறக்கத்துடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கிழமை இதழ்களாக குங்குமம், முத்தாரம், வண்ணத் திரை போன்றவைகளும், "ரைசிங் சன்'' ஆங்கில இதழும் நான் தொடங்கியவைதான்.
வசதியற்ற வீடு...
1967 முதல் 1969 வரை பொதுப்பணித்துறை அமைச்சராகவும், அதன் பின்னர் ஐந்து முறை முதல்வராகவும் இருந்திருக்கிறேன். இந்தியாவிலே உள்ள அனைத்து மாநில முதல்வர்களையும் எடுத்துக்கொண்டால் எல்லா முதல்வர்களுடைய வீடுகளையும் விட வசதி குறைவான எளிமையான வீட்டிலேதான் நான் வாழ்ந்து வருகிறேன் என்பதை வெளிநாட்டிலிருந்து வந்த முக்கிய பிரமுகர்களே நேரில் கண்டு வியப்பு தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர்களைச் சந்திக்கக் கூட இடம் இல்லாத அளவிற்கு அவர்களே மிகுந்த சிரமத்திற்கு ஆளாகக்கூடிய வகையிலே உள்ள வீட்டிலேதான் இன்றளவும் வாழ்ந்து வருகிறேன். ஒவ்வொரு முறை முதல்-அமைச்சராக நான் தேர்ந்தெடுக்கப்படும் போதும் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவியேற்போர் - தம்பி துரைமுருகன் போன்றவர்கள் - அரசு சார்பில் உள்ள வீடுகள் ஒன்றில் நான் தங்க வேண்டுமென்று கேட்டு அழைத்துச் சென்றும் காட்டியிருக்கிறார்கள். எனினும் நான் தங்கி வந்த அதே "ஸ்ட்ரீட் வீடு'' என்பார்களே, அதாவது தெருவில் வரிசையாக உள்ள வீடுகளில் உள்ள ஒரு வீட்டிலேதான் வசித்து வருகிறேன்.
இந்த வீடு கூட நான் அமைச்சராக ஆவதற்கு முன்பு 45 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய வீடுதான். அந்த வீட்டிலே ஒரு சில மாற்றங்கள் உதவியாளர்களின் வசதிக்காக செய்யப்பட்டிருக்கலாம். என் பிள்ளைகள் எல்லாம் கூட திருமணம் ஆகும் வரைதான் இந்த வீட்டிலே இருந்தார்கள். அதற்குப் பிறகு இந்த வீட்டிலே இடம் இல்லாமல் அவர்களே சொந்தத்தில் வீடு வாங்கிக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.
Advertisement
என்னிடம் செய்திகளைச் சேகரிக்க வரும் பத்திரிகையாளர்கள் இந்த வீட்டிலே என்னைச் சந்திக்கும் போது எவ்வளவு இன்னலுக்கு நெரிசல் காரணமாக ஆளாகிறார்கள் என்பதை அவர்களே நன்கறிவார்கள். ஆனால் அந்தப் பத்திரிகையாளர்கள் கூட நான் இத்தனை ஆண்டுக் காலம் இத்தனைப் பொறுப்புகளிலே இருந்தும் கூட, இவ்வளவு எளிமையாக இதே வீட்டில் வாழ்கிறேன் என்பதைப் பற்றி அவர்களே அதை உணர்ந்திருந்த நிலையிலும் அதைப் பற்றி எழுதாமல், அதிலேயும் ஒரு சிலர் - என்னைப் பற்றி அவதூறாக நான் பணக்காரன் என்று எதிர்தரப்பினர் விமர்சனம் செய்வதை எழுதும்போது - அவர்கள் கூட அதை நம்புகிறார்களா என்ற வேதனை என் மனதிலே தோன்றாமல் இருப்பதில்லை.
நான் இத்தனை பொறுப்புகளையும் என்னுடைய 87 வயதிற்குள் பார்த்திருக்கிறேன் என்ற போதிலும் சென்னையில் உள்ள இந்த ஒரு வீட்டைத் தவிர வேறு பெரிய வீடுகளையோ, தோட்டங்களையோ, எஸ்டேட்டுகளையோ விலைக்கு வாங்கியதும் இல்லை. அரசு நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டதும் இல்லை. குறைந்த விலைக்கு பெற்றுக்கொண்டதும் இல்லை. ஆனால் என்னை ஆசியாவிலேயே பெரிய கோடீஸ்வரன் என்றெல்லாம் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள்.
ரூ.100 கோடி...
முரசொலி மாறன் மறைவுக்கு பின்னர் சன் தொலைக்காட்சி நிறுவனத்தை தனியாக நடந்த விரும்பி கேட்டதால் நானும் அதற்கு உடனடியாக ஒப்புகொண்டேன். அப்படி பிரிந்து சென்ற நேரத்தில் 2005-ம் ஆண்டு அக்டோபர் மாதம், "சன்'' தொலைக் காட்சி நிறுவனத்தின் சார்பில் எனக்கு 100 கோடி ரூபாய் கொடுத்தார்கள். அந்தத் தொகைக்கான வருமான வரியாக 22 கோடியே 50 லட்சம் ரூபாய் உரிய காலத்தில் முறைப்படி என்னால் செலுத்தப்பட்டுள்ளது. எஞ்சிய தொகையான 77 கோடியே 50 லட்ச ரூபாயை என்னுடைய மகன்களுக்கும், மகள்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்தேன். அதிலே எனக்கும் ஒரு பங்காக பத்து கோடி ரூபாய் கிடைத்ததில், ஐந்து கோடி ரூபாயை வங்கியிலே இருப்பு செய்து, அந்தத் தொகையைக் கொண்டு "கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை'' ஒன்று தொடங்கப்பட்டு, அதிலே கிடைக்கின்ற வட்டித் தொகையிலே இருந்து ஏழை-எளியோர்க்கு மருத்துவ உதவியாகவும், கல்வி வளர்ச்சி உதவியாகவும் 8.12.2005 முதல் 8.11.2010 வரை 2,145 பேர்களுக்கு 1 கோடியே 72 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் வழங்கியிருக்கிறேன்.
வங்கியில் இருப்பு செய்யப்பட்ட இந்த ஐந்து கோடி ரூபாயில் -ஆண்டுதோறும் நல்ல புத்தகங்களை, சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகள் தாங்கிய புத்தகங்களை, எதிர்கால இளைஞர்களுக்கு ஆக்கபூர்வமாக வழிகாட்டுகின்ற அறிவார்ந்த புத்தகங்களை எழுதும் சிறந்த எழுத்தாளர்கள் ஐந்து பேரைத் தேர்வு செய்து, அவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் - பொற்கிழியாக வழங்கிட தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்திற்கு ஒரு கோடி ரூபாய் வழங்கினேன்.
அந்த ஒரு கோடி ரூபாய் நிதியைக் கொண்டு, அந்தச் சங்கம் "கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி அறக்கட்டளை'' என்ற பெயரில் ஓர் அறக்கட்டளையை ஏற்படுத்தி, அதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகையில் இருந்து, 2008-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் அந்தச் சங்கத்தின் மூலமே சிறந்த எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு 2008, 2009, 2010 ஆகிய மூன்றாண்டுகளில் மொத்தம் இது வரை 17 அறிஞர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் பொற்கிழிகள் வழங்கப்பட்டுள்ளன.
செம்மொழி மாநாடு...
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத் தொடக்க விழா 30.6.2008 அன்று நடை பெற்ற போது ஆண்டுதோறும் செம்மொழித் தமிழ் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் அறிஞருக்கு 10 லட்ச ரூபாய் பொற்கிழி விருது வழங்கிட ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என நான் அறிவித்து, அதன்படி செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் "கலைஞர் கருணாநிதி செம்மொழி அறக்கட்டளை'' தொடங்கிட 21.7.2008 அன்று ஒரு கோடி ரூபாய் வழங்கினேன்.
கோவையில் செம்மொழி மாநாடு நடைபெற்றபோது, பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலா அவர்களுக்கு இந்த அறக்கட்டளையின் முதல் விருதாக பத்து லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.
2004-2005-ம் ஆண்டில் "மண்ணின் மைந்தன்'' படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியதன் மூலம் கிடைத்த ஊதியம் 11 லட்சம் ரூபாய் - "கண்ணம்மா'' படத்திற்குத் திரைக்கதை வசனம் எழுதியதன் மூலம் கிடைத்த ஊதியம் 10 லட்சம் ரூபாய் இரண்டையும் சேர்த்து 21 லட்சம் ரூபாயை "சுனாமி நிவாரண நிதி''யாக அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம், மு.க.ஸ்டாலின் வாயிலாக நேரில் வழங்கப்பட்டது.
உளியின் ஓசை...
2008-ம் ஆண்டு, "உளியின் ஓசை'' திரைப்படத்தின் மூலம் கிடைத்த ஊதியம் 25 லட்சம் ரூபாயில் வருமானவரி போக, 18 லட்சம் ரூபாய் திரைத்துறையிலே பணியாற்றிய நலிந்த கலைஞர்களுக்கு 9.7.2008 அன்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர், ராம.நாராயணன் முன்னின்று ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் என்னால் நேரடியாக வழங்கப்பட்டது.
2009-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட "பெண் சிங்கம்'' திரைப்படத்திற்காகக் கிடைத்த 50 லட்சம் ரூபாயுடன், சொந்த நிதி 11 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் சேர்த்து - 14-9-2009 அன்று தமிழக அரசின் முதல்-அமைச்சர் நிவாரண நிதியிலே சேர்த்து, தமிழகத்திலே உள்ள அருந்ததிய சமுதாயத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்வி பயிலும் 56 மாணவர்கள், பொறியியல் கல்லூரிகளில் பயிலும் 1,165 மாணவர்கள் என மொத்தம் 1,221 மாணவ -மாணவியருக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் 61 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் கல்வி வளர்ச்சி நிதியாக 26.10.2009 அன்று தூய்மைப் பணிபுரிவோர் நலவாரியத்தின் மூலமாக வழங்கப்பட்டது.
மேலும், தற்போது தயாரிக்கப்பட்டுவரும் "இளைஞன்'' திரைப்படத்திற்குரிய கதை வசனம் எழுதியமைக்கு 24.4.2010 அன்று வருமானவரி போக அளிக்கப்பட்ட 45 லட்சம் ரூபாய் ஊதியத்தைத் தமிழக அரசின் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலே ஒப்படைத்து, அந்தத் தொகையினை - தமிழகத்திலே உள்ள மாற்றுத் திறனாளிகள் நல வாரியத்தின் வாயிலாக மாற்றுத் திறனாளிகளின் நலன்களுக்காகச் செலவிட வழங்கப்பட்டது.
23.7.2009 அன்று நடைபெற்ற கலைஞர் காப்பீட்டுத் திட்டத் தொடக்க விழாவில் உரையாற்றிய பொழுது சென்னை கோபாலபுரத்தில் நான் வசித்து வருகின்ற வீட்டை, பிற்காலத்தில் ஏழை-எளியோர்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் மருத்துவமனையாக மாற்றிட நன்கொடையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதன்படி உரிய பத்திரப்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.
14.4.2010 அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக சென்னை மறைமலைநகரில் நடைபெற்ற அம்பேத்கார் பிறந்தநாள் விழாவில் "அம்பேத்கார் சுடர்'' எனும் விருது எனக்கு வழங்கப்பட்ட நிகழ்ச்சியில் தரப்பட்ட 50 ஆயிரம் ரூபாய் பொற்கிழியினை 15.4.2010 அன்று முதல்-அமைச்சர் பொதுநிவாரண நிதியில் சேர்க்க என்னால் வழங்கப்பட்டது.
25.5.1990 அன்று தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சார்பாக - "தென்பாண்டிச் சிங்கம்'' என்ற பெயரில் நான் எழுதிய நாவல் சிறந்த புதினமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்காக "ராஜராஜன் விருது''ம், அந்த விருதுக்குரிய ஒரு லட்ச ரூபாய் பொற்கிழியும் எனக்கு அன்றைய குடியரசுத் துணைத் தலை வராக இருந்த சங்கர் தயாள் சர்மா ஆளுநராக அப்போதும் இருந்த பர்னாலா முன்னிலையில் வழங்கப்பட்ட போது, அந்த நிதியை அந்தப்பல்கலைக் கழகத்திடமே திரும்பக் கொடுத்து, அந்தத் தொகைக்குரிய வட்டியினைக் கொண்டு ஆண்டு தோறும் என் பெற்றோர் பெயரால் அறக்கட்டளை சொற்பொழிவுகளை நடத்துமாறு கேட்டுக்கொண்டேன். இந்த ஆண்டு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அந்தச் சொற்பொழிவுகள் நடைபெற்றன.
பிறந்தநாள் விழா...
என்னுடைய பிறந்த நாளன்று மாலைக்குப் பதிலாகவும், பொன்னாடைக்குப் பதிலாகவும் கழகத் தோழர்கள் அளித்த நிதியையும் கூட முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலே தான் சேர்த்திருக்கிறேன். 3.6.1986 அன்று என்னுடைய பிறந்த நாள் விழாவின்போது உண்டியலில் குவிந்த 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை இலங்கை விடுதலைப் போராளிகள் இயக்கங்களுக்கு பகிர்ந்தளிப்பது என்று கழகப் பொதுக் குழுவிலேயே முடிவெடுத்து அவ்வாறே வழங்கப்பட்டது. அதைப் போலவே என்னுடைய வேறு சில பிறந்த நாள்களில் உண்டியலில் குவிந்த நிதிகளிலிருந்து மறைமலை நகரில் (காட்டாங்குளத்தூர்) உள்ள சிவானந்த குருகுலத்தில் பயிலும் சிறுவர்களின் கல்வி செலவுகளுக்காக 13.6.1988-ல் 50 ஆயிரம் ரூபாயும், 7.6.1993-ல் 70 ஆயிரம் ரூபாயும், 6.6.1996-ல் ஐந்து லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டன. மேலும் 1994-ம் ஆண்டு பிறந்த நாளில் அளிக்கப்பட்ட நிதி பெங்களூரில் உள்ள தமிழ்ச் சங்கத்திற்கு என்னால் வழங்கப்பட்டது.
நான் கலந்து கொள்ளும் பல்வேறு நிகழ்ச்சிகளில் எனக்கு பல்வேறு பரிசுப் பொருள்கள் வழங்குவதுண்டு. அவற்றைக்கூட அரசு விழாக்களில் அவைகள் வழங்கப்பட்டால், அவற்றை தலைமைச் செயலகத்திலும், கட்சி நிகழ்ச்சிகளிலே வழங்கப்பட்டவை என்றால் அவற்றை கழகத் தலைமைக் கழகம், அண்ணா அறிவாலயத்திலே உள்ள கருவூலத்திலும் ஒப்படைத்திருக்கின்றேன். லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள, தங்க நாணயங்கள் கோர்க்கப்பட்ட மாலைகள், வெள்ளியிலான பல்வேறு பொருள்கள் எல்லாம் இப்போதும் அண்ணா அறிவாலயத்தில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருப்பதை யார் வேண்டுமானாலும் சென்று காணலாம்.
சொத்துகளே வாங்கவில்லை...
இறுதியாக தற்போது என் கணக்கிலே எவ்வளவு இருப்பு உள்ளது என்பதையும் நான் தெரிவிக்க விரும்புகிறேன். 'சன்' தொலைக்காட்சி வாயிலாக எனக்குக் கிடைத்த பத்து கோடி ரூபாயில் "கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை''க்காக ஐந்து கோடி ரூபாய் கொடுத்ததைப் பற்றி நான் முதலில் குறிப்பிட்டிருப்பதைப்போல கொடுத்ததை அன்னியில் - எஞ்சிய 5 கோடி ரூபாயை வைப்பு நிதியாக வங்கியிலே செலுத்தி, அதற்காக கிடைத்த வட்டித்தொகையெல்லாம் சேர்ந்து -தற்போது வைப்பு நிதியாக 5 கோடியே 65 லட்சத்து 92 ஆயிரத்து 134 ரூபாயும் - சேமிப்புக்கணக்கில் (எஸ்.பி. அக்கவுண்ட்) 35 லட்சத்து 90 ஆயிரத்து 86 ரூபாயும் இன்றைய தேதியில் உள்ளது.
நான் வசிக்கின்ற இந்த வீட்டைக் கூட மருத்துவமனை அமைப்பதற்காக எழுதிக் கொடுக்க நான் அறிவித்த போது - நான் வாழ்ந்த இல்லம் என்பதற்காக இதை வைத்துக் கொள்ள வேண்டுமென்று வீட்டார் எண்ணிய போதும், நான் அழைத்து அவர்களை கையெழுத்திட்டுத் தருமாறு கேட்டபோது மறுவார்த்தை பேசாமல் கையெழுத்திட்டுக் கொடுத்துவிட்டார்கள். இந்த ஒரு வீட்டைத் தவிர என் பெயரில் நான் எந்தச் சொத்தையும் வாங்கிடவில்லை, சேர்த்திடவில்லை.
தமிழ்த் திரைப்பட உலகத்திலே திரைக்கதை வசனம் எழுதுவதற்காக முதன் முதலில் அதிக ஊதியம் பெற்றவன்; தி.மு. கழகத்திலே சென்னையில் முதன் முதலில் சொந்தமாக ஒரு வீடும், காரும் - நான் எந்தப் பதவி பொறுப்புக்கும் வராத போதே வாங்கியவன் என்ற பெயர் எனக்கு உண்டு என்பதை அனைவரும் அறிவர்.
இதுதான் என்னுடைய சொத்துக் கணக்கு. இதை வைத்துத்தான் நான் ஆசியாவிலேயே முதல் கோடீஸ்வரன் என்கிறார்கள். லஞ்சம், ஊழல் ஆகியவைகளைப் பொறுத்தவரை, என் உதவியாளர்கள் கூறுவது போல நான் ஒரு "நெருப்பு'' மாதிரி! நான் முதன் முறையாக முதல்வராக இருந்தபோதே தஞ்சையில் கூட்டுறவு நிறுவனம் ஒன்றில் எனக்கு மிகவும் வேண்டிய உயிர் நண்பர் வழக்கறிஞர் தவறு செய்த போது, அவர் மீது நடவடிக்கை எடுத்து, அதன் காரணமாக அவர் தனது வழக்கறிஞர் பணியினையே செய்ய முடியாத அளவிற்கு ஆயிற்று! அது போலவே தான் சென்னை மாநகராட்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் பொறுப்பிலே இருந்தபோது, "மஸ்டர் ரோல்'' ஊழல் நடைபெற்றதாக பேரவையிலே குற்றச்சாட்டுகள் கூறப்பட்டபோது, சட்டப்பேரவையிலேயே எழுந்து அந்த மாநகராட்சி மன்றம் கலைக்கப்படும் என்றும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்து அவ்வாறே செயல்முறை படுத்தியவன்தான் நான்.
சிபாரிசுக்கு இணங்கவில்லை...
இன்னும் சொல்லவேண்டுமேயானால் எனக்கு மிகவும் வேண்டிய நண்பர்களில் ஒருவர் கவிஞர் கருணானந்தம். அவருடைய ஒரே மகன் குலோத்துங்கனுக்கு மருத்துவக் கல்லூரியில் சேர ஒரு மதிப்பெண் குறைந்தது. முதல்வர் மனது வைத்தால் சேர்த்துக்கொள்ளலாம் என்று கேட்டபோது கூட நான் அதற்கு இணங்கவில்லை. அதனால் அந்தக் குடும்பத்துக்கு என் மீது எழுந்த கோபம் இன்னும் தீரவில்லை. இதுபோன்ற சம்பவங்களை நான் எழுதிக் கொண்டே போகலாம்.
நான் இதையெல்லாம் எழுதுவதற்குக் காரணம் யாரிடமும் சான்றிதழ் பெறவேண்டும் என்பதற்காக அல்ல, என்னுடைய குணம், இயல்பு அப்படி என்பதை என் மீது குறை காண்போர் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.
என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், உற்றார் உறவினர்கள் அவரவர்கள் உழைத்து, ஒரு சிலர் தங்களுக்கென வீடுகளையோ, சொத்துக்களையோ வாங்கியிருக்கலாம். ஆனால் அதற்காக நான் எந்த விதமான நிதி உதவியோ, அரசு சார்பிலான உதவியோ செய்தது இல்லை என்பதையும் இந்த நேரத்தில் நான் உறுதிப் படுத்திட விரும்புகிறேன்.
நான் பல முறை சொல்லியிருப்பது போல மிக மிகச் சாதாரணமான, சாமான்யமான குடும்பத்திலே பிறந்த என்னை, இந்த அளவிற்கு தமிழ்நாட்டு மக்களுக்காக உழைப்பேன் என்ற நம்பிக்கையோடு ஐந்து முறை முதல்வராக்கி, 1957 முதல் 11 முறை சட்டமன்ற உறுப்பினராக்கி, 1969 முதல் நாற்பதாண்டு காலத்திற்கு மேலாக ஒரு கட்சியின் தலைவராக்கி இருக்கிறார்கள் என்றால், திராவிடத் தமிழ் மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி செலுத்துகின்ற நேரத்தில் என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் என்பதை அவர்களுக்கெல்லாம் தெளிவாக்கிடவும், என் மீது இன்னமும் குறை காண்கின்ற ஒரு சிலரும் என்னைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளேன். என் எஞ்சியுள்ள காலத்தையும் திராவிடத் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காகவே செலவிடுவேன் என்று உறுதி கூறி - என்றைக்கும் ஏழையெளிய மக்களின் கவலை தீர்ப்பதையும், கண்ணீர் துடைப்பதையும் கடமையாகக் கொள்வேன் என்பதற்காகவே இந்தக் கணக்கைக் காட்டியிருக்கிறேன், கண்ணுடையோர் காண்பதற்காக! முகத்தில் இரண்டு புண்ணுடையோர்க்கல்ல...
Via Kathirava Maths

கருத்துகள் இல்லை: