புதன், 1 ஆகஸ்ட், 2018

காவேரி ... அழகிரி ரஜினி வெவகாரமா? ... அதிமுக அமைச்சர்கள் தொடர்ந்து காவேரிக்கு .. இதுவும் வெவகாரமா?

டிஜிட்டல் திண்ணை: கலைஞருடன் சந்திப்பு, அதிமுகவில் சலசலப்பு! மின்னம்பலம் : நேற்று ரஜினி, இன்று விஜய் எனத் தொடர்ந்து கலைஞரின் உடல்நிலை பற்றி விசாரிக்க, காவேரி மருத்துவமனைக்கு சினிமா பிரபலங்களும் வந்தபடியே இருக்கிறார்கள். இதுவரை கலைஞரின் உடல்நிலை பற்றி விசாரிக்கப் போனவர்கள் எல்லோருமே ஸ்டாலினையும், கனிமொழியையும்தான் சந்தித்துப் பேசினார்கள். அந்தப் புகைப்படங்களும் வீடியோவும் மட்டும்தான் மீடியாவுக்கும் கொடுக்கப்பட்டன. நேற்றுதான் முதல் முறையாக அழகிரியுடன் ரஜினி பேசும் படம் வெளியானது. ஆனால் அந்தப் படத்தை திமுக தரப்பு வெளியிடவில்லை.
நேற்று வெளிநாட்டு ஷூட்டிங் முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி, விமான நிலையத்திலிருந்து நேராக காவேரி மருத்துவமனைக்குத்தான் வந்தார். வந்தவர், முதலில் சந்தித்தது அழகிரியைத்தான். அப்போது, அழகிரியின் மகன் துரை தயாநிதி உடன் இருந்திருக்கிறார். ரஜினியும் அழகிரியும் பேசும் படங்களைத் தனது செல்போனில் எடுத்தவரும் துரை தயாநிதிதான். ‘தலைவர் எப்படி இருக்காரு..?’ என ரஜினி விசாரித்தபோது, ’இப்போ பரவாயில்லை... நல்லா இருக்காரு. அவரு தூங்கிட்டு இருக்காரு. அதனால யாரும் டிஸ்ட்ரப் பண்றதில்லை. இன்ஃபெக்‌ஷன் ஆகும் என்பதால் அடிக்கடி யாரும் பார்க்க வேண்டாம்னு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க...’ என அழகிரி சொல்லியிருக்கிறார்.

அதன் பிறகுதான் ஸ்டாலினும், கனிமொழியும் இருந்த அறைக்கு ரஜினி வந்திருக்கிறார். உதயநிதி ஸ்டாலினும் அப்போது உடன் இருந்திருக்கிறார். ஸ்டாலின் பெரிதாக எதுவும் ரஜினியிடம் பேசவே இல்லையாம். ‘அப்பா நல்லா இருக்காரு..’ என்று மட்டுமே சொல்லியிருக்கிறார். உதயநிதிகூட ரஜினியோடு முகம் கொடுத்துப் பேசவே இல்லை, அமைதியாகவேதான் இருந்தார் என்றும் சொல்கிறார்கள். கனிமொழி மட்டும்தான், ரஜினியிடம் கலைஞர் உடல்நிலை பற்றிய சில விளக்கங்களைச் சொன்னதுடன், வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்திருக்கிறார். அந்த எஃபெக்டில்தான், மருத்துவமனையிலிருந்து வெளியே வந்து மீடியாவிடம் பேசியபோது பெரிதாக எதுவும் ரியாக்‌ஷன் காட்டாமல் பேசினார் ரஜினி. ‘கலைஞர் தூங்கிட்டு இருக்காரு...’ என அழகிரி சொன்ன வார்த்தைகளை அப்படியே மீடியாவிடம் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார்.
காரில் புறப்பட்ட பிறகுதான், இது சம்பந்தமாக ரஜினியிடம் சொல்லியிருக்கிறார்கள். ‘நான் காரிலிருந்து இறங்கியதும் என்னை மேலே கூட்டிட்டுப் போனவங்க நேராக அழகிரி இருக்கும் ரூமுக்குத்தான் கூட்டிட்டுப் போனாங்க. யாரு எந்த ரூம்ல இருக்காங்கன்னு எனக்கு எப்படித் தெரியும்? உள்ளே போன பிறகுதான் அழகிரி அங்கே இருப்பது எனக்குத் தெரியும். எப்படி இருந்தாலும் அவரும் கலைஞரோட பிள்ளைதானே... பார்த்து நலம் விசாரிச்சுட்டு வந்ததுல என்ன தப்பு இருக்கு? ஹாஸ்பிட்டல்லயும் அரசியலா?’ எனச் சிரித்திருக்கிறார் ரஜினி” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ். அதற்கு லைக் போட்டதுடன், அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது வாட்ஸ் அப்.


“கலைஞரை முதல் நாள் வீட்டுக்கு சென்று ஓபிஎஸ், ஜெயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள் பார்த்து வந்தார்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி போய்ப் பார்த்தார். துணை முதல்வர் உள்ளிட்ட சில அமைச்சர்களும் போனார்கள். அதன் பிறகு சபாநாயகர் தனபால் போனார். அமைச்சர் செல்லூர் ராஜு போனார். பிறகு ஓ.எஸ்.மணியன் போனார். இப்படியாக தினமும் திமுகவினருக்கு இணையாக அதிமுக அமைச்சர்களும் காவேரி மருத்துவமனைக்கு வருவதும் போவதுமாகவே இருக்கிறார்கள். இது தொடர்பாக முன்னாள் அமைச்சரான கேபி முனுசாமி, துணை முதல்வர் பன்னீரிடம் பேசியிருக்கிறார். ‘நீங்க போனீங்க... எடப்பாடி போனாரு. விசாரிச்சுட்டு வந்தாச்சு. அதோடு நிறுத்திக்க வேண்டியதுதானே... எதுக்கு தினமும் ஒவ்வொரு அமைச்சராக ஹாஸ்பிட்டல் போயிட்டு இருக்காங்க? வெளியில இருந்து பார்க்கிறவங்க இவங்க எதுக்கு தினமும் போய்ட்டு இருக்காங்கன்னு பேசுறாங்க. கட்சிக்காரங்களே முகம் சுளிக்கிறாங்க...’ என்று சொல்லியிருக்கிறார்.

அதற்குப் பன்னீரோ, ‘நீங்க சொல்றது சரிதான்... நான் முதல்வர்கிட்ட பேசுறேன்...’ என்று சொன்னாராம். இன்று எடப்பாடியிடம் இது தொடர்பாக பன்னீரும் பேசியிருக்கிறார். அதற்கு எடப்பாடி, ‘போய் பார்த்துட்டு வந்தா என்ன தப்பு இருக்கு? போறவங்க போய்ட்டு வரட்டும்; யாரையும் எதுவும் சொல்ல வேண்டாம். நான் கலைஞரைப் பார்க்கப் போனபோதுகூட, சில விமர்சனம் வந்துச்சு. இவரு எதுக்கு தலைவர்னு சொல்றாரு.. கலைஞர்னு சொல்றாருன்னு கேட்டாங்க. ஆயிரம் இருந்தாலும் அவரு வயசுல மூத்தவரு. அம்மா இருந்தவரைக்கும் அம்மாவா, கலைஞரா என்ற போட்டி இருந்துச்சு. இப்போ நமக்கு அவரு போட்டி இல்லை. நமக்கு ஸ்டாலின்தான் போட்டி. அதனால கலைஞர்னு சொல்றதுலயும் தப்பு இல்லை. அவரைப் போய்ப் பார்க்கிறதுலயும் தப்பு இல்லை...’ என்று சொல்லிவிட்டாராம். இதைப் பன்னீர் கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்லையாம். ஆனால், பதில் எதுவும் சொல்லமுடியாமல் கிளம்பி வந்துவிட்டாராம் பன்னீர்”

கருத்துகள் இல்லை: