வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

கோவையில் 6 பேரை காரால் மோதி கொன்றவன் குடிபோதையில் இருந்தது நிருபணம்

ஆர்.கிருஷ்ணகுமார் tamil.thehindu.com : கோவையில் அதிவேகமாக காரை
ஓட்டி 6 பேர் இறப்பதற்குக் காரணமாக இருந்த சொகுசு கார் ஓட்டுநர், குடிபோதையில் வாகனத்தை ஓட்டியது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர் மீது கூடுதல் பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்தவர் ஜெகதீஷ்குமார்(34). கோவை ஈச்சனாரியில் உள்ள பிரபல தனியார் கல்லூரி உரிமையாளரிடம் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை கல்லூரியிருந்து, போத்தனூரில் உள்ள கல்லூரி உரிமையாளர் வீட்டுக்கு காரில் புறப்பட்டுள்ளார் ஜெகதீஷ்குமார். மிகுந்த வேகத்துடன் காரை ஓட்டிய ஜெகதீஷ்குமார், சுந்தராபுரம் ஐயர் ஆஸ்பத்திரி பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது நிலைதடுமாறி, சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதியுள்ளார்.
இதில், கல்லூரி மாணவி உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, ஜெகதீஷ்குமாரைக் கைது செய்தனர்.
காரை ஓட்டியபோது அவர் குடிபோதையில் இருந்தாரா என்று விசாரித்தபோது, இல்லை என மறுப்புத் தெரிவித்துள்ளார். எனினும், முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால், கோவை அரசு மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனை மேற்கொண்டனர்.
இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையர் கே.பெரியய்யா 'இந்து தமிழ்' செய்தியாளரிடம் கூறியதாவது: ரத்தப் பரிசோதனைக்குப் பின்னர், தான் போதையில் இருந்ததாக டாக்டர்கள் முன்னிலையில் ஜெகதீஷ்குமார் ஒப்புக்கொண்டுள்ளார். ஏற்கெனவே, அதிவேகமாக வாகனத்தை ஓட்டியது, விபத்தால் காயம் ஏற்படும் எனத் தெரிந்தும், அலட்சியமாக காரை ஓட்டியது, 6 பேர் இறக்கும் வகையில் வாகனத்தை இயக்கியது உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, மது அருந்திய நிலையில் வாகனத்தை ஓட்டிய பிரிவின்கீழும் கூடுதலாக மற்றொரு வழக்கை பதிவு செய்துள்ளோம். மேலும், ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இறந்த காரணத்தால், அவரது வாகன
ஓட்டுநர் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்யுமாறும், வட்டாரப் போக்குவரத்துத் துறைக்கு பரிந்துரை செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வேதனையில் மக்கள்
விபத்தில் இறந்தவர்களில் பெரும்பாலானோர் சுந்தராபுரம், குறிச்சி பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த வேதனைக்குள்ளாகியுள்ளனர். பல இடங்களில் 6 பேர் இறப்பு தொடர்பாக கண்ணீர் அஞ்சலி பிளக்ஸ் பேனர்கள், போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. பொள்ளாச்சி-கோவை பிரதான சாலையில் கூடுதலாக வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, வேகமாக வாகனங்களில் செல்வோர் எச்சரிக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை: