சனி, 21 ஜூலை, 2018

அதிமுக-பாஜக: மர்மக் கூட்டணி அம்பலமாகிவிட்டது!

அதிமுக-பாஜக: மர்மக் கூட்டணி அம்பலமாகிவிட்டது!மின்னம்பலம்: நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வாக்களித்ததன் மூலம், அதிமுக-பாஜக இடையேயான மர்மக் கூட்டணி அம்பலமாகி விட்டதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்காததைக் கண்டித்து, மத்திய பாஜக அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தது. தீர்மானத்தின் மீது நேற்று பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மத்திய அரசைக் கடுமையாக விமர்சனம் செய்தனர். அதிமுக எம்.பி வேணுகோபால் பேசுகையில், மத்திய அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக குற்றம் சாட்டினார்.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், ஆதரவாக 126வாக்குகள் மட்டுமே பதிவானதால் தீர்மானம் தோல்வியடைந்தது. தீர்மானத்திற்கு எதிராக பாஜக அரசை ஆதரித்து அதிமுக உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் திமுக செயல்தலைவர் ஸ்டாலின்.
இன்று ( ஜூலை 21) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய பாஜக அரசிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்காமல், தமிழக மக்களுக்கு மாபெரும் துரோகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இழைத்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.
மாநிலத்தின் அதிகாரங்களை அபகரித்து சர்வாதிகார முறையில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது மத்திய பாஜக அரசு. தமிழகத்தின் முக்கியத் திட்டங்களுக்கு அது நிதி ஒதுக்கவில்லை என்றும் விமர்சனம் செய்துள்ள ஸ்டாலின், ”தன் சம்பந்தியின் "பார்ட்னர்" வருமான வரித்துறை சோதனையில் சிக்கிக் கொண்டார் என்ற ஒரே காரணத்திற்காக, மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக வாக்களித்து, தன்னை எப்படியாவது ஊழல் வழக்குகளில் இருந்து காப்பாற்றி விடுங்கள் என்று சுயநலத்தின் உச்சமாக விண்ணப்பம் வைத்திருக்கிறார் முதலமைச்சர்” என்று விமர்சித்துள்ளார்.
”தமிழகத்தைப் பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக முழுக்க முழுக்க பாஜகவின் பினாமி கம்பெனியாகச் செயல்படுகிறது என்பது தற்போது நூற்றுக்கு நூறு சதவீதம் நிரூபிக்கப்பட்டுள்ளது. “எங்களுக்குள் அரசு ரீதியான உறவு மட்டுமே இருக்கிறது” என்று இதுவரை வாய் கிழியப் பேசி வந்த அதிமுக- பாஜகவினரின் முகமூடி இப்போது கிழிந்து தொங்குகிறது. கண்ணை மூடிக்கொண்டு மத்திய பாஜக அரசை ஆதரித்ததன் மூலம் “பாஜக – அதிமுக” இடையே உள்ள மர்மக் கூட்டணியும் அம்பலமாகி விட்டது” என்றும் ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெற்றி பெறுவதற்காக நம்பகத்தன்மை வாய்ந்த வருமான வரித் துறையை துஷ்பிரயோகம் செய்து அந்த அமைப்பின் நம்பகத்தன்மையை சீர்குலைத்திருக்கும் மத்திய பாஜக அரசையும், அதற்கு ஆதரவு தெரிவித்த பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசையும் தமிழக மக்கள் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ள ஸ்டாலின், ஊழல் அதிமுகவுடனோ வேறு எந்த வழியிலோ தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜகவை ஒரு போதும் திமுக அனுமதிக்காது” என்றும் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு திமுக தார்மீக அடிப்படையில் ஆதரவு தெரிவிப்பதாகவும், அதிமுகவும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.

கருத்துகள் இல்லை: