திங்கள், 16 ஜூலை, 2018

பார்ப்பனீயம் காமராஜரைக் கொல்ல முயன்றது.. காந்தியைக் கொன்றது;!


காமராசர் பிறந்தநாள் பதிவு
RSS இந்துத்துவா பற்றி.....
நவம்பர் 7, 1966 ஆம் ஆண்டு தலைநகர் டெல்லி இயல்பாக இல்லை. இரண்டு நாட்களுக்கு அரசு மீட்டிங் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்தன. மக்கள் யாரும் வெளிவரவில்லை. பிரதமர் இந்திரா காந்தி அதிகாரிகளுடன் பேசிய வண்ணம் இருந்தார். பரபரப்பாக இயங்க வேண்டிய நாடாளுமன்றம் அமைதியாக இருந்தது. வழக்கத்திற்கு மாறாக ஆயிரக்கணக்கில் காவல்துறை அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். துணை ராணுவ படையும் இருந்தது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைவரின் பார்வையும் இந்திய பாராளுமன்றம் மீதே இருந்தது. காரணம் இந்திய பாராளுமன்றதை தாக்க 1,25,000 பேருடன் தலைநகர் டெல்லியில் திரண்டிருந்தது இந்துத்துவா இயக்கங்கள்.
நாடு முழுவதும் பசுவதை தடை சட்டம் கொண்டு வர சொல்லி பூரி சங்கராச்சாரியார் உண்ணாவிரதம் இருக்கப் போகிறார் எல்லோரும் வாருங்கள் என்று அழைப்பு விடுத்தது ஆர்.எஸ்.எஸ் யின் பசு பாதுகாப்பு பிரிவான சர்வதலியா கோரகூஷா மகா அபியான் சமிதி. இந்த அழைப்பை ஏற்று RSS யின் ஜனசங்கம், விஸ்வ ஹிந்து பரிசத், கோரக்சா சமிதி, அகில பாரதிய சாதுக்கள் சங்கம் என நாடு முழுவதும் உள்ள இந்துத்துவ இயக்கங்களை சேர்ந்தவர்கள் அனைவரும் தலைநகர் டெல்லியில் வந்திருந்தனர். அவர்களின் நோக்கம் பாராளுமன்றத்தை தாக்குவது, காமராஜரை கொல்வது மட்டும் தான்.
2001 ஆம் ஆண்டு லக்ஸர்-ஐ-தொய்பா அமைப்பு நாடாளுமன்றத்தை தாக்கியதை போல முதன்முதலில் நாடாளுமன்றத்தை தாக்க ஆள் சேர்த்தது இந்துத்துவ இயக்கங்கள் தான். அந்த பேரணிக்கு வந்திருந்தவர்கள் கைகளில் வாள், கடப்பாரை, திரிசூலம் போன்ற ஆயுதங்கள் இருந்தது. உடை அணியாத சாதுக்கள் அதிக அளவில் இருந்தனர். பாபர் மசூதியை இடிக்க வைத்திருந்த அதே ஆயுதங்களும், எண்ணங்களும் அவர்களிடம் இருந்தது.

பாராளுமன்ற தெருவில் கூடியிருந்த மக்கள் முன்பு இந்துத்துவ தலைவர்கள் ஒவ்வொருவராக பேசத் துவங்கினர். அதில் ஆர்.எஸ்.எஸ் யின் ஜன சங்க எம்.பி யும், நாடாளுமன்றத்தால் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாகி சஸ்பென்ட் ஆகியவருமான சுவாமி ரமேஷ்வர ஆனந்த், பாராளுமன்றத்தை முற்றுகை இடுங்கள் என்று கூறியவுடன், போலீஸ் தடுப்பை மீறி, பாராளுமன்றத்தை நோக்கி சென்றார்கள் இந்துத்துவ இயக்கத்தை சேர்ந்தவர்கள். தற்போது காஷ்மீரில் கல்லெறிவதை பற்றி பேசும் பா.ஜ.க வினர், அப்போது பாராளுமன்ற பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீது கல்லெறிந்தனர்.
கலவர கும்பலை கலைக்க போலீஸ் கண்ணீர் புகை குண்டையும், லத்திச் சார்ஜும் செய்தது. அதையும் மீறி பாராளுமன்ற வாயில் கதவுகளை இடிக்க முயன்ற இந்துத்துவ இயக்கத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது காவல்துறை. உடனே அங்கிருந்து ஓடிய இந்துத்துவ கலவர கும்பல், அருகில் இருக்கும் கார், கடைகள், அலுவலகங்கள் என கண்ணில் பட்டதை எல்லாம் தாக்கத் துவங்கியது.
All india radio, Press trust of india, Press information bureau, Transport bhawan, shram bhawan போன்ற அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள். அது மட்டுமல்ல, அரசு பேருந்துகள், post office வாகனங்கள், இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க், டெல்லி அரசிற்கு சொந்தமான பால் பூத்துகளையும் தீ வைத்து கொளுத்தியவர்கள் அங்கிருந்த டிராபிக் சிக்னல் லைட்டுகளை கூட விட்டு வைக்கவில்லை.
UNI அறிக்கையின் படி, 250 க்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டது. இது நடந்தது அனைத்துமே பாராளுமன்ற வளாகத்தை சுற்றி தான். கிட்டதட்ட 90 லட்ச ரூபாய் அப்போதைய காலத்திற்கு நஷ்டமானது.
செல்லும் வழியெல்லாம் தீக்கரையாக்கிய இந்துத்துவ கலவர கும்பல், ஆயுதங்களுடன் காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர் அவர்களின் வீட்டை நோக்கி விரைந்தது. காமராஜரை குறி வைத்ததற்கு பல காரணங்களை கூறினாலும் முக்கியமாக 3 காரணங்கள் இருந்தன.
நாடு முழுவதும் பசுவதை தடை சட்டம் கொண்டு வருவதை நேரு எதிர்த்தார். நேரு இறந்த பிறகு அச்சட்டத்தை எதிர்த்தது காமராஜர். பசுவதைக்கு எதிராக இருந்த நேரு இறந்துவிட்டார். காமராஜரையும் காணாமல் ஆக்கிவிட்டால் பிரச்சனை இருக்காது என்று ஆர்.எஸ்.எஸ் உடைய ஆர்கனைசர் இதழில் கார்டூன் படம் வரைந்து மிரட்டியது ஆர்.எஸ்.எஸ்.
இரண்டாவது காரணம், ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி முறையால் பள்ளிகள் மூடப்பட்டது. இதனை எதிர்த்து முதலமைச்சர் பதவி வந்தவுடன், அனைத்து பள்ளிகளையும் திறந்தார் காமராஜர். அதுமட்டுமல்லாது, பள்ளிக்கூடத்திற்கு குழந்தைகளின் வருகையை அதிகப்படுத்தும் விதமாக மதிய உணவுத் திட்டத்தையும் கொண்டு வந்தார். இதனால் ஏழை, பணக்காரன், சாதி மற்றும் மத வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் கல்வி கிடைத்தது.
ஒரு சூத்திரன் கல்வி கற்றால் அவன் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்று என்று சொல்பவரை வழிகாட்டியாக நினைக்கும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட உயர் சாதியினர் நடத்தும் இந்துத்துவ இயக்கங்களுக்கு அது வெறுப்பை ஏற்படுத்தியது என்பதற்காகவும் குறி வைத்தார்கள்.
மூன்றாவது காரணம், 1966 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், பசுவதை தடை கிளர்ச்சியை காமராஜர் வன்மையாக கண்டித்ததோடு, அது சார்ந்து எந்த ஒரு தீர்மானத்தையும் காரிய கமிட்டி கூட்டத்தில் நிறைவேற்றவும் சம்மதிக்கவில்லை. மிகவும் ரகசியமாக நடைபெற்ற இந்த கமிட்டி கூட்டத்தில் பேசியது வெளியில் கசிந்ததால், பசுவதை தடை கிளர்ச்சி ஆதரவாளர்களுக்கும், அதன் தலைவர்களுக்கும் காமராஜர் மீது கோபம் இருந்தது.
இது மட்டுமல்ல, 3.11.1966 யில் வெளியான நவசக்தி இதழில் காமராஜரின் பேச்சு வெளியானதும் அவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது.
பணக்காரனும், பிறப்பால் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களும் தான் சோசியலிசதிற்கு எதிரிகள். பிறப்பால் உயர்ந்தவர்கள் ஏன் சோசியலிசத்தை எதிர்க்கிறார்கள் தெரியுமா? பணக்காரர்களோடு சேர்ந்து சோசியலிசத்தை வரவிடாமல் தடுத்துவிட்டால், தங்களுடைய சாதியின் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டிக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். நாம் விட்டு விடுவோமா என்ன? என்றார் காமராஜர்.
இன்று வளர்ச்சி என்ற பெயரில் வரும் கார்ப்ரேட் திட்டங்களை எல்லாம் மத்திய அரசும், பிறப்பால் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களும் ஏன் ஆதரிக்கிறார்கள் என்ற உண்மையை அன்றே சொன்னார் காமராஜர்.
காமராஜரை பழி தீர்க்கவே பசுவதை தடை பேரணியை நடத்தியதை போல ஏராளமானோர் காமராஜர் வீடு முன்பு ஆயுதங்களுடன் நின்று கொண்டு, காமராஜர் எங்கே? வெளியே வா என்று அவரை தாக்க துடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டில் காமராஜர் இருந்தார். அவரை சந்திக்க வந்த ஒரு நண்பர் அவரை ஒரு அறையில் அடைத்து வெளியே பூட்டினார். நீங்கள் வெளியே வந்தால் உங்களை கொன்று விடுவார்கள் என்று அவர் கதவை திறக்கவே இல்லை.
இந்துத்துவ செயலால் கோபமடைந்த காமராஜர், வெளியே போய் நான் அவர்களிடம் பேசுகிறேன். என்னை என்ன செய்து விடப் போகிறார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த போது, வீட்டிலிருந்த குளிர்சாதன பெட்டிக்கு தீ வைத்தது கலவர கும்பல். காமராஜரின் வீடு சூறையாடப்பட்டது. காமராஜரின் உதவியாளர் நிரஞ்சன்லால் இந்துத்துவ கலவர கும்பலால் தாக்கப்பட்டார். வீட்டை சூழ்ந்து கொண்டு கற்களை வீசி கண்ணாடி ஜன்னல்களை உடைத்தனர். காமராஜர் எங்கே என்று சொல்லப்போறியா இல்லையா என்று அங்கிருந்த அனைவரையும் தாக்கினர்
குளிர்சாதன கருவிக்கு வைத்த தீயால், வீடே புகை மண்டலம் ஆனது. காமராஜரின் வீட்டிற்குள் புகை வந்ததை பார்த்த, அருகருகே குடியிருந்தவர்கள் அனைவரும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறை கலவரக்காரர்களை அடித்து விரட்டியது. ஆனால் காவல்துறை வருவதற்குள் காமராஜரை உள்ளேயே வைத்து எரித்து விட வேண்டும் என்று வீட்டிற்கு தீ வைத்து விட்டார்கள் இந்துத்துவ இயக்கத்தினர். காமராஜர் அருகில் இருக்கும் எம்.பி கள் குடியிருப்பு பகுதிக்கு பின் வாசல் வழியாக அவரது ஆதரவாளர்களால் கொண்டு செல்லப்பட்டார். காமராஜர் வீடு மட்டுமல்லாது, அருகில் இருந்த சமூக நலத்துறை உதவி மந்திரி ரகுராமையா வீட்டுக்கும் தீ வைத்து சென்றிருந்தார்கள் கலவரக்காரர்கள். இந்த சம்பவத்தை தடுக்கத் தவறிய உள்துறை அமைச்சர் குன்சாரிலால் நந்தா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
காமராஜரை தீ வைத்து எரித்து கொல்ல முயன்ற இந்துத்துவ கும்பலால் காமராஜர் பயப்படவில்லை. மாறாக, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்துவ இயக்கங்களுக்கு சவால் விட்டு சேலம் பொதுக் கூட்டத்தில் பேசினார்.
குறிப்பாக அவர்களுக்கு (இந்துத்துவ இயக்கத்தினர்) பயம் என்னைப் பற்றி தான். இந்த காமராஜர் தான் சோசியலிச சமுதாயத்தினை அமைத்தே தீருவேன் என்று சொல்கின்றான். அவன் தான் அதிலே தீவிரமாக இருக்கிறான் என்கிறார்கள். என் வீட்டுக்குத் தீ வைக்கின்றான்.ஆனால் நான் இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன். கடமையை செய்தே தீருவேன் என்று 11/12/66 அன்று சேலம் பொதுக்கூட்டத்தில் பேசினார் காமராஜர்.
இதை நவசக்தி 15/12/66 அன்று வெளியிட்டது. இதிலருந்தே காமராஜரை பசுவதை தடைக்கு மட்டும் கொல்ல நினைக்கவில்லை, அவர் ஏழைகளை படிக்க வைத்தார், காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு தந்தை பெரியார் கொண்டு வர நினைக்கும் திட்டங்களை செயல்படுத்தினார் என்பதாலேயே அவரை கொள்ள ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இயக்கங்கள் குறி வைத்தது என்பதை அவரின் பேச்சிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். உலகறிய நடந்த ஒன்றை செய்யவே இல்லை என்று மறுப்பதிலும், நடக்காத ஒன்றை நடந்ததற்கு நானே சாட்சி என்று வாதிடுவதிலும் திறமையானவர்களான இந்துத்துவ இயக்கத்தினர், தற்போது காமராஜரை தங்கள் அரசியல் வாழ்விற்கு பயன்படுத்த துவங்கியுள்ளனர்.
காமராஜரை கொல்ல முயற்சித்து விட்டு, அவர் சார்ந்த நாடார் சமூகத்தை விளக்கு பூஜை போன்றவற்றை நடத்தி ஏமாற்றி வருகிறார்கள் என்பதே உண்மையான வரலாறு அறிந்தவர்களின் கருத்தாக உள்ளது. காமராஜர் தனது வாழ்நாள் இறுதிவரை இந்துத்தவ இயக்கங்களை எதிர்த்து வந்தார் என்பதே உண்மையான வரலாறாகும்.

கருத்துகள் இல்லை: