வெள்ளி, 20 ஜூலை, 2018

கர்நாடக சிரூர் மடாதிபதி விஷம் வைத்து கொல்லப்பட்டாரா? -


கர்நாடக மாநிலத்தில் சிரூர் மடாதிபதி விஷம் வைத்து கொல்லப்பட்டாரா? - போலீசில் பரபரப்பு புகார்மாலைமலர் : சிரூர் மடத்தின் மடாதிபதி லட்சுமிவரதீர்த்த சுவாமி நேற்று திடீரென மருத்துவமனையில் மரணம் அடைந்தார். அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. மங்களூரு: சிரூர் மடத்தின் மடாதிபதி லட்சுமிவரதீர்த்த சுவாமி நேற்று திடீரென மருத்துவமனையில் மரணம் அடைந்தார். அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், எனவே உரிய விசாரணை நடத்த கோரியும் மடாதிபதியின் தம்பி போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் சிரூரில் அமைந்துள்ளது சிரூர் மடம். பிரசித்திபெற்ற இந்த மடத்தின் 30-வது மடாதிபதியாக இருந்து வந்தவர் லட்சுமிவரதீர்த்த சுவாமி ஆவார். தற்போது 54 வயதான லட்சுமிவரதீர்த்த சுவாமிக்கு நேற்று முன்தினம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.


இதையடுத்து அவரை மடத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மணிப்பாலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை 5 மணியளவில் அவருடைய உயிர் பிரிந்தது.

மரணம் அடைந்த லட்சுமிவரதீர்த்த சுவாமியின் உடல் நேற்று காலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் அவருடைய சீடர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவர்கள் மடாதிபதியின் உடலை சிரூர் மடத்தின் வளாகத்திலேயே வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு லட்சுமிவரதீர்த்த சுவாமிக்கு அஞ்சலி செலுத்தினர். அதைதொடர்ந்து இந்து சம்பிரதாய முறைப்படி அவரது உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டது. அதையடுத்து மடத்தின் வளாகத்திலேயே லட்சுமிவரதீர்த்த சுவாமிகளின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அவரது உடல் அமர்ந்த கோலத்தில் வைக்கப்பட்டு, தங்க ஆபரணங்கள் அணிவித்து அடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே மடாதிபதி லட்சுமிவரதீர்த்த சுவாமியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம்? என்றும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறி மடாதிபதியின் தம்பி லதாவியா ஆச்சார்யா, இரியடுக்கா போலீசில் பரபரப்பு புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

மடாதிபதி லட்சுமிவரதீர்த்த சுவாமிகளின் மரணம் குறித்து அவரது வக்கீல் ரவிகிரண் முருடேஷ்வர் கூறுகையில்‘ மடாதிபதியின் மரணத்தில் சந்தேகமும், மர்மமும் உள்ளது. கடந்த மாதம் அவர் எனது அலுவலகத்துக்கு வந்தார். அப்போது புத்திகே மடத்தை மட்டும் விட்டுவிட்டு, கிருஷ்ணா மடம் உள்பட மற்ற 6 மடங்கள் மீதும் கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் என்று அவர் என்னிடம் கூறினார். அதற்கான பணிகளில் நான் ஈடுபட்டு இருந்த நிலையில் அவர் திடீரென மரணம் அடைந்து உள்ளார். அவரது மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்த்து உண்மை நிலையை கண்டறிய வேண்டும்‘ என்றார்.

இதற்கிடையே மடாதிபதி லட்சுமிவரதீர்த்த சுவாமிக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அவினாஷ் ஷெட்டி நிருபர்களிடம் கூறுகையில், ‘மடாதிபதி திடீரென ரத்த வாந்தி எடுத்ததாகவும், மூச்சுதிணறல் ஏற்பட்டதாகவும் கூறி அவரை எங்கள் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு எங்களால் முடிந்த வரையில் சிறப்பாக சிகிச்சை அளித்தோம். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்து விட்டார். அவர் சாப்பிட்ட உணவில் விஷம்(நச்சுத்தன்மை) கலக்கப்பட்டதா? என்பது குறித்து ஆய்வு செய்ய அவருடைய ரத்த மாதிரியை சேகரித்து சோதனைக்கு அனுப்பி உள்ளோம். இதுபற்றி போலீசுக்கு தெரிவித்து உள்ளோம்’ என்றார்.

இந்த நிலையில் பெங்களூருவில் முதல்-மந்திரி குமாரசாமியும், துணை முதல்-மந்திரி பரமேஸ்வரும் நிருபர்களிடம் கூறுகையில், ‘சிரூர் மடாதிபதி லட்சுமிவரதீர்த்த சுவாமிகள் திடீரென மரணம் அடைந்துள்ளார். அவரது மறைவுக்கு எங்களது இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். அவருடைய மரணத்தில் மர்மம் இருப்பதாக பலர் சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். அதனால் தேவைப்பட்டால் இதுபற்றி உரிய விசாரணை நடத்தப்படும். மடாதிபதியின் மரணத்தில் உள்ள சந்தேகங்களுக்கு விரைவில் முடிவு தெரியவரும்’ என்றனர்.

கருத்துகள் இல்லை: