சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், “மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் கல்வி என்பது சிறப்பாகவே உள்ளது. இன்னும் மேம்படுத்த வேண்டும். அமைச்சர் செங்கோட்டையன் தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார்” என்று பாராட்டு தெரிவித்திருந்தார்.
மேலும், “தமிழக அரசை எல்லாரும் விமர்சனம் மட்டுமே செய்துகொண்டு இருக்கின்றனர். விமர்சிப்பது எளிது. தமிழக அரசு இன்னும் சிறப்பாக செயல்படலாம் என்பதே எனது கருத்து” என்று கூறியிருந்தார்.
சென்னை, அண்ணாநகரில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் ரஜினியின் பாராட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “ பள்ளிக் கல்வித் துறை சிறப்பாக செயல்படுகிறது என்று கூறிய நடிகர் ரஜினிகாந்துக்கு நெஞ்சம் மிகுந்த நன்றியை அரசின் சார்பிலும் தமிழக மக்களின் சார்பிலும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிலளித்தார்.
“பள்ளி கல்வித் துறை மூலமாக தமிழகத்திலுள்ள 32 மாவட்ட நூலகங்களில் IAS அகாடமிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 32 மாவட்டங்களில் முதற்கட்ட பயிற்சிகளுக்காக 2.17 கோடி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சி.ஏ. பயிற்சி அளிக்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு 12ஆம் வகுப்பில் திறன் பயிற்சி என்னும் 12 பாடத் திட்டங்கள் இணைக்கப்படும். இதன் மூலம் படித்தவுடன் வேலைக் கிடைக்கும் நிலை மாணவர்களுக்கு ஏற்படும்.
பள்ளிக்கல்வித் துறையை பொறுத்தவரை எந்த எதிர்க்கட்சிகளும் விமர்சிக்கவில்லை. அந்தளவு சிறப்பாக செயல்படுகிறோம்” என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.
சூப்பர்வழி சாலை
எட்டுவழிச் சாலை போன்ற வளர்ச்சி திட்டங்கள் தேவை என்றும் இதன் மூலம் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு வளர்ச்சி அடையும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்தார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், “ஸ்டெர்லைட் ஆலையை இந்த ஆட்சி பூட்டியுள்ளது. மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டுவந்துள்ளது. எட்டாக் கனியான எட்டுவழிச் சாலைக்கு இன்றைக்கு சூப்பர் ஸ்டாரே ஆதரவு தெரிவித்துள்ளார். .சூப்பர் ஸ்டாரே ஆதரவு தெரிவித்துள்ளதால் அது சூப்பர் வழிச் சாலையாக அமையும்” என்று தெரிவித்தார்.
இதேபோல், “நல்லதை பாராட்டும் மனப் பக்குவம் அனைவருக்கும் வரவேண்டும். நடிகர் ரஜினிகாந்திற்கு நன்றிகள். அதேவேளையில் அவருக்கும் எங்களுக்கும் வேறுவேறு கொள்கைகள் உள்ளன. நாங்கள் அவருடன் நெருங்கவும் இல்லை. அவர் எங்களுடன் நெருங்கவும் இல்லை” என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக