புதன், 18 ஜூலை, 2018

எட்டு வழிசாலை திட்டத்தை கைவிட முடிவு? கதை கந்தல் ஆவது கண்ணுக்குள் தெரிகிறது ..?

டிஜிட்டல் திண்ணை: எட்டு வழிச் சாலை, கைவிடும் எடப்பாடி?மின்னம்பலம்:“தமிழகத்தில் ரெய்டு நடவடிக்கையை தீவிரப்படுத்தி இருக்கிறது மத்திய அரசு. தமிழக அரசியல் சூழ்நிலையை பொறுத்தவரை அமித் ஷா வருகைக்கு முன்பு, அமித் ஷா வருகைக்குப் பின்பு என மாறிவிட்டது.
அமித் ஷா சென்னைக்கு வந்து போனதும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ’இவ்வளவு நாளா மத்திய அரசு சொல்ற எல்லாத்துக்கும் நாங்க பொறுத்துட்டுதான் இருந்தோம். இப்போ ஏதோ தமிழ்நாடுதான் ஊழல் மாநிலம் என்பது போல பேசிட்டு போய்ட்டாரு அமித் ஷா. அம்மா மறைவுக்குப் பிறகு இதுவரைக்கும் நாங்க யாரும் பிஜேபியை எதிர்த்துப் பேசவே இல்லை. அதுக்கு காரணம் உங்களுக்கும் தெரியும். பிஜேபிக்கு எதிராகப் பேசினால் நிச்சயமாக எங்க ஆட்சிக்கு தொல்லை கொடுப்பாங்க. அதனால்தான் தமிழ்நாட்டில் அவங்களுக்கான எதிர்ப்பு பலமாக இருந்தும் நாங்க இவ்வளவு நாளா ஒரு வார்த்தைகூட யாரும் எதிர்த்து பேசவில்லை.

இப்போ எங்களை ஊழல் கட்சின்னு பேசுறாங்க. நாடாளுமன்ற தேர்தலில் அவங்களோடு நாங்க கூட்டணி வைக்க வேண்டும் என டீல் பேசினாங்க. அப்படி கூட்டணி சேர்ந்தால் ஒரு இடத்தில்கூட யாரும் ஜெயிக்க முடியாது. இதை நான் வெளிப்படையாகவே சொல்ல சொல்லிட்டேன். அதுதான் எல்லா பிரச்னைக்கும் காரணம். இப்போ என்ன செய்யுறதுன்னு புரியாத சூழ்நிலையில்தான் நாங்க இருக்கோம்..’ என்று சொல்லியிருக்கிறார்.
அதற்கு சந்திரபாபு நாயுடுவோ, “இவ்வளவு நாள் நீங்க பொறுமையாக இருந்ததே பெரிய விஷயம். அவங்களுக்கு ஜால்ரா அடிக்கிற வரைக்கும் கூட வச்சுக்குவாங்க. இல்லைன்னா எந்த எல்லைக்கும் போவாங்க. இது தெரிஞ்சதுதான். என்ன செய்யலாம்னு நான் கொஞ்சம் டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்றேன்...’ என்று சொல்லியிருக்கிறார்.
அடுத்த சில மணி நேரங்களில், எடப்பாடியை தொடர்புகொண்டு சந்திரபாபு நாயுடுவே பேசினாராம். ‘எனக்கு நெருக்கமான சட்ட வல்லுனர்களுடன் பேசிட்டேன். எந்தக் காரணத்தைச் சொல்லியும் அவங்களால உங்க ஆட்சியைக் கலைக்க முடியாது. எந்தத் தீர்ப்பு எப்படி வந்தாலும், உங்க ஆட்சி கலையாது. அவங்களால் கலைக்கவும் முடியாது. எல்லாம் சும்மா மிரட்டல்தான். இனி நீங்க எதுக்கும் பார்க்காதீங்க. பாஜகவுக்கு பதிலடி கொடுக்க ஆரம்பிங்க. பிஜேபியை எதிர்த்தால் மட்டுமே நீங்க தமிழகத்தில் நிலைச்சிருக்க முடியும்.
பிஜேபி ஆளாத மாநிலங்கள் இந்தியாவில் நிறைய இருக்கு. அங்கே எல்லாம் இப்படி தொல்லை கொடுக்கிறதுதான் அவங்களோட வேலை. எங்களை நம்பி நீங்க வந்தால், உங்களோடு நாங்க இருக்கோம். அதனால பிஜேபி என்ன பேசினாலும் இனி அமைதியா இருக்க வேண்டாம். பதிலடி கொடுங்க. அப்படி கொடுக்கும் போது, உங்களுக்கு பல தொல்லைகள் வரலாம். எது வந்தாலும் கவலைப்பட வேண்டாம். எல்லாம் மிரட்டல்தான். எதுவும் அவங்களால செய்ய முடியாது.
அவங்களோட மிரட்டலுக்கு முதல் ஆயுதமே ரெய்டுதான். வந்தால் வந்துட்டு போகட்டும்னு அமைதியா இருங்க. வரி கட்டலைன்னு சொல்லுவாங்க. வழக்கு போடுவாங்க. அதை சட்டப்படி பார்த்துக்கலாம். அதை காரணமாக காட்டியெல்லாம் ஆட்சியை கலைக்க முடியாது. உங்க ஆட்கள் யாரையாவது இங்கே அனுப்புங்க. பேசுவோம்... ‘ என்று ஆறுதலாக சொல்லியிருக்கிறார்.
அதன் பிறகே எடப்பாடி அணியை சேர்ந்தவர்கள் பிஜேபியை தைரியமாக எதிர்க்க ஆரம்பித்து இருக்கிறார்கள். எடப்பாடி தரப்பு எதிர்ப்புக்கு பிறகுதான் நாயுடு சொன்னது போலவே ரெய்டு படலம் தொடங்கியது. அப்போதும் சந்திரபாபு நாயுடுவிடம் பேசியிருக்கிறார் எடப்பாடி. ‘நான்தான் முன்பே சொன்னேன் இல்லையா... இதெல்லாம் நடக்கும் என்பது தெரியும். அடுத்த கட்டமாக உங்க வீட்டுக்கு கூட ரெய்டு வருவாங்க. கவலையே படாமல் இருங்க. இதெல்லாம் மிரட்டல்தான். மிரட்டி உங்களை பணிய வைக்கத்தான் இந்த வேலையை செய்யுறாங்க. என்ன நடந்தாலும் அமைதியாக வேடிக்கை மட்டும் பாருங்க. இனி பிஜேபி எதிர்ப்பு என்பதில் மட்டும் உறுதியாக இருங்க...’ என்று சொல்லியிருக்கிறார் சந்திரபாபு நாயுடு. அதன்படியே பிஜேபி எதிர்ப்பு அரசியலை தொடங்கிவிட்டார் எடப்பாடி!” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ். அதற்கு லைக் போட்டதுடன் ஷேரும் செய்தது வாட்ஸ் அப்.
தொடர்ந்து மெசேஜ் ஒன்றையும் டைப்பிங் செய்தது.
“எட்டு வழி சாலைக்கு எதிராக விவசாயிகள் குரல் கொடுப்பதும், கதறி அழுவதும் தெரிந்ததுதான். எட்டு வழிச் சாலை திட்டத்தைப் போராடிப் பெற்றோம் என்று சட்டமன்றத்தில் சொன்ன எடப்பாடி, அதன் பின் சேலம் சென்றபோது, ‘இது மத்திய அரசின் திட்டம், இத்திட்டத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை, இது மத்திய அரசு கொண்டுவந்த திட்டம், தமிழக அரசின் பணி நிலத்தை கையகப்படுத்திக் கொடுப்பது மட்டுமே’ என்று சொன்னார்.
இப்போது பிஜேபி எதிர்ப்பு என முடிவு செய்த பிறகு, மக்கள் நலனை கருத்தில் கொண்டு எட்டு வழி சாலை திட்டத்தை கொண்டு வர அனுமதிக்க மாட்டோம் என்ற முடிவை எடுக்கலாமா என தீவிர யோசனையில் இருக்கிறாராம் எடப்பாடி. அப்படி ஒரு முடிவை எடுத்தால், மக்கள் மத்தியில் இன்னும் தனக்கான செல்வாக்கு கூடும் என்று நினைக்கிறாராம். எட்டுவழிச் சாலை திட்டத்தை முழுமையாக கைவிடுவது, அல்லது தள்ளிப்போடுவது என இரண்டில் ஒரு முடிவை விரைவில் எடுக்கப் போகிறாராம் எடப்பாடி

கருத்துகள் இல்லை: