ஞாயிறு, 15 ஜூலை, 2018

மேடையில் கண்ணீர் விட்டு அழுத கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமி

பெங்களூரு, tamil.thehindu.com மேடையில் பேசும் போது கண்ணீர் விட்டு அழுத கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமி   -  படம்: ஏஎன்ஐ
நம்முடைய அண்ணன் முதல்வராகிவிட்டார் என்று என்னைப் பார்த்து கட்சியின் தொண்டர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஆனால், காங்கிரஸுடனான கூட்டணி ஆட்சியில் நான் மகிழ்ச்சியாக இல்லை என்று கர்நாடக முதல்வர் எச்.டி. குமாரசாமி கண்ணீர் விட்டு அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் முதல்வராக எச்.டி. குமாரசாமி தேர்வு செய்யப்பட்டதைக் கொண்டாடும் வகையில், பெங்களூரில் நேற்று நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் முதல்வர் எச்.டி. குமாரசாமி பங்கேற்றார்.

     
அப்போது அவர் பேசியதாவது:
''உங்களுடைய அண்ணனாகிய நான் முதல்வராகிவிட்டேன் என்று நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. ஆனால், ஒன்றைச் சொல்கிறேன். நான் மகிழ்ச்சியாக இந்தப் பதவியில் இல்லை.
காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி ஆட்சியில் விஷத்தைச் சாப்பிட்டுவிட்டு நான் வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறேன். இப்போது இருக்கும் சூழல் எனக்கு மகிழ்ச்சியாக இல்லை.
முதல்வர் பதவி என்பது பூக்கள் போடப்பட்ட மெத்தை அல்ல, முற்கள் நிறைந்த மகுடமாகும். கூட்டணிக் கட்சியை அழைத்துச் செல்லுதல், எதிர்க்கட்சியின் அழுத்தம் ஆகியவை இருக்கிறது. இப்படியே எனக்கு அழுத்தம் தொடர்ந்தால், 2 மணிநேரத்தில் என் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன். விவசாயிகளைக் கடனில் இருந்து மீட்கவே நான் முதல்வராகப் பதவி ஏற்றேன்.
என்னுடைய பேச்சைக் கேட்க ஏராளமான மக்கள் கூடி இருக்கிறார்கள். ஆனால், தேர்தலில் வாக்குமட்டும் அளிக்க மறுக்கிறார்கள். நான் யாரையும் குறை சொல்லவில்லை. நான் 2-வது முறையாக இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டு இருக்கிறேன். என் உடல்நலத்தைக் கருத்தில் கொள்ளாமல் பணியாற்றி வருகிறேன். கடவுளின் அருள், பெற்றோரின் ஆசிமட்டுமே இதற்குக் காரணம்.
 கடந்த ஒன்றைரை மாதங்களாக, நான் அதிகாரிகளை சமாதானப்படுத்தித்தான், விவசாயிகளுக்கு வேளாண் கடன் தள்ளுபடிக்கு ஏற்பாடு செய்தேன் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், இப்போது சிலர் அன்ன பாக்கியா திட்டத்தில் 5 கிலோ அரிசிக்குப் பதிலாக 7 கிலோ அரிசி வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். ரூ.2500 கோடிக்கு நான் எங்கு செல்வேன்.
வரிச்சலுகை அளித்தற்காகவும், வரி விதித்தற்காகவும் நான் கடுமையாக விமர்சிக்கப்படுகிறேன். என்னுடைய கடன் தள்ளுபடி திட்டத்தில் தெளிவான நிலைப்பாடு இல்லை என்று ஊடகங்கள் விமர்சிக்கின்றன. நான் விரும்பினால், இன்னும் 2 மணி நேரத்தில் முதல்வர் பதவியில் இருந்து இறங்கிவிடுவேன்.
முதல்வராகப் பதவியில் அமர்வதற்குத் தேவையான சக்தியையும், ஆசிகளையும் கடவுள்தான் வழங்கி இருக்கிறார். இன்னும் எத்தனை  நாட்கள் இந்தப் பதவியில் இருப்பேன் என்று அவர்தான் முடிவு செய்ய வேண்டும்.
 இந்த மாநில மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகவே நான் முதல்வராக வந்தேன். இதைத் தவிர வேறு எந்தவிதமான காரணமும் இல்லை. கட்சியின் கனவுகளை நிறைவேற்ற வேண்டும், என் தந்தை தேவகவுடாவின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
அதிகார ஆசைக்காக இந்தப் பதவிக்கு நான் வரவில்லை. ஆனால் மாநிலத்தில் மக்களில் சிலர் என் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்கள்.''
இவ்வாறு எச்டி குமாரசாமி பேசினார்.
முதல்வர் குமாரசாமி பேசியது குறித்து, துணை முதல்வரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜி. பரமேஸ்வராவிடம் கேட்டபோது, அவர் கூறுகையில், ’’முதல்வராக இருப்பதில் மகிழ்ச்சியில்லை என்று குமாரசாமி எப்படிக் கூறலாம்? அவர் மகிழ்ச்சியாகத்தான் இருக்க வேண்டும். அவர் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவர் மகிழ்ச்சியாக இருந்தால்தான் மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும்’’ எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: