வெள்ளி, 20 ஜூலை, 2018

இஸ்ரேல் யூதர்களுக்கான தேசம்: சர்ச்சைக்குரிய சட்டம்!

மின்னம்பலம் : இஸ்ரேல் யூதர்களுக்கான தேசம்: சர்ச்சைக்குரிய சட்டம்!
"மின்னம்பலம் : இஸ்ரேலிலுள்ள சிறுபான்மையினரை ஓரங்கட்டிவிட்டு அந்நாடு யூதர்களுக்கான தேசம் என்பதை அறிவிக்கும் சர்ச்சைக்குரிய சட்டம் ஒன்று அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது.
நேற்று (19.07.18) இஸ்ரேலின் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் இயற்றப்பட்டது. இது தொடர்பாக அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு பேசியதாவது:
"இஸ்ரேல் என்பது யூதர்களின் தேசமாகும் இங்கு அனைத்து குடிமக்களின் தனி நபர் உரிமைகளும் பாதுகாக்கப்படும் நான் திரும்பக் கூறுகிறேன். இது யூதர்களின் தேசமாகும். இது ஜியோனிசத்திற்கான வெற்றியாகும். சமீபத்தில் இந்த நாட்டைச் சீர்குலைக்க சிலர் முயற்சி செய்தனர். அதன் மூலம் நமது இருப்பையும் நமது உரிமைகளையும் சீர்குலைக்க முயற்சி செய்தனர். அதனால் இன்று நாம் ஒரு சட்டத்தை இயற்றியுள்ளோம். இது நமது நாடு. இது நமது மொழி. இது நமது தேசிய கீதம். இஸ்ரேல் நாடு நீடுழி வாழ்க."
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.


ஆனால், சட்டத்தில் சிறுபான்மையினராக உள்ள அரபியரை ஒதுக்குவதாக எதிர்ப்பாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சட்டத்தின் ஒரு பிரிவில் அரபிய மொழியை அதிகாரபூர்வ மொழி என்பதிலிருந்து சிறப்பு அந்தஸ்து அளிப்பதாக மாற்றப்பட்டுள்ளது. இஸ்ரேலின் மக்கள் தொகையில் அரபியர்கள் 20 விழுக்காடு உள்ளனர்.
சட்டமானது மொத்தம் 62 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 55 பேர் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. சட்டத்தை ஆதரவாகவும் எதிர்த்தும் அவையில் கடுமையான வாதங்கள் நடந்தன.
இச்சட்டத்திற்கு அரபியர் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்க நாடாளுமன்றத்தில் விவாதம் நடக்கும்போதே கறுப்புக் கொடிகளை காட்டினர். அய்மைன் ஓடே என்ற அரபியர் கூட்டமைப்பின் தலைவர் சட்டம் நிறைவேறிய பின்னர் கூறுகையில், "இது தீய சட்டமாகும். நான் இன்று எனது குழந்தைகளிடம் சொல்வேன். இந்த நாடு நம்மை விரும்பவில்லை எனப் பிரகடனப்படுத்தியுள்ளது. இது யூதர்களின் மேன்மையை நிறுவும் சட்டத்தை இயற்றியுள்ளது. நம்மை இரண்டாம்தர குடிமக்களாக ஆக்கியுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்
இச்சட்டத்துக்கு யூதர்கள் தரப்பிலிருந்தே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முன்னாள் பிரதமர் மேனாசெம் பிகினின் மகனான பென்னி பிகன் நாடாளுமன்ற உறுப்பினர். அவர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இவருடைய தந்தைதான் ஆளுங்கட்சியான லிக்குட் கட்சியின் நிறுவனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவிலுள்ள யூதர் அமைப்புகளும் சட்டத்தை எதிர்த்துள்ளன. இச்சட்டத்தில் தனித்தனியான சமூகங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளது. இப்படிப் பிரிக்கப்பட்டுள்ளதை இனவாதம் என்று அந்நாட்டின் சட்டத்துறையினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உலக வரைபடத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்னதாக இஸ்ரேல் என்ற நாடே இல்லை. அது பாலஸ்தீனமாக இருந்தது. ஜெர்மனியில் ஹிட்லரின் நாஜிக் கொடூரங்களிலிருந்து தப்பி நாடற்றவர்களாக உலகம் முழுவதும் அலைந்து திரிந்தனர் யூதர்கள். பின்னர், அமெரிக்காவும் இங்கிலாந்தும் இணைந்து பாலஸ்தீனவர்களை வன்முறையின் மூலமாக வெளியேற்றிவிட்டு அந்த நாட்டில் யூதர்களை குடியேற்றினர். அந்த நாட்டுக்கு இஸ்ரேல் எனப் பெயரிடப்பட்டது. இத்திட்டத்தை முன்வைத்த பல்போர் என்ற பிரிட்டிஷ் அதிகாரியின் பெயரால் இது பல்போர் பிரகடனம் (Balfour Declaration) என்றழைக்கப்பட்டது. நாஜிசத்தை எதிர்த்து தங்களது மேன்மையை நிறுவிட அந்த சிந்தாந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக அரபியரை விட யூதர்கள் மேன்மையானவர் என்பதற்கான சி்ந்தாந்தமாக ஜியோனிசத்தை (Zionism) உருவாக்கினர். தற்போது ஜியோனிசம் அரபியருக்கு எதிரான சிந்தாந்தமாக மட்டுமின்றி சட்டமாகவும் மாறி உள்ளது.

தங்களது சொந்த நாட்டை இழந்த பாலஸ்தீனர்கள் விடுதலைப் போராட்டத்தை பல ஆண்டுகளாக நடத்தி வந்தனர். இதற்காக எண்ணற்ற கெரில்லாப் போராட்டங்களையும் பாலஸ்தீனர்கள் நடத்தி வந்தனர். இவர்களின் போராட்ட முறையே புகழ்பெற்ற இன்டிபெடா (Intifada ) என்றழைக்கப்படுகிறது. ஐநா பாலஸ்தீனர் பிரச்சினையைத் தீர்க்க எத்தனையோ சமரச திட்டங்களை முன்வைத்தும் அத்திட்டங்கள் அனைத்து இஸ்ரேலினால் மீறப்பட்டன. தற்போதைய சட்டம் அதன் இனவெறியான ஜியோனிசத்தை அதிகாரபூர்வமாக நிறுவியுள்ளது.

கருத்துகள் இல்லை: