வியாழன், 19 ஜூலை, 2018

சொல்லைத் தத்தெடுங்கள்!.. வழக்கில் இல்லாது அழிந்து போகும் சொற்களின் களஞ்சியம்

மின்னம்பலம் - ரவிக்குமார்:  சிறப்புக் கட்டுரை: சொல்லைத் தத்தெடுங்கள்!மனிதக் கண்டுபிடிப்புகளிலேயே மகத்தானது மொழி தான். மனிதகுலம் பொருட்களால் கட்டியெழுப்பிய உலகைவிடவும் சொற்களால் உருவாக்கி வைத்திருக்கும் உலகம் பெரியது. நாம் பௌதீக உலகில் இருப்பதாக நம்பினாலும் சொற்களின் உலகில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மாளிகைகளும், அரண்மனைகளும், காவல் நிலையங்களும் சிறைக்கூடங்களும் நிறைந்த எந்த ஒரு நாட்டைவிடவும் மனிதர்கள் வாழத் தகுதியுடையதாக இருக்கிறது சொற்களால் ஆன உலகம். அங்கு எல்லைகள் இல்லை. எனவே, சட்டங்களின் ஆதிக்கமோ, தண்டனைகளின் அச்சமோ இல்லை. அங்கு ஆள்பவர்கள் இல்லை. எனவே, அடிமைகளும் இல்லை. அங்கு உரிமையாளர்கள் இல்லை. எனவே, ஏதிலிகளும் இல்லை. பூமியைப் பணம் கொடுத்து உரிமையாக்கிக்கொள்வதுபோல் அங்கு எவரும் சொற்களை உரிமையாக்கிக்கொள்ள முடிவதில்லை. எவரும் எதையும் பயன்படுத்தலாம் என்ற எல்லையற்ற சுதந்திரம் நிலவுகிற உலகமாக இருக்கிறது சொற்களின் உலகம்.

சொற்களின் உலகில் ஊடுருவிய ஆதிக்கம்
ஆனால், சொற்களின் உலகையும் ஆதிக்கவாதிகள் விட்டுவைக்கவில்லை. அதையும் சீரழிக்கவே முற்பட்டார்கள். அதற்குள்ளும் தனியுடைமையை உருவாக்கினார்கள். அந்த இழிச்செயலுக்கு நமது நாடுதான் முன்னுதாரணமாகத் திகழ்ந்தது. இவரிவர் இன்னின்ன சொற்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற விதிகள் உருவாக்கப்பட்டன. அவற்றை மீறியவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டார்கள். சொற்களைக் கையாளும் வாய்ப்பை அளிக்கிற வழிமுறைகளில் ஒன்றாக இருக்கும் கல்வி என்பது பலருக்கும் தடை செய்யப்பட்டது. பொருளைப் போலவே சொல்லும் அதிகாரத்தின் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டது. அதனால் வெறுப்பு மண்டியது. தற்குறிகள் மலிந்தனர். சொற்களின் பெயராலும் ரத்தம் சிந்தப்பட்டது. இந்த 'மனுவாதக் கொள்கை' இன்று வழக்கொழிந்துவிட்டது என்றாலும் அதன் எச்சங்கள் இப்போதும் ஆங்காங்கே தென்படத்தான் செய்கின்றன.

மொழியின் மூலகங்களில் ஒன்றாக இருக்கும் சொல்லைப் பற்றி எல்லா மொழிகளிலுமே சிந்தித்திருக்கிறார்கள். சொல்லின் பிறப்பு குறித்த சூட்சுமங்களைக் கண்டறிந்து கூறியிருக்கிறார்கள். புதிய சொல் ஒன்று எப்படிப் பிறக்கிறது என்பதைப் பற்றி ஆராய்ந்திருக்கிறார்கள். மனிதகுலம் தமது வாழ்வுப் போக்கினூடாகத் தினந்தோறும் புதிய சொற்களைப் படைக்கிறது. அவற்றைப் பல தளங்களிலும் கையாள்கிறது. பரப்புகிறது. அதேவேளையில் பல சொற்களைக் கைவிடவும் செய்கிறது. நூல் அடுக்கில் நிறைய புத்தகங்கள் இருந்தாலும் நாம் எடுத்து வாசிப்பவை ஒரு சிலவற்றைத்தான். அதுபோலவே எண்ணற்ற சொற்களை நமது மொழி கொண்டிருந்தாலும் நாம் எடுத்துப் பயன்படுத்துவது மிகக் குறைந்த வார்த்தைகளைத்தான்.
வழக்கொழிந்துபோன சொற்கள்
ஒரு சொல் வழக்கொழிந்துபோகப் பல காரணங்கள் இருக்கும். ஒரு காலத்தில், ஒரு சூழலில் முதன்மை பெற்றுத் திகழ்ந்த சொற்கள் இப்போது வழக்கொழிந்துபோய்விட்டன. பாணர்களைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட ‘அகவன்’ என்ற சொல் இப்போது பயன்பாட்டில் இல்லை. பாணர்களின் மறைவோடு அந்தச் சொல்லும் மறைந்துவிட்டது. ‘அகவன் மகளே’ என விளித்துப் பாடப்பட்ட ஔவையின் பாடலைப் படிக்கும்போது அந்தச் சொல்லைப் பற்றிய ஏக்கம் பெருமூச்சாய் வெளிப்படுகிறது.
சில சொற்களைத் தெரிந்தே நாம் கைவிட்டிருப்போம். சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளுக்கேற்ப உருவாகிப் புழங்கிவந்த சில சொற்கள் அத்தகைய சமூக நிலைகள் மாற்றத்துக்குள்ளாகும்போது கைவிடப்படும். ஒரு காலத்தில் அமெரிக்காவில் இருக்கும் கறுப்பின மக்களை ‘நிக்கர்’ என்ற இழிவான பொருள்கொண்ட சொல்லால் அழைத்துவந்தனர். அங்கே அவர்களுக்கு உரிமைகள் வென்றெடுக்கப்பட்டதோடு அந்தச் சொல் பயன்பாட்டிலிருந்து அகற்றப்பட்டது. இந்தியச் சமூகத்திலும் அப்படிப் பல சொற்கள் விலக்கப்பட்டுள்ளன. நாம் சொற்களை மீட்டெடுக்க வேண்டும் எனக் கூறும்போது இத்தகையப் புரிதலோடே இதை அணுக வேண்டியிருக்கிறது.

சொற்களில்லா வறுமை
பணமும், பொருளும் இல்லா வறுமையைவிட சொற்களில்லா வறுமை துயரமானது. ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்படுபவர்கள் உடைமையற்ற நிலைக்கு உள்ளாக்கப்படுவது மட்டுமின்றி வலிந்த மௌனத்துக்குள் இருத்தப்படுவதையும் நாம் பார்க்கிறோம். கொடுங்கோல் அரசுகள் எழுத்துக்கும் பேச்சுக்கும் விதிக்கின்ற தடைகளையும், பல்வேறு நாடுகளில் நூல்கள் பல தடை செய்யப்படுவதையும் இந்தப் பின்புலத்திலேயே நாம் பார்க்க வேண்டும். ஒருவரது சுதந்திரம் அவரது புழங்குவெளியை வைத்து மட்டுமின்றி சொற்களைக் கையாள்வதற்கு அவருக்கிருக்கும் சாத்தியங்களை வைத்தும்தான் கணிக்கப்படுகிறது.
ஒருவர் வெளிப்படுத்துகிற சிந்தனையின் ஆற்றல் அவர் பயன்படுத்துகிற சொற்களின் எண்ணிக்கையோடு நேரடியாகத் தொடர்புகொண்டதல்ல. ஆனால், சொல் வறுமையால் பீடிக்கப்பட்ட ஒருவர் தீவிரமான சிந்தனையை வெளிப்படுத்துவது இயலாது. அரிதான சிந்தனைகள் அரிய சொற்களைக் கொண்டுவருகின்றன. கட்டுடைப்பு என்ற சிந்தனை முறையை அறிமுகப்படுத்திய ழாக் தெரியாவின் படைப்புகளை வாசிக்கும்போது இதை நாம் உணரலாம்.
தமிழில் லட்சக்கணக்கான சொற்கள் இருந்தாலும் நம்மிடையே புழங்கிக்கொண்டிருப்பவை சில ஆயிரம் சொற்கள்தான். ஆங்கில மொழியில் சுமார் ஏழாயிரம் சொற்கள் மட்டும்தான் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று கண்டறிந்திருக்கிறார்கள். அப்படித் தமிழ்ச் சொற்களின் பயன்பாட்டைத் துல்லியமாகக் கணித்துக்கூறுவதற்கான ஆய்வுகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.
தற்போது தமிழ் மொழி செம்மொழியாக அங்கீகாரம் பெற்றிருப்பதைத் தொடர்ந்து சங்க இலக்கியங்களின் மீதான ஆர்வம் கூடியிருக்கிறது. புதிய நிறுவனங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு நிதியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இவையெல்லாம் அரசாங்கம் தொடர்பான நடவடிக்கைகள். தமிழுக்கு வளம்சேர்க்க நாம் செய்ய வேண்டியவை ஏராளம் இருக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான் ‘சொற்களைத் தத்தெடுத்தல்’. சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுத் தற்போது நம்மால் கைவிடப்பட்ட சொற்கள் அநாதைக் குழந்தைகளாக வரலாற்றின் புதைசேற்றில் அமிழ்ந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றை நாம் தத்தெடுத்துக் கொள்ளலாம். அந்தச் சொல்லை மீண்டும் புழக்கத்துக்குக் கொண்டுவர நாம் முயற்சிக்கலாம். நமது படைப்புகளில் மட்டுமின்றி நாம் எழுதும் மின்னஞ்சல்கள், கடிதங்கள், பரிமாறும் குறுந்தகவல்கள் என எல்லாவற்றிலும் அதைப் பயன்படுத்தலாம். அந்தச் சொற்களை மீண்டும் புழக்கத்துக்குக் கொண்டுவர நம்மாலான அத்தனை வழிமுறைகளையும் முயற்சித்துப்பார்க்கலாம்.

சொற்களை நாம் எல்லோருமே கையாளுகிறோம், பரப்பவும் செய்கிறோம் என்றாலும் சில களங்களில் செயல்படுகிறவர்களுக்குச் சொற்களைப் பரப்புவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. படைப்பாளிகள், ஊடகங்களில் பணிபுரிபவர்கள், கல்விக்கூடங்களில் வேலைசெய்பவர்கள், சொல் பரப்பலையே தொழிலாகக்கொண்ட அரசியல்வாதிகள்... இவர்கள் மற்றவர்களைக்காட்டிலும் சொற்களைக் கையாள்வதற்கு அதிக வாய்ப்பைப் பெற்றவர்களாக உள்ளனர். தமது வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கும் சொற்களை இவர்கள் அலட்சியமாகக் கையாளும்போது மொழிக்கு ஏற்படும் சேதம் கொஞ்சநஞ்சமல்ல. அந்தப் பாவத்துக்கு ஒரு கழுவாயாகவேனும் ஆளுக்கு ஒரு சொல்லை அவர்கள் தத்தெடுத்துக்கொள்ளலாம்.

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: முனைவர் ரவிக்குமார் அரசியல், கலை, இலக்கிய விமர்சகர். மணற்கேணி ஆய்விதழின் ஆசிரியர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர். இவரைத் தொடர்புகொள்ள: adheedhan@gmail.com

கருத்துகள் இல்லை: