ஞாயிறு, 15 ஜூலை, 2018

ஃபார்மலின் மீன்கள்!- மக்கள் அறிய வேண்டிய உண்மைகள் என்ன?

டி.எல்.சஞ்சீவிகுமார் tamil.thehindu.com/ சமீபத்திய செய்திகளில் அடிபடும் ஃபார்மலின் ரசாயனம், மீன்களை மட்டும் உறைய வைக்கவில்லை. மக்களையும் அச்சத்தில் உறைய வைத்துள்ளது. பிணங்களைப் பதப்படுத்தும் ஃபார்மலினைப் பயன்படுத்தி மீன்களையும் பதப்படுத்துவதாக எழுந்துள்ள விவகாரம் தமிழகம் மற்றும் கேரளத்தின் பல ஆயிரம் கோடி ரூபாய் மீன் வர்த்தகத்தை மொத்தமாக பதம் பார்த்துள்ளது!  
தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் மீன்களைப் பறிமுதல் செய்துவருகிறார்கள். கேரளாவிலும் டன் கணக்கில் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சர்ச்சை வெளியான ஒரு வாரத்தில் சென்னையில் மட்டுமே சுமார் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு மீன் வர்த்தகம் அடிவாங்கியிருக்கிறது என்கிறார்கள்.

குஜராத், மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரம், கேரளம், மேற்கு வங்கம், தமிழகம் இவையே இந்தியாவின் முக்கியமான மீன் கேந்திரங்கள். நாட்டின் ஒரு ஆண்டுக்கான மொத்த மீன் தேவை சுமார் 1.15 கோடி மெட்ரிக் டன். இதில் 60 சதவீதத்தை இந்த மாநிலங்கள் பூர்த்தியாக்குகின்றன. இவை ஒன்றுக்கு ஒன்று நெருங்கிய தொடர்புகொண்டவை. மும்பையின் மாலாடா, போர்பந்தரின் லட்டி பஜார், காக்கிநாடாவின் ராமன்யாபேட்டா, மாட்லாபேலயம், விசாகப்பட்டினத்தின் கஜுவாகா, பெங்களூருவின் ரூசல், சென்னையின் சிந்தாதிரிப்பேட்டை என நாட்டின் முக்கியமான பெரிய மீன் சந்தைகள் இந்த மையங்களை வலைப்பின்னல்களாக இணைக்கின்றன. பங்குச்சந்தைபோலதான் இதுவும். சந்தை விலையின் ஏற்றஇறக்கங்களுக்கு ஏற்ப, கடலில் நீந்தும் மீன்களின் வேகத்தைக் காட்டிலும் இந்த வலைப்பின்னல் வழியாக வரும் மீன்களின் வேகம் மிக அதிகம். உள்நாடு மட்டுமின்றி, அமெரிக்கா, ஐரோப்பா, வளைகுடா என உலகம் முழுவதும் நீளுகின்றது இந்த வலைப்பின்னல்.

எங்கே நடக்கிறது தவறு?

இந்திய உள்நாட்டு, வெளிநாட்டு மீன் வர்த்தகத்தின் தோராயமான ‘ஸ்கெட்ச்’ இது. சரி, இதில் தவறு எங்கு நடக்கிறது, பதப்படுத்தப்பட்ட ஃபார்மலின் மீனுக்கு என்ன தேவை வந்தது? தொழிலின் தன்மை அப்படி. அரிசி, பருப்பு வியாபாரத்தைப் போல் பதுக்கி வைத்து பாய்ச்சல் காட்ட முடியாது. நாட்டுப் படகு தொடங்கி பெரிய விசைப் படகுகள் வரை கடலுக்குக் கிளம்பும்போதே வியாபாரிகள் வரவுசெலவு கணக்குகளைப் போட்டுவிடுகிறார்கள். கடலின் ஒரு நாள் கிடைக்கும் விளைச்சலில் தொடங்கி, மூன்று நாள், ஒரு வாரம், 20 நாள் விளைச்சல் வரைக்கும் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கணக்கு. ஒரு வலையில் மீன் சிக்கியதிலிருந்தே அந்த மீனின் சந்தை விலைக்கான ‘கவுன்ட் - டவுன்’ தொடங்கிவிடுகிறது. மீன் கரையில் வந்துசேரத் தொடங்கியதிலிருந்து ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒவ்வொரு விலை. நாட்கள் கடக்கக்கடக்க ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு விலை!

தலைகீழாக மாறிப்போன மீன்பாடு கணிப்பு!

வெகு வேகமாக ஏறியிறங்கும் சந்தை நிலவரத்துக்கும் காரணம் இருக்கிறது. இந்தியக் கடலின் மீன் வள வங்கியைப் பொறுத்தவரை மீன் விளைச்சல் எங்கே, எப்படி இருக்கும் என்பதற்கெல்லாம் அறிவியல் பூர்வமான தரவுகள் எதுவும் இல்லை. மீனவர்களின் பட்டறிவு அனுபவத்திலேயே கணிக்கிறார்கள். ஆனால், பருவ நிலையின் பன்மடங்கு மாற்றங்கள், சுற்றுச்சூழல் கேடுகளால் கடலின் சூழல் தலைகீழாக மாறிவிட்டது. அவர்களாலும் சரியாகக் கணிக்க இயலவில்லை. நாட்டிலேயே அபரிமிதமான மீன் வளங்களைக் கொண்ட கன்னியாகுமரியின் மணப்பாடு - விழிஞ்சம் இடையிலான குமரி மீன் வள வங்கிப் பரப்பு, குஜராத்தின் கத்தியவார் மீன் வள வங்கிப் பரப்பு இங்கெல்லாம் பாரம்பரிய மீனவர்களின் கணிப்புகள் தாறுமாறாகத் தவறிவருகின்றன. ராமநாதபுரத்தின் கீழக்கரை - மன்னார் வளைகுடா பள்ளத்தாக்கு, பாக் ஜலசந்தி நீரணை, புதுச்சேரியின் பரங்கிப்பேட்டை - கடலூர் பள்ளத்தாக்கு, மரக்காணம் பள்ளத்தாக்கு, சதுரங்கப்பட்டினம் பள்ளத்தாக்கு இவையெல்லாம் தமிழகத்தில் பிரபலமான மீன்பாடு மையங்கள்.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இன்ன மீன் வகையறா இந்தப் பரப்புக்கு வரும் என்று சொல்லி வைத்து மீன்களை அள்ளிவந்த மீனவர்கள் உண்டு. எல்லாம் பழம்பெருமையாகிவிட்டது. தமிழகத்தின் மீன்பாடு இப்போது கணிசமாகக் குறைந்துவிட்டது. வருவதிலும் கணிசமான பகுதி ஏற்றுமதியாகிவிடுகிறது.

ஃபார்மலின் நுழைவது எங்கே?

இங்கேதான் தொடங்குகிறது தவறு. நட்சத்திர ஹோட்டல் தொடங்கி பன்னாட்டு நிறுவனங்கள், நடுத்தர, சிறிய ஹோட்டல்கள் வரை டன் கணக்கில் மீன் தேவை ஏற்படுகிறது. அதேசமயம் மீன் வர்த்தகத்தைப் பொறுத்தவரை எப்போதுமே இப்படிப் பற்றாக்குறையாக இருக்கும் என்று சொல்ல முடியாது. திடீரென்று ஒருநாள் தமிழக மீன்பாடு கொட்டித்தீர்க்கும். மீதத்தை வைத்துக்கொண்டு திணறுவார்கள் வியாபாரிகள். மற்றுமொருநாள் மும்பை மீன் சந்தையில் மீன்கள் குவிந்துவிடும். ஒருநாள் எங்குமே மீன்பாடு இருக்காது. இங்குதான் ஃபார்மலின் நுழைகிறது.
சமீபத்தில் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் நடத்திய ஆய்வில் காசிமேடு, நீலாங்கரை, வேளச்சேரி, சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தைகளில் வாங்கிய 17 வகை மீன்களில் சிந்தாதிரிப்பேட்டையில் வாங்கிய 11 வகை மீன்களிலும், காசிமேட்டின் மூன்று வகை மீன்களிலும் ஃபார்மலின் இருப்பது உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது. இதனால், பக்கத்து வீட்டு அக்கா தொடங்கி வெளிநாட்டு நிறுவனங்கள் வரை மீன் வாங்க இப்போது தயங்குகிறார்கள்.
சென்னையின் மீன் வியாபாரி ஒருவர் கூறுகையில், “ஆந்திரம் மற்றும் வட மாநிலங்களிலிருந்து மொத்தமாகச் சென்னைக்கு வரும் மீன்களில் ஒருபகுதி, சிந்தாதிரிப்பேட்டைக்கும் மற்றொரு பகுதி வானகரத்துக்கும் செல்கிறது. இதில்தான் ஃபார்மலின் கலப்பு வருகிறது என்பது பலரது சந்தேகம். சிலசமயம் வஞ்சிரம், பாறை, வவ்வால் உள்ளிட்ட விலை உயர்ந்த மீன்களைப் பாதி விலைக்கு விற்பார்கள். கேட்டால், மீன் வரத்து அதிகம் என்பார்கள். இது பொய். விசாகப்பட்டினம், குஜராத் இங்கெல்லாம் அடிக்கடி ஏற்றுமதி ஆர்டர்கள் ரத்தாவதுண்டு. அந்த சமயங்களில் ஃபார்மலின் தெளித்து இங்கே தள்ளிவிட்டுவிடுவார்கள். அவைதான் விலை மலிவாக பளபளவென மின்னுகின்றன. விலை குறைவாக விற்கப்படும் இந்த வகை மீன்களை வாங்காமல் இருப்பதே நல்லது” என்கிறார்.
மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் பேசினோம். “தமிழகம் முழுவதும் விரிவான ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நடவடிக்கைகள் வேகமாக எடுக்கப்பட்டுவருகின்றன. பலஇடங்களில் மீன்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மிகப் பெரிய அளவில் நடவடிக்கை இருக்கும். மற்றபடி மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம்” என்றார்!

கருத்துகள் இல்லை: