மாலைமலர் : ரபேல் விமான ஒப்பந்தத்தில் ரகசிய காப்பு
அம்சம் இல்லை என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பிரான்ஸ் மறுப்பு
தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி:
மக்களவையில்
மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேச கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா
தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய ராகுல் காந்தி, “ரபேல் விமான ஒப்பந்தம்
குறித்தான தகவல்களை வெளியிட இருநாடுகளுக்கு இடையில் ரகசிய காப்பு ஒப்பந்தம்
இருப்பதாக மோடி அரசு கூறுகிறது. பிரான்ஸ் அதிபர் மாக்ரானுடன் நான்
உரையாடிய போது இரு நாடுகளுக்கு இடையில் எந்த ரகசிய காப்பு ஒப்பந்தமும்
இல்லை என்றார். மோடியின் நெருக்கடியினால் நிர்மலா சீதாராமன் பொய்
கூறியுள்ளார்" என்றார்.
ராகுல் காந்தியின் இந்த
குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் பிரான்ஸ் மறுப்பு தெரிவித்தது.
இதுதொடர்பாக பிரான்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய நாடாளுமன்றத்தில்
ராகுல் காந்தியின் அறிக்கையை கவனித்தோம். இந்தியா, பிரான்ஸ் ஆகிய
நாடுகளுக்கு இடையில் 2008-ஆம் ஆண்டு ரகசிய காப்பு ஒப்பந்தம் போடப்பட்டது.
அதன்படி பங்குதாரர் கூறும் உரிய தகவலை இரு நாடுகளும் சட்டப்பூர்வமாக
ரகசியம் காக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிரான்ஸ்
அறிக்கையை அடுத்து ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய
போது, “அவர்கள் (பிரான்ஸ்) விரும்பினால் அதை மறுக்கட்டும். பிரான்ஸ் அதிபர்
(இம்மானுவேல் மாக்ரான்) என் முன்னால் தான் அதை கூறினார். அந்த சமயத்தில்
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் மத்திய மந்திரி ஆனந்த் சர்மா
ஆகியோரும் உடனிருந்தனர்” என கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக