திங்கள், 6 பிப்ரவரி, 2017

சூட்கேஸ் ஜோதிடர் ஆலோசனைப்படி அமைச்சர் பட்டியலை சசிகலா தயாரித்துள்ளார்


“தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்பதற்கான வேலைகள் மும்முரமாக தொடங்கிவிட்டன. தேதி மட்டும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் இன்று பிற்பகலில் கிடைத்த தகவலின்படி நாளை அதாவது, பிப்ரவரி 7ஆம் தேதி தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்கப் போகிறார் என்று உறுதியாகச் சொல்கிறார்கள்.
சசிகலாவுக்கு ஆஸ்தான ஜோதிடர் சூட்கேஸ் ஜோதிடர் என அன்போடு அழைக்கப்படும் ஜமால்தான். அவர் சசிகலாவின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்து பதவியேற்புக்காக 6, 7, 9 ஆகிய மூன்று தேதிகளை குறித்துக் கொடுத்திருக்கிறார். கடந்த சனிக்கிழமையன்று போயஸ் கார்டன் வந்த சூட்கேஸ் ஜோதிடர் ஜமால், ‘நீங்க பதவியேற்பு விழாவை அந்த மூன்று தேதிகளில் எப்போது வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் முதல்வராகயிருக்கும் பன்னீர்செல்வத்தை 5ஆம் தேதி ராஜினாமா செய்யச் சொல்லுங்கள். அன்றே நீங்கள் முதல்வராக பதவியேற்கப்போவதற்கான அறிவிப்பையும் வெளியிடுங்கள்…’ என்று சொன்னாராம். அதைக்கேட்ட சசிகலா, ‘நாம பதவியேற்க நல்ல நாள் பார்த்தால் போதாதா? அவரு பதவி விலகுவதற்கு நல்ல நாள் பார்க்கணுமா?’ என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு ஜோதிடர் ஜமால், ‘அம்மா இருக்கும்போதே நான் சில விஷயங்களை சொல்லியிருக்கேன். பன்னீர்செல்வத்தின் ஜாதகத்துக்கு இருக்கும் பவர் உங்களுக்குத் தெரியும். அதனால்தான் அவரோட கண்களைப் பார்த்து பேச வேண்டாம் என, நான் அம்மாகிட்டயே சொல்லியிருந்தேன்.
அம்மா இருந்தவரைக்கும் பன்னீரும் அம்மா கண்ணைப் பார்த்து பேச மாட்டாரு. குனிஞ்சுட்டுத்தான் பேசுவாரு. எத்தனை முறை அவரை பதவியிலிருந்து இறக்கினாலும் மறுபடியும் ஆட்சிப்பீடத்தில் உட்காரக்கூடிய சக்தி அவரோட ஜாதகத்துக்கு இருக்கு. ஆனால் ஞாயிற்றுக்கிழமைகளில் நவமி வரும்போது அந்த நாளில் ஒருவர் அரியணையிலிருந்து இறங்கினால், மீண்டும் அரியணை ஏற முடியாது என்பது ஐதீகம். 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையில் நவமி வருது. அன்று அவரை பதவிவிலகச் சொல்லுங்க. அதே நாளில் அந்தப் பொறுப்புக்கு நீங்க வருவதாக அறிவிங்க…’ என்று காரணங்களை விளக்கியிருக்கிறார் ஜோதிடர் ஜமால். அதையெல்லாம் கேட்ட பிறகுதான் நேற்று அடுத்தடுத்த அதிரடிகள் அரங்கேறின. அதேபோல, ஞாயிற்றுக்கிழமை நவமியும் சேர்ந்து வந்த நாளில், மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான ராகு காலத்தில் சசிகலாவுக்காக துர்க்கைக்கு பூஜைகள் நடந்திருக்கின்றன. அந்த நேரத்தில்தான் அறிவிப்புகளும் வெளியானது.” என்று முடிந்தது அந்த மெசேஜ்.
“சரி… நாளை பதவியேற்பது எப்படிச் சாத்தியமாகும்? செவ்வாய்க்கிழமையில் நல்ல காரியங்களைச் செய்யமாட்டார்களே?” என்று கேட்டது ஃபேஸ்புக்.
தொடர்ந்து பதிலை அடுத்த மெசேஜில் போட்டது வாட்ஸ் அப். “செவ்வாய்க்கிழமை என்பது சிலருக்கு ராசியான நாள்தான். காரணம், செவ்வாய் என்பது முருகனுக்கு உகந்த நாள். முருக பக்தர்கள் பெரும்பாலும் செவ்வாய்க்கிழமைகளில் நல்ல காரியத்தை தொடங்குவார்கள். சசிகலா குடும்பமும் முருகனைக் கும்பிடும் வகையறாக்களை சேர்ந்தவர்கள். அவரது ஜாதகப்படி, செவ்வாய் என்பது நல்லது செய்யும் கிரகமாக இருக்கிறதாம். அதுவும் இல்லாமல் ‘தை செவ்வாய் வருவாய்!’ என்று சொல்வார்கள். தை செவ்வாயில் எதைத் தொட்டாலும் துலங்கும். அந்த நாளில் ஆட்சியில் அமருங்கள். உங்களை யாரும் அசைக்க முடியாது என்ற ஐடியாவையும் கொடுத்தவர் சூட்கேஸ் ஜோதிடர்தான். அவர் குறித்துக் கொடுத்த அந்த மூன்று நாட்களில் 7ஆம் தேதியான செவ்வாய்க்கிழமைதான் ஜாதகப்படியும் சசிகலாவுக்கு சிறப்பான நாளாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறார். அதனால், செவ்வாய்க்கிழமை பதவியேற்பு விழா இருக்கலாம். அதற்கான வேலைகளையும் சத்தமில்லாமல் செய்துகொண்டிருக்கிறார்கள் அதிகாரிகள். நடராஜனுக்கும் நம்பிக்கைக்குரிய சில அதிகாரிகளுக்கு மட்டும் இந்த தகவல் சொல்லப்பட்டிருக்கிறது.” என்று முடிந்தது அந்த பதில் மெசேஜ்.
தொடர்ந்து ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் ஒன்றைப் பதிவிட்டு சைன் அவுட் ஆனது. இதுதான் அந்த ஸ்டேட்டஸ். “சசிகலாவின் அமைச்சரவையில் பன்னீருக்கு சபாநாயகர் பொறுப்பைக் கொடுக்க வேண்டும் என்றுதான் சசிகலா நினைத்தார். பன்னீரை சபாநாயகர் ஆக்க வேண்டும் என்றால் அதற்கு தேர்தல் நடத்த வேண்டும். அதை ஏன் கம்ப்ளிகேட் ஆக்கிக்கொள்ள வேண்டும் என நினைத்த சசிகலா அந்த முடிவிலிருந்து பின்வாங்கிவிட்டாராம். நிதி அமைச்சர் பொறுப்பை மட்டும் பன்னீர்செல்வம் வகிப்பாராம். உள்ளாட்சித் துறையை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு வழங்கவும் திட்டமிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அதேபோல, முன்னாள் அமைச்சர் செம்மலையும் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள். அதே நேரத்தில், முன்னாளாக இருந்த சிலர் மீண்டும் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள். சில அமைச்சர்களின் இலாக்காக்கள் மட்டும் மாறவும் வாய்ப்புள்ளது!” என்பதே அந்த ஸ்டேட்டஸ்

கருத்துகள் இல்லை: