புதன், 27 பிப்ரவரி, 2013

Jeyamohan அசடுகளும் மகாஅசடுகளும்

நான் தமிழகத்தின் உண்மையான சமூகசேவகர்களில் ஒருவராக, அறிஞராகக் கருதும் மனிதர்களில் ஒருவர் ஒத்திசைவு ராமசாமி. விஜய் டிவியின் மாணவர்கள் – களப்பணியாளர்கள் என்ற நிகழ்ச்சியைப்பற்றி அவர் எழுதியிருந்ததை வாசித்தேன்.

அந்நிகழ்ச்சியைத் தரவிறக்கிப் பார்த்தேன். [நானும் இருபது வருடங்களாக வீட்டில் தொலைக்காட்சி இணைப்பு இல்லாதவன்] எனக்கும் அதே எண்ணம்தான் ஏற்பட்டது. களப்பணியாளர்கள் என்று ஒரு கூட்டத்தைக் கொண்டு வந்து அமரச்செய்திருக்கிறார்கள்.
அவர்களில் முக்கால்வாசிப்பேரை எனக்கு நேரடியாகவே தெரியும். அவர்கள் என்ன களப்பணி செய்கிறார்கள் என்று கேட்டால் நான் சங்கடப்படுவேன்.பெரும்பாலானவர்கள் திராவிடக்கட்சிகள் அல்லது இடதுசாரிக்கட்சிகளின் ஏதேனும் அணிகளில் ஒட்டிக்கொண்டு எதையாவது செய்துகொண்டிருப்பவர்கள். அல்லது தன்னார்வக்குழு வைத்துக் காசு பார்ப்பவர்கள். அல்லது ஆங்கிலச்செய்தி இதழ்க் கட்டுரைகளை ஒட்டித்தமிழில் அபத்தமாக எதையாவது எழுதுபவர்கள். ஒருவர் கூட , ஆம் ஒருவர் கூட, எதையாவது வாசிப்பவர்கள் அல்ல

ஆனால் அவர்கள் விசித்திரமான எக்களிப்புடன் மாணவர்களை மட்டம் தட்டுகிறார்கள். மாணவர்கள் தமிழகத்தின் சராசரிகள். அவர்களுக்குப் பாடம்படிப்பதற்கு மேல் ஏதாவது வாசிப்பு தேவை என்றே தெரியாது. ஆகவே வாசிப்பு பற்றி கேட்டபோது திருதிரு என்று விழித்தார்கள். ஆனால் இந்த ‘வாசிப்புத் திலகங்கள்’ அவர்களுக்கு என்னென்ன வாசிப்பு அறிவுரைகள் சொன்னார்கள்?
டி.ஒய்.எஃப்.ஐ யில் அடிப்படை உறுப்பினராகச் சேரச்செல்லும் இளைஞனுக்கு முதலில் கொடுக்கப்படும் அறிமுகநூல்கள் வால்காவிலிருந்து கங்கைவரை, எரியும்பனிக்காடு போன்றவை. அந்தப் பெயர்கள் சிலருக்கு நினைவில் பளிச்சிட்டன. அதன் பின் ஒன்றுமே நினைவுக்கு வரவில்லை. குத்துமதிப்பாக அம்பேத்கர், ஈவேரா, அண்ணாத்துரை புத்தகங்களை வாசியுங்கள் என அறிவுரை. அம்பேத்கரின் எந்த நூலைப் படிப்பது என அவர்களில் ஒரு மாணவன் கேட்டிருந்தால் இவர்கள் வழிந்திருப்பார்கள்.
நானறியாத சிலர் அந்த ‘களப்பணி’ மேதைகளில் இருந்தார்கள். அவர்களில் ஒருவராவது சென்ற ஐந்து வருடத்தில் தமிழில் பேசப்பட்ட ஒரு புத்தகத்தைக் குறிப்பிடமாட்டார்களா என நான் ஏங்கினேன். சரி, அவர்களின் சொந்தக் கட்சிச்சார்பான புத்தகத்தை சுட்டிக்காட்டினாலாவது ஓரளவு நிறைவடைந்திருப்பேன். இளம்வாசகர்களுக்குப் பரிந்துரைக்க தாங்கள் உண்மையிலேயே வாசித்த ஒரு சின்ன நூலை சொல்லக்கூடிய ஒருவர் கூட அந்த வரிசையில் இருக்கவில்லை
அம்பேத்கரின் நூல்களை– ஆமாம் நூல்தொகுதிகளை- பரிந்துரைக்கிறார்கள். கல்லூரி மாணவர்களுக்கு. நல்லவேளையாக அந்த மேதைகளில் ஒரு மாமேதை எழுந்து என்சைக்ளோப்பீடியா பிரிட்டானிக்காவைப் பரிந்துரைக்கவில்லை. விக்கிப்பீடியாவைப் பரிந்துரைக்கவில்லை. ’சட்டுன்னு அதேன் ஞாபகம் வருது’ என்று. கேவலம். இந்த லட்சணத்தில் என்ன ஒரு சிரிப்பு ,என்ன ஒரு பாவனை, என்ன ஒரு கம்பீரம்…
இளம்அசடுகளை முற்றிய அசடுகள் சந்தித்த நிகழ்ச்சி குமட்டலை உருவாக்கியது. இளமையின் அசட்டுத்தனம் மன்னிக்கப்படக்கூடியது. ஆனால் இந்த மூத்த அசடுகளின் அறியாமை மட்டுமே அளிக்கும் தன்னம்பிக்கை மிக்க சிரிப்பைக்காணும்போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை
ராமசாமி கட்டுரை
நீயா நானா வீடியோ பதிவு

கருத்துகள் இல்லை: