இது குறித்து சமீபத்தில் ஜூனியர் விகடனுக்கு அவர் அளித்துள்ள சிறப்புப் பேட்டி:
கேள்வி: பென்னாகரம் இடைத்தேர்தல் களம் எப்படியிருக்கு?
அழகிரி: தலைவர் கலைஞரின் நல்லாட்சியைப் பற்றி எங்களை நாங்களே எடை போட்டுக்கொள்ள இந்த இடைத் தேர்தல்கள் உதவுது. எங்கள் ஆட்சி குறித்த மக்களின் விமர்சனங்களும், சந்தோஷங்களும், கவலைகளும்தான் எங்களை வழிநடத்திக்கிட்டு இருக்கு. நேற்றைக்கு எம்.எல்.ஏவாக இருக்கறவங்க இன்றைக்கு எதுவும் செய்யாமல், நாளைக்கு தொகுதிக்குள் போக முடியாதுங்கறதுதான் இன்றைய ஜனநாயகத்தின் நிலைமை. அந்தப் பயமும், கவனமும் எப்பவுமே எங்ககிட்ட இருக்கு.
எல்லா இடைத் தேர்தல்களிலுமே மக்களோட ஆரவாரமான வரவேற்பைப் பார்க்கும்போது, 'அப்பாடா, நம்ம தலைவர் செஞ்சிருக்கற நல்ல விஷயங்கள் மக்களைப் போய்ச் சேர்ந்திருக்கு'ன்னு நிம்மதி பெருமூச்சுவிட முடியுது. ஒரே ஒரு விஷயத்தை செஞ்சுட்டு, அதையே அஞ்சு வருஷமும் சாதனையா சொல்லிப் பெருமைப்பட்டுக்கிற ஆட்சியாளர்களுக்கு மத்தியில், தலைவர் தன்னோட சாதனைகளை சில மாதங்களுக்கு மேல் பேச விடறதில்லை. ஏன்னா, அதுக்குள்ள அடுத்த சாதனையை செஞ்சு அதைப் பத்தி பேச வச்சிடுறார்! தலைவரோட சாதனைகளால் பென்னாகரத்தில் கழகத்தோட வெற்றியைத் தடுக்க யாராலும் முடியாது!.
கேள்வி: இடைத் தேர்தல் நேரத்தில் ஆஸ்திரேலியாவுக்குக் கிளம்புகிறீர்களே?
அழகிரி: தேர்தல் களத்துக்குச் சென்றால்தான் அங்கு எனது செயல்பாடுகள் இருக்கும் என்று அர்த்தமில்லை. நான் அங்கு செல்லாமலேயே அமைச்சர்கள் பலரும் பம்பரமாய் தேர்தல் பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். அமெரிக்காவில் இருந்து கொண்டு வீடியோ கான்ஃபரன்ஸ் உதவியோடு சென்னையில் ஆபரேஷன் செய்வதில்லையா? அதேபோன்று ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டும் பென்னாகரம் தேர்தல் களத்தை என்னால் கவனிக்க முடியும்.
கேள்வி: பாமக கடும் நெருக்கடி கொடுப்பதால்தான் முதல்வர் கருணாநிதியே நேரடியாகப் பிரசாரத்துக்குச் செல்கிறாராமே?
அழகிரி: யாருக்கு யார் நெருக்கடி கொடுப்பது? இந்தமுறை திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எத்தனையோ இடைத் தேர்தல்களை சந்தித்து விட்டோம். இதில் ஒன்றிலாவது பாமகவினால் குறிப்பிடத்தக்க சாதனையை செய்ய முடிந்ததா? கடைசியாக நடந்த வந்தவாசி இடைத் தேர்தலில்கூட '49-ஓ பிரிவில் வாக்களித்து எங்கள் பலத்தை நிரூபிப்போம்' என சவால் விட்டார் ராமதாஸ். 49-ஓ பிரிவில் மொத்தமே 49 பேர்கூட வாக்களிக்கவில்லை.
'வன்னியர் சமுதாய மக்களுக்காக கட்சி நடத்துகிறோம்...' என்ற ஏமாற்று வார்த்தையை சொல்லி, இனிமேலும் அந்த சமுதாய மக்களை ராமதாஸால் ஏமாற்ற முடியாது. எத்தனையோ வன்னியர் சமுதாய மக்களின் தியாகத்தில் உருவான அந்தக் கட்சியின் மூலமாக சுகபோகம் அனுபவிப்பதென்னவோ ராமதாஸ் குடும்பம் மட்டும்தான். இதனால் பென்னாகரத்தில் பாமகவுக்குத்தான் நெருக்கடி!
மற்றபடி, தலைவர் பிரசாரத்துக்கு போவதென்பது, சாதாரணமான நிகழ்வுதான். தென் மாவட்டங்களில் இடைத்தேர்தல் நடக்கும்போதெல்லாம்கூட தலைவர் பிரசாரத்துக்கு வருவதாகத்தான் சொல்வார். நாங்கள்தான் அவரை வரவேண்டாம் என மறுத்து விடுவோம்.
கேள்வி: அதிமுக எப்படியிருக்கிறது?
அழகிரி: எப்படியிருக்குன்னு கேட்காதீங்க... எங்கே இருக்குன்னு கேளுங்க? ஜெயலலிதா எப்ப கட்சிக்கு லீவு விடுவாங்க, எப்ப கட்சி நடத்துவாங்க என்பதெல்லாம் யாருக்குமே தெரியாது. அந்தக் கட்சியோட தொண்டர்கள் பாவம்...
கேள்வி: தமிழகம் முழுவதும் திமுகவுக்கு எதிராக, தொடர்ச்சியான போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறாரே வைகோ?
அழகிரி: முல்லைப் பெரியாறு பிரச்னைக்காக கேரளாவுக்குச் செல்லும் வாகனங்களை மறிக்கும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார் வைகோ. அவர் போராட்டம் அறிவித்த தினத்தன்று கேரளாவிலேயே பந்த் அறிவிக்கப்பட... ஒரு சைக்கிளைக்கூட மறிக்க முடியாமல் திண்டாடிப் போனார் வைகோ!.
ஏதாவது ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்தியாவது மாற்றுக் கட்சிகளுக்குத் தாவும் தன் கட்சியினரைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைக்கிறார். ஆனாலும், அவரது கட்டுப்பாட்டில் அவரது கட்சியினர் இல்லை. கடந்த முறை உறுதியாக ஜெயிக்க முடியாது என தெரிந்து, பெரிய மனதோடு ஒரு ராஜ்யசபா எம்.பி சீட்டை வைகோவுக்கு ஜெயலலிதா வழங்க... அதை மீண்டும் அதிமுகவிடமே ஒப்படைத்தார் வைகோ. இந்த முறை மீண்டும் அதிமுகவிடம் ராஜ்ய சபா ஸீட் கேட்கும் ஆசையோடு ஜெயலலிதை சந்திப்பதற்காக மாதக் கணக்கில் காத்துக்கிடக்கிறார்...!.
கேள்வி: டெல்லியில் கடந்த முறை நடந்த கேபினட் கூட்டத்தில் பாதியிலேயே நீங்கள் வெளிநடப்பு செய்ததாக செய்திகள் வெளியானதே?
அழகிரி: இப்படியொரு கதை பரவியிருக்கறது எனக்குத் தெரியாதே..!. உண்மையில் அந்த கேபினெட் கூட்டம் பல்வேறு துறைகளிலும் சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்காகக் கூட்டப்பட்டது. அதில், எனது உரத் துறை சார்பாகவும் உர இறக்குமதி, உர மானியம் மற்றும் உர விலை உயர்வு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. உர விலையை உடனடியாக உயர்த்தவேண்டும் என்ற விவாதங்கள் கிளம்பியபோது, நான் குறுக்கிட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஏற்கெனவே, பருவ மழை பொய்த்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் நொந்து போயிருக்கும்போது, உர விலையை உயர்த்துவது என்பது விவசாயிகளை மேலும் துயரத்துக்கு உள்ளாக்கும். அதனால், உர விலையை உயர்த்தக் கூடாது என தலைவரின் சார்பாக ஒரு கோரிக்கையை வைத்தேன்.
அதன் பின்னரும் உர விலையை உயர்த்துவது குறித்து வாதங்கள் தொடர்ந்தபோது, விலையை உயர்த்தக் கூடாது என உறுதியாக எனது கோரிக்கையை எடுத்து வைத்தேன். உண்மையில் நடந்தது இதுதான்.
கேள்வி: ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனிக்கு கடந்த முறை அரசு முறைப் பயணமாகப் போக முடிவெடுத்தபோது, உங்களுடன் பயணம் செய்யவிருந்த குறிப்பிட்ட சிலரின் பின்னணியைப் பார்த்து பிரதமரே அந்தப் பயணத்துக்குத் தடை போட்டதாக செய்திகள் வெளியானதே?
அழகிரி: இப்படி வேற கிளம்பியிருக்காங்களா..? கடந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு அரசு முறைப் பயணம் கிளம்ப முடிவெடுத்த சமயம், நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கவிருந்தது. அமைச்சர் என்ற முறையில் அந்த சமயத்தில் நான் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டியிருந்ததால், அந்தப் பயணத்தை சற்று தள்ளிப் போடும்படி பிரதமர் அலுவலகத்தில் இருந்து கேட்டுக் கொண்டனர். அப்போது தள்ளிப் போடப்பட்ட பயணத்தை இதோ இப்போது செயல்படுத்துகிறேன். இதுதான் உண்மை!.
கேள்வி: டெல்லியிலிருந்து தமிழக அரசியலுக்கு வரும் உங்களின் ஆசை என்னவாயிற்று?
அழகிரி: இப்பவும் நான் தமிழகத்தில்தானே இருக்கேன்! தமிழகத்திலிருந்துதானே டெல்லிக்கு போனேன்! பத்திரிகைகளில்தான் எதையாவது எழுதிக்கிட்டிருக்காங்க. அழகிரியை பொறுத்தவரைக்கும் உள்ளன்று வைத்துப் புறமொன்று பேசுபவன் அல்ல. டெல்லியைவிட்டு வர நான் ஆசைப்பட்டிருந்தால், நானே வெளிப்படையாகச் சொல்லியிருப்பேன்.
என்னைப் பொறுத்த வரைக்கும் மதுரை எம்பியாக மகிழ்ச்சியாக, திருப்தியாக இருக்கிறேன். அதேநேரத்தில் டெல்லியைவிட்டு தமிழக அரசியல் களத்துக்கு வர விரும்பினால், அதனை சந்தோஷமாக வரவேற்பது தலைவர் கலைஞராகத்தான் இருக்க முடியும்..!
கேள்வி: நாடாளுமன்றத்தில் உரத் துறை தொடர்பான விவாதங்களின்போது நீங்கள் மாயமாகி விடுவதாக எதிர்க்கட்சிகள் புகார்கிளப்புகின்றனவே?
அழகிரி: இதுவரை எந்த அமைச்சரும் செய்யாத உர மானியத்தை விவசாயிகளிடமே நேரடியாகக் கொண்டு சேர்க்கும் மாபெரும் திட்டத்துக்கான ஆரம்ப வேலைகளைத் தொடங்கியிருக்கிறேன். இந்தியா முழுவதும் நலிவடைந்து மூடிக்கிடக்கும் எண்ணற்ற உரத் தொழிற்சாலைகளை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறேன்.
வெளிநாடுகளில் இருந்து உர இறக்குமதியை அதிகப்படுத்தி, உரத் தட்டுப்பாடுகளை முற்றிலும் தவிர்த்திருக்கிறேன். ஏழை-எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைப்பதற்காக மருந்து கம்பெனிகளுடனும், மருத்துவ ரசாயன கம்பெனிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறேன். இத்தகைய சாதனைகளை மறந்து விட்டு, 'அழகிரி பதில் சொல்லவில்லை' என்பது நியாயமா?
தேள்வி: திடுதிப்பென்று உங்கள் மகன் துரைதயாநிதிக்கு திருமண நிச்சயதார்த்தத்தை முடித்து விட்டீர்களே?
அழகிரி: என்னதான் கட்சி, பதவி என சுத்திக்கிட்டிருந்தாலும் நானும் ஒரு தகப்பன்தானே... எனக்கும் சில கடமைகள் உண்டு. துரையை விரல்பிடித்து நடக்கவைத்த முதல் கடமையில் தொடங்கி, துரை விரும்பிய படிப்பைப் படிக்க வைத்தது, விரும்பிய தொழிலை செய்ய அனுமதித்தது வரைக்குமான எனது கடமைகளை சரியாகவே செய்திருக்கிறேன்.
ஒரு மகனுக்கு தந்தை செய்யும் முக்கிய கடமை, திருமணம் செய்து வைப்பதுதான். அந்தவகையில் நானும் எனது மனைவி காந்தியும் சேர்ந்து ஒரு நல்ல பெண்ணை துரைக்காகத் தேர்ந்தெடுத்தோம். துரையிடம் கேட்டு அவருக்குப் பிடித்து, அதன் பின்பு தற்போது நிச்சயதார்த்தமும் முடிந்துவிட்டது. எனது கடமைகளைத் திருப்தியாக நிறைவேற்றிய மகிழ்ச்சியில் இருக்கிறேன்.
கேள்வி: ஒரு அண்ணனாக கனிமொழியின் எதிர்காலத்துக்கு எந்தவகையில் உதவியாக இருக்கப் போகிறீர்கள்?''
அழகிரி: (பலமாகச் சிரிக்கிறார்) இந்த அழகிரியைப் பொறுத்தவரைக்கும் என்னுடைய எதிர்காலத்தையே நான் முடிவு செய்வதில்லை. காலம் விட்ட வழியில் போய்க் கொண்டிருக்கிறேன். இதில் மற்றவர்களின் எதிர்காலத்தை முடிவு செய்யும் உரிமையும், அதிகாரமும் என் கையில் இல்லை. அவரவர் எதிர்காலத்தை அவரவர்தான் முடிவு செய்ய வேண்டும். அதேநேரத்தில் தனிப்பட்ட முறையில் ஓர் அண்ணனாக கனிமொழிக்கு எனது அன்பும், ஆதரவும் என்றைக்கும் இருக்கும்.
கேள்வி: கலைஞருக்குப் பிறகு திமுகவில் யாரைத் தலைவராக ஏற்றுக் கொள்வீர்கள்?
அழகிரி: எனக்கு 10 வயதிருக்கும்... அப்போதுதான் திராவிட கலாசாரத்தைப் பற்றியும் பெரியாரைப் பற்றியும் தலைவர் என்னிடம் விளக்கினார். அப்போது, பெரியார்தான் எனக்குத் தலைவராகத் தெரிந்தார். அதன் பிறகு அறிஞர் அண்ணாவின் பேச்சும், எழுத்தும் என்னைக் கவர, அண்ணாவைத் தலைவராக ஏற்றுக் கொண்டேன். அண்ணாவுக்குப் பிறகு அப்போதும் இப்போதும் எப்போதும் தலைவர் கலைஞர் மட்டுமே எனக்குத் தலைவர்!.
தலைவர் கலைஞர் இருக்கும்போது, மற்றவர்களைப் பற்றி யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை. இருந்தாலும், தலைவர் கலைஞருக்குப் பிறகு திமுகவில் யாரையுமே நான் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டேன். தலைவர் கலைஞரின் இடத்தை நிரப்பும் தகுதியும் திறமையும் யாருக்கும் இருப்பதாக நான் நினைக்கவில்லை..!
Read: In English
இவ்வாறு பேட்டியளித்துள்ளார் அழகிரி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக