ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

தமிழகம் முழுவதும் மூன்றாவது நாளாக தொடர்ந்து போராட்டம்..


நீட் தேர்விலிருந்து விலக்களிக்கப்படாததால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் தமிழகம் முழுவதும் மூன்றாவது நாளாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
நீட் தேர்விலிருந்து விலக்களிக்க கோரி உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய மாணவி அனிதா, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்கப்படாததால், வேதனையடைந்து கடந்த 1 ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார்.
மருத்துவம் படிக்கும் அனைத்து தகுதிகளையும் கொண்ட ஒரு மாணவி, நீட் தேர்விலிருந்து விலக்களிக்கப்படாததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு வடிவிலான போராட்டங்கள் நடைபெற்றன. தலைநகர் டெல்லியிலும் இந்த போராட்டம் எதிரொலித்தது . ஜந்தர்-மந்தர், ஜவகர்லால் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களிலும் போராட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இன்றும்( செப்டம்பர்-3) போராட்டம் நடைபெற்றது. சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள லயோலா கல்லூரி மாணவர்கள் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராகவும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் மாணவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
சென்னை தி.நகரிலுள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தை, மே 17இயக்கம், விடியல் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர். அதற்கு முன்பாக காவல்துறையினர் அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். அப்போது நீட் தேர்வை தடை செய்ய வேண்டுமெனவும்,மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் முழக்கம் எழுப்பினர்.
அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு,விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மயிலாப்பூர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் அனிதாவின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி, பத்திரிகையாளர் சார்பில் போராட்டமும் நடைபெற்றது.தொடர்ந்து திருப்போரூர், சீர்காழி என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: