செவ்வாய், 5 செப்டம்பர், 2017

மருத்துவப் படிப்புக்கு ஒரு நீதி! சட்டப்படிப்புக்கு ஒரு நீதி! நியாயம் இல்லாத நீட்! -ஒரு மருத்துவரின் குமுறல்!

சாத்தூரில் மருத்துவ சேவை செய்து வரும் டாக்டர் பழனியப்பா சமூக ஆர்வலர் ஆவார். அனிதா தற்கொலையைத் தொடர்ந்து, மருத்துவப் படிப்பையும், சட்டப் படிப்பையும் ஒரே பார்வையில் நீதித்துறை ஏன் பார்க்கவில்லை என்று கேள்வி எழுப்புகிறார்; விமர்சிக்கவும் செய்கிறார். மருத்துவப் படிப்போடு, சட்டப் படிப்பையும் நிறைவு செய்திருக்கும் அவரது கருத்து இதோ – NEET பரீட்சையில் தேர்வு பெற்றால் தான் MBBS (மருத்துவம்)படிக்க வேண்டும் என்றால் சீமான்களே! நீங்கள் படிக்கும் LLB(வக்கீல்) படிப்புக்கு ஏன் NEET பரீட்சை இல்லை? 12-ஆம் வகுப்பு தேர்வு பெற்றால் LLB-5 வருட படிப்பும், அதில் போதிய மதிப்பெண் இல்லாவிட்டால் ஒரு பட்ட படிப்பை முடித்த பின் LLB-3 வருட படிப்பு என்றும் வைத்து கொண்டு, கடின உழைப்புக்கு மரியாதை கொடுக்காமல் மரண சாசனம் எழுதுகிறீர்கள். நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்.. போதிய மதிப்பெண் பெறாமல் MBBS படிக்க வாய்ப்பு கிடைக்காமல் BL படித்துவிட்டு வாதிடுகிறோம் என்ற போர்வையில், பொய் சொல்லி அலைந்துவிட்டு, பதவி உயர்வு பெற்று அந்தஸ்து அடைந்ததும், பழைய ஆதங்கத்தை MBBS படிப்பில் காட்டாதீர்கள்.


தீர்ப்புக் கூடம் கொலைக்கூடமாக மாறக்கூடாது. தைரியம் இருந்தால் LLB படிப்புக்கு NEET பரீட்சை வைத்துப் பாருங்கள். அப்படிச் செய்தால் நீதி நிலைக்கும். LLB படிப்புக்கு மட்டும் மாநிலத்தின் பாடத்திட்டம் போதும் என்று NEET தேர்வு பற்றி பேசாமல் இருக்கின்றீர்கள்.
நீதி தேவதையின் கண்களைக் கட்டிய துணியை அவிழ்த்து விட்டுவிட்டது கொடுமை அல்லவா! அனைத்து படிப்புக்கும் NEET கொண்டு வாருங்கள். இல்லையேல் எந்த படிப்புக்கும் NEET பரீட்சை வேண்டாம்.இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டமாகக் கொண்டு வந்து, அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளையும் அரசு ஏற்று நடத்த வேண்டும் . டாக்டர் பழநியப்பா சொல்வதிலும், நீதி இருக்கத்தானே செய்கிறது! -சி.என்.இராமகிருஷ்ணன் நக்கீரன்

கருத்துகள் இல்லை: