திங்கள், 4 செப்டம்பர், 2017

உ.பி. ஆக்சிஜன் மரணங்கள் தொடர்கிறது ..மேலும் 49 குழந்தைகள் அரசு மருத்துவமனையில் .. விசாரணையில் அம்பலம்

UP Again, 49 Children Die In Hospital Allegedly Due To Oxygen ...
tamithehindu :பரூக்காபாத் அரசு மருத்துவமனையில் ஒருமாதத்தில் 49 குழந்தைகள் இறந்துள்ளன. இந்தப் படம் பிரதிநிதித்துவ்த்திற்காக மட்டுமே.   -  படம். | டிஒய். ரைட்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சப்ளை தட்டுப்பாட்டினால் ஒரு மாதத்தில் 30 குழந்தைகள் உயிரிழந்ததாக விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாக 2 மூத்த மருத்துவ அதிகாரிகள் மற்றும் பிற மருத்துவர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளது உ.பி.அரசு.
ஃபரூக்காபாத் மாவட்ட மேஜிஸ்ட்ரேட் புகாரின் பேரில் ஃபரூக்காபாத் கோட்வாலி காவல்நிலையத்தில் சட்டப்பிரிவு 304 (அலட்சியத்தினால் மரணம் சம்பவிக்கக் காரணமாக இருந்தது) 176 மற்றும் 188 ஆகிய பிரிவுகளில் மூத்த மருத்துவ அதிகாரி, தலைமை மருத்துவக் கண்காணிப்பாளர், பிற மருத்துவர்கள் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2 மூத்த மருத்துவ அதிகாரிகள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதோடு பிற மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு தண்டனை, பணியிட மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதிதாகப் பிறந்து இறந்த குழந்தைகளின் தாய்மார்கள் ஆக்சிஜன் சப்ளை குறைபாட்டினால் குழந்தைகள் இறந்ததாகப் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து மாவட்ட மேஜிஸ்ட்ரேட் ரவீந்திர குமார் விசாரணைக் குழு அமைத்தார். அதாவது ஆகஸ்ட் மாதத்தில் புதிதாகப் பிறந்த 49 சிசுக்களின் மரணத்துக்குக் காரணம் என்ன என்று விசாரித்து 3 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் இந்த விசாரணைக் குழுவின் முடிவுகளில் திருப்தியடையாத டி.எம்., நகர மேஜிஸ்ட்ரேட், துணை டிவிஷன் மேஜிஸ்ட்ரேட், மற்றும் தாசில்தார் ஆகியோர் அடங்கிய இன்னொரு குழுவை அமைத்து விசாரணை மேற்கொண்டார்.
இந்த விசாரணையில் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 20-ம் தேதி வரை ஆக்சிஜன் தட்டுப்பாட்டினால் 30 குழந்தைகள் இறந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
அதாவது மருத்துவர்கள் உரிய நேரத்தில் ஆக்சிஜன் குழாயைப் பொருத்தவில்லை என்றும் மருந்துகளையும் உரிய நேரத்தில் அளிக்கவில்லை என்றும் பெற்றோர்கள் புகார் அளித்தனர், அவர்களின் புகார்கள் அடிப்படையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டினால்தான் குழந்தைகள் இறந்தன என்று தெரியவந்தது.
மேலும், கடந்த 6 மாதங்களில் ஏற்பட்ட குழந்தைகள் இறப்புக்குக் காரணம் என்னவென்று தலைமை மருத்துவர் மற்றும் தலைமை மருத்துவ அதிகாரி ஆகியோரிடம் விசாரணைக் குழு கேட்டிருந்த போது உத்தரவுக்கு சரியாக இணங்காமல் சரியான தகவல்களை அளிக்காமல் இருந்துள்ளனர்.
கோரக்பூர் மருத்துவமனை குழந்தைகள் பலி என்ற அதிர்ச்சியிலிருந்து நாடே மீளாத நிலையில் தற்போது இன்னொரு ஆக்சிஜன் தட்டுப்பாடு விவகாரமும் அதனால் 30 குழந்தைகள் பலியானதும் அம்பலமாகியுள்ளது.
மேலும் குழந்தைகள் இறப்புக்கான மருத்துவ மற்றும் உண்மைக் காரணங்களை அறிய அரசு மட்டத்தில் உயர்மட்ட குழு ஒன்று மருத்துவமனைக்கு அனுப்பப்படவுள்ளது.
அரசுச் செய்தித் தொடர்பாளர் தகவலின் படி ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 21-ம் தேதி வரை 461 பெண்கள் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 468 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளனர். இதில் 19 குழந்தைகள் இறந்து பிறந்தது. மீதமுள்ள 449 குழந்தைகளில் 66 குழந்தைகள் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கான சிறப்புப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதில் 60 குழந்தைகள் பிழைத்தன, 6 குழந்தைகள் பலியாகின.
இது தவிரவும் பிற மருத்துவமனைகள் பரிந்துரைகளின் பேரில் 145 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 121 குழந்தைகளின் உடல் நலம் மீண்டது. ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 30 வரை பிறந்த குழந்தைகள் 49 பேர் பலியாகியுள்ளனர், இதில் 19 இறந்தே பிறந்ததாகும். 30 குழந்தைகள்தான் தற்போது மருத்துவமனை அலட்சியத்தினால் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக பலியாகியுள்ளன.
வழக்கம் போல் குழந்தைகள் இயற்கை மரணமே அடைந்தனர் என்று சில தரப்புகள் மறுப்பதும் தொடர்கிறது.

கருத்துகள் இல்லை: