செவ்வாய், 26 ஜூலை, 2011

இருமொழிகளிலும் தேர்ச்சி பெற்றோருக்கே அரச நியமனங்களில் எதிர்காலத்தில் முன்னுரிமை


பதுளையில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார
vasudeva_nanayakkara“அரசினால் எதிர்வரும் காலங்களில் வழங்கப்படும் அரச நியமனங்கள் அனைத்தும் தமிழ் மற்றும் சிங்களம் போன்ற இரு மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கே வழங்கப்படும். அதற்கான ஏற்பாடுகளை முன்னிலைப்படுத்தி மேற்கொண்டு வருகின்றேன்”

இவ்வாறு, தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, பதுளை ரிவர்சைட் விடுதியில் 17-06-2011 நடைபெற்ற செயலமர்வொன்றில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையில் குறிப்பிட்டார்.

இச்செயலமர்வில் சமூக முக்கியஸ்தர்கள், ஊடகவியலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தொடர்ந்தும் பேசுகையில், “கடந்த 2007ம் ஆண்டிற்குப் பிறகு வழங்கப்பட்ட அரச நியமனங்களில் ஐந்து வருடங்களுக்குள் தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. அத்தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே, சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

அவ்வகையில் 26 ஆயிரம் பேர் இரு மொழிச் தேர்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். அத்தேர்ச்சி பெற்றிருந்தும் கூட ஒரு மொழியில் மட்டுமே அவர்கள் கடமைகளை மேற்கொண்டனர். இது போன்ற நிலை ஆரோக்கியமானதோர் சூழலைத் தோற்றுவிக்காது. மொழி உரிமை மீறப்படாத வகையில் அரச அலுவலகங்கள் அனைத்திலும் செயல்பாடுகள், முன்னெடுக்கப்படல் வேண்டியது அவசியமாகும்.

அரச நியமனங்களைப் பெற்றிருப்பவர்களுக்கு இரு மொழி தேர்ச்சி பயிற்சிகள் இடம்பெற்று வரும் அதேவேளையில் புதிதாக நியமனங்கள் வழங்கப்படும் போது, இரு மொழிகளில் தேர்ச்சி முன்னிலைப்படுத்தப்படும். இரு மொழி தேர்ச்சி இல்லாதவர்களுக்கு எதிர்காலங்களில், அரச நியமனங்கள் வழங்கப்பட மாட்டாது.

ஊவா மாகாண சபை உறுப்பினர் க. வேலாயுதம் விடுத்த கோரிக்கைக்கமைய பிரதேச மட்டத்தில் மொழி உரிமை விடயங்களை நடைமுறைப்படுத்தாமல், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இரு மொழிக் கொள்கை முன்னெடுக்கப்படல் வேண்டும். வட, கிழக்கில் ஒரு மொழி, தென்பகுதியில் ஒரு மொழியுமென்ற நிலை மாற்றப்பட வேண்டுமென்பதை, நான் முழுமையாக ஏற்றுக் கொள்கின்றேன். அரசியலமைப்பிலும், அதே நிலை முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு, எனது அமைச்சை சார்ந்ததாக இல்லாத போதிலும் பாடசாலை மட்டத்திலிருந்தே, இரு மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும். தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் நன்கு தேர்ச்சியுள்ளதும், ஆற்றலுள்ளதுமான திறமையான ஆசிரியர்களையே, அம்மொழிகளைக் கற்பிக்க ஈடுபடுத்தப்படல் வேண்டும். அவ் வகையிலான ஆசிரியர்களை இனம் கண்டு தெரிவு செய்ய வேண்டும். வெறுமனே ஆசிரியர்களாக இருப்பவர்கள், எல்லோருக்கும் கற்பிக்கும் தேர்ச்சி இல்லையென்பது இங்கு விளக்கமாக முன்வைக்கப்பட்டிருந்தது.

மொழி உரிமை விடயத்தில், சர்வதேச நாடுகளின் உதவிகளை எனது அமைச்சு கோரியிருக்கின்றது. தற்போதைய நிலையில் கனடா அரசு, இவ்விடயத்தில், எமது அமைச்சிற்கு நிதி உதவியளித்துள்ளது.

கருத்துகள் இல்லை: