திங்கள், 25 ஜூலை, 2011

பாழான' பாய்ஸ் கிளப்-கவனம் திருப்பிய போலீசார்!

சென்னையில் குடிசைப் பகுதி மற்றும் கடற்கரையை சேர்ந்த சிறுவர்களை நல்வழிப்படுத்த கொண்டு வரப்பட்டு பாழான நிலையில் காணப்படும், பாய்ஸ் கிளப்களை, மீண்டும் பொழிவுப்படுத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

சென்னையில் நடக்கும் குற்ற சம்பவங்களில் அதிகளவிலான சிறுவர், சிறுமிகள் ஈடுபடுவது போலீசாரின் ஆய்வில் தெரிந்தது. இதையடுத்து, கடந்த 2003-ம் ஆண்டு, சென்னையில் உள்ள குடிசை மற்றும் கடற்கரை பகுதிகளை சேர்ந்த சிறுவர்களை நல்வழிப்படுத்த போலீசாரால் பாய்ஸ் கிளப் துவக்கப்பட்டது.

ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள போலீஸ் நிலையம் சார்பில், சிறுவர், சிறுமியர் விளையாட செஸ், கிரிக்கெட், கால்பந்து ஆகியவற்றை தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் போலீசார் வாங்கிக் கொடுத்தனர். தவறான பாதையில் செல்லும் மாணவர்களுக்கான நல்வழி கல்வி, அறிவை வளர்க்ககூடிய பயிற்சி வகுப்புகள் ஆகியவை நடத்தப்பட்டன.

இந்த வகையில் சென்னை நகரில் செயல்பட்ட 81 சிறுவர் மன்றங்களால், சிறுவர், சிறுமிகள் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது, பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டது. வெற்றிகரமாக செயல்பட்ட இந்த பாய்ஸ் கிளப்பை பிற்காலத்தில், யாரும் கண்டுக்கொள்ளாமல் விட்டதால், பல இடங்களில் செயல்பட்ட பாய்ஸ் கிளப்கள் பாழடைந்தன.

பாய்ஸ் கிளப்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தற்போது வெகுவாக குறைந்துள்ள நிலையில், சென்னையில் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. போலீசாரின் கணக்கெடுப்பில், அதில் அதிகளவில் சிறுவர்களும், மாணவர்களும் ஈடுபடும் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

இவர்களை கைது செய்து விசாரிப்பதில், பல சிக்கல்கள் உள்ள நிலையில், பராமரிப்பின்றி விடப்பட்ட பாய்ஸ் கிளப் பக்கம் போலீசாரின் கவனம் திரும்பி உள்ளது. அதன்படி சென்னையில் உள்ள 81 பாய்ஸ் கிளப்புகளையும் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார். பாய்ஸ் கிளப் மூலம் மாணவர்களுக்கு டியூசன், ஆங்கில பேச்சு பயிற்சி ஆகியவற்றையும் கற்றுத்தர திட்டமிட்டிருப்பதாக திரிபாதி தெரித்தார்.

கருத்துகள் இல்லை: