ஞாயிறு, 24 ஜூலை, 2011

ஸ்டாலினின் அவசரம்.கலைஞரும் அன்பழகனும் விலகுவதாக எச்சரிக்கை அழகிரியும் போர்க்கொடி


கோவை: மு.க.ஸ்டாலினை திமுக செயல் தலைவராக்கினால், கடும் விளைவுகள் ஏற்படும் என மத்திய அமைச்சர் அழகிரி எச்சரித்ததையடுத்து தானே பதவி விலகத் தயாராக இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

கோவை சிங்காநல்லூரில் நேற்று நடந்த செயற்குழுக் கூட்டத்தில், ஸ்டாலினை செயல் தலைவராக்க வேண்டும் என மூத்த தலைவர்களான பொன்முடி, வேலு ஆகியோர் பேசினர். இதையடுத்து எழுந்த அழகிரியின் ஆதரவாளர்கள், அந்தப் பதவியை அஞ்சா நெஞ்சன் அழகிரிக்கே தர வேண்டும் என குரல் எழுப்பினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது இடைமறித்த மத்திய இணையமைச்சர் பழனிமாணிக்கம், நாம் கட்சியின் வளர்ச்சி பற்றி பேச வந்த இடத்தில், அடுத்த செயல் தலைவர் யார் என்று பேச வேண்டிய அவசியம் என்று கேள்வி எழுப்பினார்.

அதே போல மூத்த தலைவரான துரைமுருகன் எழுந்து, கருணாநிதி தான் இப்போது நமது தலைவர். இதனால் அடுத்த தலைவர் யார் என்பது குறித்து பேசவே வேண்டியதில்லை என்றார்.

அடுத்ததாக பேராசிரியர் அன்பழகன் எழுந்து, கலைஞர் தலைவராக இருக்கும்போது எங்களால் உங்களை (ஸ்டாலினை) தலைவராக ஏற்க முடியாது என்றார் திட்டவட்டமாக.

ஆனாலும் ஸ்டாலின், அழகிரி ஆதரவாளர்கள் தொடர்ந்து தங்களது கருத்தை முன் வைத்துப் பேசவே, எரிச்சலான திமுக தலைவர் கருணாநிதி, கட்சியின் எதிர்காலத்துக்காக நானே பதவி விலகுகிறேன் என்று அறிவிக்கவே, அனைத்துத் தரப்பினரும் அமைதியாகியுள்ளனர்.

கலைஞர் பதவி விலகுவதாக இருந்தால் நானும் எனது பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகுகிறேன் என்று அன்பழகனும் கூறவே, கூட்டத்தில் மயான அமைதி நிலவியது.

இதைத் தொடர்ந்து கூட்டத்திலிருந்து கருணாநிதி வெளியேறியுள்ளார்.

தலைவர் பதவியைப் பிடிக்க ஸ்டாலின் மிகவும் அவசரப்படுவதாக கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் கருதுவதாகத் தெரிகிறது. அதே நேரத்தில் ஸ்டாலினை செயல் தலைவராக்கினால், அதை ஏற்க மாட்டோம் என கருணாநிதியிடம் அழகிரியும் அவரது ஆதரவாளர்களும் திட்டவட்டமாகக் கூறிவிட்டதாகவும் தெரிகிறது.

கருத்துகள் இல்லை: