![]() |
Rebel Ravi : பிஹார் தோல்வி பிடிக்குள் சிக்கிய காங். - என்ன செய்யப் போகிறது திமுக?
பிஹார் தேர்தலில் தங்களுக்கு அதிக இடங்களைக் கேட்டு ஆர்ஜேடி-யுடன் ஆரம்பத்திலிருந்தே மல்லுக்கு நின்றது காங்கிரஸ். கடைசியில், 61 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டாலும், 7 தொகுதிகளில் ஆர்ஜேடி-யுடனேயே நட்புடன்(!) மோதியது காங்கிரஸ். கடைசியில், காங்கிரஸுக்கு கைவசமானது என்னவோ 6 தொகுதிகள் தான்.
தமிழகத்திலும் 1996 முதல் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் போட்டியிட்ட போதெல்லாம் அபாரமான தோல்விகளையே சத்தித்திருக்கிறது
1996 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 64 இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால், ஒரு தொகுதியில் கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை.
இதேபோல், 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக-வுக்கு அழுத்தம் கொடுத்து 63 இடங்களை பெற்ற காங்கிரஸ், ஐந்து இடங்களில் மட்டுமே வென்றது. ஓர் இடத்தில் காப்புத் தொகையையும் காவுகொடுத்தது.
இதேபோல், 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு 41 இடங்களை தந்தது திமுக. அதில் எட்டில் மட்டுமே காங்கிரஸ் வென்றது.
ஆனால், கடந்த 2021 தேர்தலில் சுதாரித்துக் கொண்டது திமுக. அப்போது காங்கிரஸ் வஞ்சகமின்றி 60 தொகுதிகளைக் கேட்டது. ஆனால், “அதிக தொகுதிகளை கேட்டு வாங்கி தோற்றுப் போய் எதிர்க் கூட்டணியை ஜெயிக்க வைக்கிறீர்கள்” என்று சொல்லி காங்கிரஸுக்கு 25 இடங்களை மட்டுமே தந்தது திமுக.
இதில் 18 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றது. ஆக, குறைவான தொகுதிகளைக் கொடுத்தால் நிறைவாக ஜெயிக்கிறது காங்கிரஸ் என்பது கடந்த கால வரலாறாக இருக்கிறது.
பிஹாரின் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதால் தமிழக காங்கிரஸார் எதுவும் பேசமுடியாத நிலையில் இருக்கிறார்கள்
மத்தியில் திமுக-வின் தயவு காங்கிரஸுக்கு கட்டாயம் தேவை. அதனால், தமிழகத்தில் திமுக என்ன சொல்கிறதோ அதைக் கேட்டுக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு அந்தக் கட்சி ஆளாகி இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் சொல்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக