மின்னம்பலம் - Kavi : முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. கே. சுதர்சனம் கொலை வழக்கில், இன்று (நவம்பர் 21) சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
18 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கில், பவாரியா கொள்ளையர்களான ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகிய மூவரும் குற்றவாளிகள் என நீதிபதி ஆப்ரஹாம் லிங்கன் அறிவித்தார்.
குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வரும் நவம்பர் 24ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
நள்ளிரவில் நடந்த கொலை
2005ஜனவரி 9 ஆம் தேதி அதிகாலை 2.45 மணியளவில், கும்மிடிப்பூண்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் இருந்த கே. சுதர்சனம், பெரியபாளையம் அருகே தானாக்குளத்தில் உள்ள தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது வீட்டுக்குள் புகுந்த கொள்ளை கும்பல், சுதர்சனத்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது. மேலும், அவரது மனைவி மற்றும் மகன்களைத் தாக்கிவிட்டு, 62 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு தப்பியது.
தனது கட்சி எம்.எல்.ஏ கொல்லப்பட்டதை தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போதைய ஐஜி ஜாங்கிட் தலைமையில் தனிப்படை அமைத்து, குற்றவாளிகளை சுட்டுப்பிடிக்கவும் உத்தரவு பிறப்பித்தார்.
இக்கொலையில் ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த பவாரியா கொள்ளையர்கள் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து ஐ.ஜி. ஜாங்கிட் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படைகள், கொள்ளையர்களைக் கைது செய்வதற்காக ராஜஸ்தான் வரை சென்றது.
இந்த நிஜகதைதான்’தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற பெயரில் கார்த்திக் நடித்த படம் திரைக்கு வந்து வெற்றியும் பெற்றது.
வழக்கும் கைதும்
இந்த வழக்கில் தனிப்படை போலீசார் 32 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, ஹரியானாவைச் சேர்ந்த ஓம் பிரகாஷ், ஜெகதீஷ் உள்ளிட்ட 9 பேரைக் கைது செய்தனர்.
பின்னர், ஜாமீன் பெற்ற மூன்று பெண்கள் தலைமறைவாகினர். கைது செய்யப்பட்டவர்களில் ஓம் பிரகாஷ் பவாரியா உட்பட இருவர் சிறையிலேயே உயிரிழந்தனர்.
ஜெகதீஷ், ராகேஷ், அசோக் மற்றும் ஜெயில்தார் சிங் ஆகிய நான்கு பேருக்கு எதிரான வழக்கை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆப்ரஹாம் லிங்கன் விசாரித்து வந்தார்.
வழக்கில் 86 பேர் காவல் துறை சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று (நவம்பர் 21) தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகிய மூவரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். இவர்களுக்கான தண்டனை விவரம் வரும் 24ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
அதுபோன்று ஜெயில்தார் சிங் குறித்து வரும் 24 ஆம் தேதி உத்தரவிடப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக