சனி, 13 செப்டம்பர், 2025

அமெரிக்க Charlie Kirk கொலை! பாசிசம் அச்சம் தர கூடியது

May be an image of 1 person and text that says 'CHARLIE KIRK TODAY'

 சுமதி விஜயகுமார் :  Charlie Kirk . அமெரிக்காவில் மிக பிரபலம். 
இந்தியாவில் துருவ் ரதீ எப்படி உபி தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினரோ அப்படி, 2024 அமெரிக்கா தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். 
துருவ் பாசிசத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர். 
Kirk பாசிசத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தவர். 
ட்ரும்பிற்கு நெருங்கியவர். 
கடந்த புதன் அன்று ஒரு பல்கலைக்கழகத்தில் உரையாற்றிவிட்டு மாணவர்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில், கழுத்தில் சுடப்பட்டு இறந்தார்.



 31 வயதே ஆனவர். திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளார்கள். 
அந்த கூட்டத்தில் அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி அமெரிக்காவின் துப்பாக்கி கலாச்சாரத்தை பற்றியது. Kirk அதற்கு ஆதரவானவர். 
அவரின் மரணம் அவர் ஆதரித்த ஒரு சட்டதினாலேயே நிகழ்ந்திருப்பது ஒரு நகைமுரண்.

Kirk ஒரு தீவிர வலதுசாரி மட்டுமல்லாது, 
பாசிசத்தை ஆதரித்தவர் என்பதால் அவரின் படுகொலையை பல இடதுசாரிகளும் சிலாகித்து வருகிறார்கள். 

2020 தேர்தலில் ட்ரும்பின் தோல்வியை அடுத்து அமெரிக்காவின் கேப்பிடுல், வெள்ளை பாசிசவாதிகளால் (White Supremacists) தாக்கப்பட்டது. 
அவர்கள் அனைவரும் ட்ரும்பின் ஆதரவாளர்கள். 
அதில் முக்கிய பங்காற்றியது Proud boys என்ற இயக்கம். 
அதற்கு Enrique Tarrio தான் தலைமை வகித்தவர். 
கைது செய்யப்பட்டு, டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் விடுவிக்கப்பட்டார். (மோடி ஆட்சியை போலவே)

இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில், புதிய குடியேறிகளை தடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்து போராட்டம் நடந்தது. 
அவர்களின் கோரிக்கை ஒன்று தான் ' புதிய குடியேறிகளை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும். 
அவர்களால் தான் இங்கிருப்பவர்களுக்கு வீடு, நல்ல மருத்தவம் கிடைப்பதில்லை'. 

இதில் பல்வேறு மக்கள் கலந்து கொண்டாலும், இந்த போராட்டத்தை முன்னெடுத்து ஒன்றிணைத்து NSN (National Socialist Network ) என்ற அமைப்பு. 
neo nazi என்று சொல்லக்கூடிய ஹிட்லர் ஆதரவாளர்கள். ஒட்டுமொத்தமாக குடியேறிகள் என்று அவர்கள் குறிப்பிட்டாலும், அவர்களின் குறி, ஆசிய மக்கள். குறிப்பாக இந்தியர்கள். அதன் தலைவன் Thomas Sewell கைது செய்யப்பட்டு பிணை மறுக்கப்பட்டிருக்கிறது. 

போராட்டத்தை நடத்தியதற்காக அல்ல. ஆஸ்திரேலிய பூர்வகுடி மக்கள் புனிதமாக கருத கூடிய இடுகாட்டை சேதப்படுத்தியதற்காக. புதிய குடியேற்றத்தை தடுக்கவே போராட்டம் என்று சொல்லிவிட்டு பூர்வகுடிகளின் புனித தளத்தை தாக்கியதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம் இந்த இயக்கத்தின் நோக்கத்தை.

இந்தியாவின் rss இயக்கம் போலவே, nsn இயக்கமும் மிக ரகசியமானது. 
அந்த இயக்கத்தில் யார் யார் உறுப்பினர்கள், அவர்களின் உண்மையான பெயர் என்ன என்பது கூட யாருக்கும் தெரியாது. 

புனை பெயர்களை தான் உபயோகித்து கொள்கிறார்கள். 
ஹிட்லரின் நாஜி salute தான் இவர்களின் salute . அதில் உறுப்பினர்களாக இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் வேலையற்றவர்கள், சிறை தண்டனை பெற்றவர்கள். சிறைக்கு செல்லும் போதெல்லாம் தங்கள் இயக்கத்திற்கு சரியாக இருப்பார்கள் என்று கருத்துபவர்களை மூளை சலவை செய்து இயக்கத்திற்கு கொண்டு வருவார்கள்.

 உடல் பயிற்சி கட்டாயம். இந்த இயக்கம் ஆஸ்திரேலியாவில் மிக தீவிரமாக வளர்ந்து வருகிறது.
White Supremacists ஆஸ்திரேலிய மற்றும் அமெரிக்காவில் மட்டுமில்லை. வெள்ளையர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் பரவி வருகிறது. 

சில மாதங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் இப்படி ஒரு போராட்டம் வெடித்தது. 
வேறு வேறு பெயர்களில் இயங்கினாலும், உலகம் முழுவதிலும் உள்ள அமைப்புகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பில் இருக்கின்றன. 
அதற்கு முக்கிய தளமாக இருப்பது இணையதளம். 
இந்த இயக்கங்களில் சேர தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் vulnerable என்று சொல்ல கூடிய, ADHD, Autism இருக்கும் இளைஞர்கள், போருக்கு சென்று மன உளைச்சலில் இருக்கும் ராணுவத்தினர், முன்பே குறிப்பிட்டது போல சிறை தண்டனை அனுபவித்தார்கள். 

ஏற்கனவே ஏதோ ஒரு விரக்தியில் இருப்பவர்கள், வேலை எதுவும் இல்லாமல், நண்பர்கள் யாரும் இல்லாமல் அதிக நேரம் தனிமையில், இணைய தளத்தில் நேரம் செலவழிபவர்களே இதற்கு பலி ஆகிறார்கள்.

இது போன்ற மூளை சலவை செய்யப்பட்டு, குழந்தைகள், கறுப்பின மக்கள் என்று குறிவைத்து mass shooting பல அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. 2019ல் நியூஸிலாந்தில் ஒரு மசூதியில் இது போன்ற mass ஷூட்டிங்கில் 51 பேர் கொல்லப்பட்டனர். 
Brenton Tarrant என்பவன் நிகழ்த்திய படுகொலைகள்.
 இவனை தான் முன்மாதிரியாக கொண்டிருக்கிறார்கள் nsn உறுப்பினர்கள். இது போன்ற நிகழ்வுகள் இனி அதிகரிக்கும் வாய்ப்பே அதிகம் உள்ளது.
இஸ்லாமியர்கள் மேல் வெறுப்பு பேச்சை உமிழும் மோடியை போல, குடியேறிகளை பற்றிய ட்ரும்பின் வெறுப்பு பேச்சு உலகம் அறிந்ததே. அதையே அடிப்படையாக கொண்டு ஆஸ்திரேலியாவின் லிபெரல் கட்சி தலைவர் Peter Dutton கடந்த தேர்தலில் போட்டியிட்டு பிரச்சாரம் செய்ய, தன் சொந்த தொகுதியிலேயே தோற்றார். 

இந்த போராட்டத்தை எதிர்த்து பல ஆஸ்திரேலிய வெள்ளை இன மக்கள் குரல் கொடுத்துள்ளார்கள். போராட்டம் நடந்து ஒரு சில நாட்களுக்கு வெளியில் செல்லும் பொழுதெல்லாம், ஏதோ ஒரு வெள்ளைகாரர் என்னை பார்த்தால் கூட அவர் White Supremacist ஆதரவாளராக இருக்க வாய்ப்பிருக்குமா என்ற எண்ணத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. 

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் இஸ்லாமியர்கள் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று உணர்த்த அந்த சில நாட்களே எனக்கு போதுமானதாக இருந்தது. 
ஆஸ்திரேலவில் வசிக்கும் சங்கிகள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை இனிமேல் தான் அறிந்து கொள்ள வேண்டும்.
வெள்ளை பாசிசம் மிக வேகமாக பரவிக்கொண்டிருக்க , இஸ்லாமியர்களோ, இந்தியர்களோ , கறுப்பினத்தவர்களோ, பூர்வகுடிகளோ . எங்கெல்லாம் எப்போதெல்லாம் ஒரு இனம் ஒடுக்குமுறைக்கு உள்ளாகிறதோ, அப்போதெல்லாம் அதற்கான எதிர்க்குரல் ஒலித்து கொண்டே தான் இருக்கிறது. 

இணையதளத்தில் பல ஆஸ்திரேலியர்களும் அந்த போராட்டத்தை கண்டித்து பதிவுகள் ரீல்கள் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். 
லண்டனில் போராட்டம் வெடித்த பொழுது, அதை கண்டித்து எதிர் போராட்டம் நடத்தியவர்கள் வெள்ளைகார்கள் தான். இந்தியாவில் இஸ்லாமியர்கள் ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கும் ஹிந்துக்களை போல.
சென்ற மாதம், பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவாகவும், இஸ்ரேலின் இன படுகொலையை எதிர்த்தும், ஆஸ்திரேலியாவின் பிரசித்தி பெற்ற harbour bridge ல் எதிர்பார்த்ததை விட பல்லாயிரம் மக்கள் ஒன்று கூடி பேரணி நடத்தினார்கள். 

அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தினம் தினம் போராட்டம் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. 
அதில் பங்கு பெறுபவர்கள், தலைமை தாங்குபவர்கள் பெரும் பாலும் பாலஸ்தீனியர்கள் அல்ல.
ஆயிரம் வெறுப்பாடுகள் இருந்தாலும், விஷத்தை பரப்பும் பாசிசத்திற்கு எதிரான மக்கள் உலகெங்கிலும் பறந்து விரிந்து தான் இருக்கிறார்கள்.

பாசிசம் அச்சம் தர கூடியது தான். அதை எதிர்த்து ஒன்றிணையும் கைகள் பெரும் நம்பிக்கையை கொடுக்கிறது.

கருத்துகள் இல்லை: